ஹிஜாப் : தலையில் சுமக்கும் திண்டாமைத் திரை!


அடிமைப் பெண்கள் மட்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை அனுமதிக்கவும், சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டும் என்பதற்காக அடிமைப் பெண்களையும், சுதந்திரமான முஸ்லிம் பெண்களையும் கேடுகெட்ட ஆண் காமவெறியர்களிடம் வேறுபடுத்திக் காட்டுவதற்காக அன்றைய ஆணாதிக்க காம வெறியர்களால் உருவாக்கப்பட்ட சமிக்ஞையே தீண்டாமைத் திரையான ஹிஜாப் ஆகும். இந்த உண்மையை தெளிவாக அறிந்து கொண்டுதான் எல்லா முஸ்லிம் பெண்களும் ஹிஜாப் அணிகின்றார்கள் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம் என்பதை ஆரம்பத்திலேயே அழுத்தமாக பதிவு செய்து கொள்கின்றேன். ஹிஜாப் எனும் தீண்டாமைத் திரை பற்றிய அறிவை அனைவருக்கும் வழங்கி பாகுபாடின்றி அனைவரையும் தீண்டாமைத் திரையை புறக்கணிக்க அறிவூட்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். நீதி நேர்மையாக சிந்திக்கக் கூடிய மனித நேயமுள்ளவர்கள் ஆக்கத்தை முழுமையாக வாசிக்கும் பொழுது தங்களது சிந்தனையில், புரிதலில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை இருப்பதை நிச்சயம் உணர்வார்கள்.

கடந்த நூற்றாண்டு வரை மனிதர்கள் இரண்டு வகையாக பிரிக்கப் பட்டிருந்தனர். சுதந்திரமானவர்கள், அடிமைகள் என்பனவே அந்த இரண்டு பிரிவினர் ஆவர். அடிமைகள் என்ற மனிதர்களை ஆடு மாடுகளைப் போன்று விலை கொடுத்து வாங்கலாம், விற்கலாம். மனித நேயமற்ற இந்த கொடுமையான நடைமுறையை இஸ்லாம் இன்றுவரை ஆதரிக்கின்றது. மது, வட்டி, முஹம்மது நபியின் மனைவியர்களை அவர் இறந்த பின்னர் திருமணம் செய்வது போன்றவற்றையெல்லாம் தடை செய்த குர்ஆனில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் படியாக ஒரு வசனம் கூட இல்லை.

( இதனோடு தொடர்புடைய ஹிஜாபின் வரலாறு : இருட்டில் கக்கா போன கதை எனும் ஆக்கத்தை வாசிக்க :  http://www.allahvin.com/2022/02/Hijab.html )

 
அடிமை முறை நடைமுறையிலிருந்த காலகட்டத்தில் அடிமைப் பெண்களாக இருப்பவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள், உரிமையாளர்களுக்கு அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளலாம். அவர்களுக்கு திருமணமாகி கணவன் இருந்தாலும் அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கிறது. "அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள ஏனைய (சுதந்திரமான) பெண்கள் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது" (குர் ஆன் 4:24). மேலும் அடிமைப் பெண்கள் அவர்களின் எஜமானர்கள் அல்லாத பிறராலும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப் பட்டார்கள். அன்றைய அடிமைப் பெண்களுக்கும் சுதந்திரமான இஸ்லாமிய பெண்களுக்கும் உடை அளவில் பெரும் வித்தியாசங்கள் இருந்திருக்கவில்லை. யார் அடிமைப் பெண், யார் சுதந்திரமான பெண் என்பதை பிரித்து அறிவது சற்று கடினமாகத்தான் இருந்திருக்கின்றது.

 

மின்சாரமும் நவீன கழிப்பிடங்களும் இல்லாத அன்றைய காலகட்டத்தில் இரவான பின்னர் தான் பெண்கள் வெட்ட வெளிக்கு இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்வார்கள். இருட்டிய பின் இவர்கள் வெளியில் வருவதால் சுதந்திரமான பெண் யார், அடிமைப் பெண் யார் என்பதை அறிவது இன்னும் கடினமாக போய்விடுகிறது. அடிமைப்பெண் என்று நினைத்து சுதந்திரமான பெண்களை ஆண்கள் பாலியல் சீண்டல் செய்வதும் வாடிக்கையாக நிகழ்வதுண்டு. அடிமைப் பெண்களுக்கு பாலியல் சீண்டல் நிகழலாம், ஆனால், சுதந்திரமான முஸ்லிம் பெண்களுக்கு அது நிகழக்கூடாது என்று முஹம்மது நபியின் சகாவான உமர் சிந்தித்தார்.

 

சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அடிமைகளாகக் கருதப்பட்டு பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப் படாமல் இருப்பதற்காகவும், அடிமைப் பெண்கள் இலகுவாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காகவும், சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட்டு உடல் முழுவதையும் மறைக்கச் செய்ய வேண்டும் என்று உமர் ஒரு திட்டம் போட்டு அதனை முஹம்மது நபியிடம் சொல்லியும் கூட முஹம்மது நபி அதனை பெரிதாக பொருட்படுத்தி இருக்கவில்லை. எங்கே எப்படி அடித்தால் முஹம்மது நபிக்கு உறைக்கும் என்பதை நன்கு உணர்ந்த உமர் ஒரு தந்திரமான காரியத்தை செய்தார்.

 

அனைவரையும் போல முஹம்மதின் மனைவிமார்களும் இரவான பின் வெட்ட வெளியில் மலம் கழிக்க செல்வதுதான் வழக்கம். அப்படி ஒரு நாள் முஹம்மது நபியின் மனைவிமார்களில் ஒருவரான சவ்தா என்பவர் மலம் கழிக்க வெட்ட வெளிக்கு சென்றார். சவ்தா மலம் கழிக்கையில், பெண்கள் மலம் கழிக்கும் இடத்திற்கு சென்ற உமர் “சவ்தா, சவ்தா, நான் உங்களை அடையாளம் கண்டு விட்டேன்” என்று சத்தமிடுகின்றார். தான் சவ்தாவைப் பார்த்த விடயத்தை சவ்தாவே சென்று முஹம்மதிடம் சொல்ல வேண்டும் என்பதே உமரின் தந்திரமான திட்டமாக இருந்தது, அதனால் தான் உமர் சத்தம் போட்டு அதனை சவ்தாவிடமே சொல்லி இருந்தார்.

 

சவ்தா பதறியவாறு ஓடிவிட்டார். உமர் நேராக முஹம்மது நபியுடம் வந்து நடந்த விஷயத்தை கூறுகிறார். அப்போதுதான் முஹம்மது நபிக்கு உறைத்திருக்கிறது. இனியும் பொறுக்கலாகாது என்று புரிந்து கொண்ட முஹம்மது நபி ஒரு வசனத்தை அந்த சந்தர்ப்பத்தில் இறங்குகிறார்.

மேலே சொல்லப்பட்ட சம்பவத்தை குர்ஆன், ஹதீஸில் இருந்து அந்தக் குறித்த வசனத்துடன் சேர்த்துப் பார்ப்போம்.

 

முஹம்மது நபியின் மனைவிகள் இரவு நேரங்களில் மலம் கழிப்பதற்காக (மதீனாவில் பக்கி'க்கு அருகில்) அல்-மனாசி என்ற பரந்த திறந்த வெளிக்கு செல்வார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் "உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் பொது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதனை செயற்படுத்தவில்லை. ஒரு நாள் இரவு முஹம்மது நபியின் மனைவி சவ்தா பின்த் ஸம்ஆ அவர்கள் இஷா நேரத்தில் (கழிப்பிடம் நாடி) வீட்டை விட்டு வெளியே சென்றார்கள்.  அவர் ஒரு உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவரைப் பார்த்து விட்ட உமர் (ரலி), "சவ்தாவே, உங்களை நான் யார் என்று அடையாளம் கண்டுகொண்டேன்" என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உமர் (ரலி) உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போட்டு மறைப்பது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)(சஹீஹுல் புகாரி : 146)

"நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்." (குர்ஆன் 33:59)

 

சுதந்திரமான முஸ்லிம் பெண்களையும், அடிமைப் பெண்களையும் வேறுபடுத்தி இலகுவாக அடையாளம் காண வேண்டும் என்கின்ற உமரின் தேவைக்கு ஏற்பவே முஹம்மது நபி குர்ஆன் வசனத்தை இறக்கி இருக்கின்றார்.

 

மேலும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆனின் 33:59 ஆவது வசனத்தில் “அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும்” என்று குறிப்பிடப் பட்டிருப்பதானது, ஹிஜாப் அணிந்தவர்கள் சுதந்திரமான முஸ்லிம் பெண்கள், அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யாதீர்கள், அடிமைகள் ஹிஜாப் அணியாமல் இருப்பார்கள் ஆகவே அவர்களை இலகுவாக அடையாளம் கண்டு பாலியல் சீண்டல் செய்யுங்கள் என்று கூறும் அனுமதி ஆகும். இது அடிமைப் பெண்களை பாலியல் சீண்டலுக்கு இரையாக்கும் படியான கொடுமையான அடையாள படுத்தலை உருவாக்கும் பாகுபாடு, தீண்டாமை ஆகும்.

 

மேலே சொல்லப்பட்ட விடயங்களை மேலும் உறுதி செய்வதாக தொடர்ந்து வரும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது

 

قَالَ رَأَى عُمَرُ أَمَةً لَنَا مُتَقَنِّعَةً فَضَرَبَهَا وَقَالَ لَا تَشَبَّهِي بِالْحَرَائِرِ

அனஸ் (ரலி) அறிவித்தார் : தங்கள் உடலை மறைத்திருந்த அடிமைப் பெண்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அந்த அடிமைப் பெண்களுக்கு கசையடி கொடுத்துவிட்டு “சுதந்திரமான பெண்களுக்கு ஒப்பாக ஆடை அணியக் கூடாது” என்று எச்சரித்தார்.
(ஆதாரம் : முஸன்னஃப் இப்னு அபிஷைபாஹ் 6/236)‘ஹிஜாப் எங்களது தெரிவு
, தலைக்குத்தான் ஹிஜாப் போட்டு இருக்கின்றோம், மூளைக்கு ஹிஜாப் போடவில்லை’ என்றெல்லாம் இஸ்லாமியவாதிகள் முஸ்லிம் பெண்களை பேச வைத்தாலும் கூட, ஹிஜாபின் காமக் கறை படிந்த தீண்டாமை வரலாறானது இனிப்புப் பூசப்பட்ட போலி வார்த்தைகளால் மறைத்துவிட்டு கடந்து போய்விடக் கூடிய ஒன்றல்ல. சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் போன்று ஆடை அணிந்ததற்காக அடிமைப் பெண்களுக்கு கசையடித் தண்டனை வழங்கப்பட்டு, சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் போன்று ஹிஜாப் அணியத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய இஸ்லாமியவாதிகள் ஹிஜாப் அணியாத பெண்களை ‘விபXXXகள், ‘வேXXகள்’ என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் அர்ச்சனை செய்வதை சமுக ஊடகங்களில் தாராளமாகவே காண முடியும். அதே போன்று ஷம்ஸுத்தீன் காஸிமி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் அதனை நேரடியாகவே தமது பிரச்சார உரைகளில் சொல்வதையும் கண்டு இருக்கின்றாம். இவையெல்லாமே ‘ஹிஜாப் அணியாத பெண்கள் அடிமைகள், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முடியும்’ என்று பச்சைக் கொடி காட்டி பெண்ணுடலை காமப் பண்டமாகப் பார்த்த அன்றைய பிற்போக்குச் சமூகம் உருவாக்கிய ஆணாதிக்க காமவெறிச் சட்டங்களைப் பின்பற்றுவதன் நீட்சியாகவே அமைந்துள்ளன.  

 

அன்றைய ஆணாதிக்க காமவெறிச் சமூகம் பெண்களில் ஒரு பிரிவினரை அடிமைகள் என்று பிரித்து, ஆடையில் தீண்டாமையை திணித்து ஹிஜாப் என்பதை பிரித்தறியும் சின்னமாக அமைத்து அவர்களை எப்படி நடத்தியது என்பதைக் காட்டக் கூடிய பல புகைப்படங்கள், ஓவியங்கள் இணையத்தில் உள்ளன, எனினும் பொருத்தமின்மை காரணமாக அவற்றை எல்லாம் இங்கே இணைக்கவில்லை. தேவை என்றால் நீங்களே கூகிள் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

 

ஹிஜாபின் பின்னால் மறைந்துள்ள பாலியல் சுரண்டல், ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல், ஆணாதிக்க வெறி, அடிமைப் பெண்களுக்கு ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்பட்ட தீண்டாமை ஆகியவற்றப் புரிந்துகொள்ள, இஸ்லாத்தில் அடிமைப் பெண்கள் எப்படி நடத்தப் பட்டார்கள் என்பதற்கான ஒரு சில அறிவிப்புக்களை மட்டும், அவை வாசிப்பதற்கு அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல என்கின்ற முன்னெச்சரிக்கையுடன் வழங்குகின்றேன்.

 

இப்னு உமர் (ரலி) ஒரு அடிமைப் பெண்ணை வாங்க விரும்பும் போதெல்லாம், அவளுடைய கால்களை ஆராய்ந்து, அவளது மார்பகங்களுக்கு இடையில் மற்றும் அவளது பிட்டங்களுக்கு இடையில் தனது கைகளை வைத்து பரிசோதிப்பார். (ஸுனன் அல் குப்ரா 9985)

இப்னு உமர் (ரலி) அடிமைப் பெண்ணின் மார்பகங்களில் கையை வைத்து அவற்றைக் குலுக்கினார் என்று முஜாஹித் அறிவிகின்றார். (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், பாகம் 7, பக்கம்
286. ஹதீஸ் : 13204)


அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார் "உமர் (ரலி) அவர்களின் அடிமைகள் அவர்களின் தலைமுடி மற்றும் மார்பகங்களை திறந்தவர்களாக, எங்களுக்கு (உணவு, பானம்) பரிமாறினார்கள். (முஸன்னஃப் இப்னு அபிஷைபாஹ் 2/227)


இவை போன்ற இன்னும் பல கேவலமான அறிவிப்புகள் இஸ்லாத்தில் இருந்தாலும் அவற்றை இங்கே பதிவது பொருத்தமில்லை என்பதால் தவிர்க்கின்றேன்.


அடிமைகள் என்பது முடிவடைந்துவிட்ட ஒரு வரலாறு அல்ல, நாளை ஜிஹாத் நடந்தால் அடிமை முறை மீண்டும் வரும் என்பதை முஜாஹித் இப்னு ரஸீன் உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் கூறி இருக்கின்றார்கள். ISIS அமைப்பினர் இஸ்லாமிய தேசம் அமைத்த பொழுது யஸீதியப் பெண்களை அடிமைகளாக பிடித்தது, பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியமை மற்றும் விற்பனை செய்தமை எல்லாமே இந்த நூற்றாண்டில் தான் நடந்தன, அவை முறையாக ஆவணப் படுத்தப் பட்டும் உள்ளன.


தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துகள் என்று மக்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை இழிவு படுத்தி அழைத்த சாதியப் பெயர்களை இன்று நாம் யாரும் பயன்படுத்துவதில்லை
, அதே போன்று கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளை எஜமானர்கள் கடந்த காலங்களில் அவர்களை அழைக்கப் பயன்படுத்திய N word ஐ இன்று நாம் யாரும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் நாம் அனைவரும் ஏற்றத் தாழ்வை, சாதிய பாகுபாட்டை, அடிமைத் தனத்தை, தீண்டாமையை எதிர்க்கின்றோம், அனால் உண்மை தெரிந்த பின்னரும் ஹிஜாபை தலையிலே சுமக்கின்றோம், புகழ்கின்றோம், நியாயப் படுத்துகின்றோம், ஊக்கப்படுத்துகின்றோம் என்றால் அது மோசமான நயவஞ்சக நிலைப்பாடாக இருக்கும்.சுயமாக சிந்திக்கக் கூடிய
, மனித நேயமுள்ள, அனைவரையும் சமனாக மதிக்கக் கூடிய முஸ்லிம் பெண்களே, இதன் பிறகும் உங்களால் இந்த தீண்டாமையை, சக பெண் உடல் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கான பச்சைக் கொடியை, சமிக்ஞையை அனுமதிக்க, நியாயாப் படுத்த, எத்தகைய குற்ற உணர்வும் இல்லாமல் அதனைத் தலையில் சுமக்க முடியுமா? நீங்கள் ஒரு பெண்ணாக, அந்த அடிமைப் பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள், அந்தப் பெண்களின் நிலையில் உங்களை வைத்து உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாமல் இருக்கலாம், அவ்வளவு கேவலமாக அடிமைப் பெண்கள் நடத்தப் பட்டு இருக்கின்றார்கள், அந்தக் கொடுமைகளுக்காக சமிக்ஞை கொடுக்கவே ஹிஜாப் பயன் படுத்தப் பட்டுள்ளது என்கின்ற உண்மை உங்களை உறுத்தவில்லையா?


முஸ்லிம் பெண்களே, மனிதர்களை அடிமைகளாக, தாழ்த்தப்பட்டவர்களாக கருதி பாலியல் துன்புறுத்தலும், சித்திரவதையும் செய்த பிற்போக்கு சமூகத்தின் ஆணாதிக்க காம வெறியர்கள் உருவாக்கிய தீண்டாமைத் திரையை நீங்கள் உங்கள் தலையில் சுமந்து திரிவது அவமானம் அல்லவா?. 'அனைத்து மனிதர்களும் சமனானவர்கள், எந்தப் பெண்ணையும் பாலியல் துன்புறுத்தல் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை, பெண்களில் ஒரு பகுதியினரைக் குறி வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கான சமிக்ஞையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட தீண்டாமைத் திரையை நிராகரிக்கின்றோம்' என்பதை உரத்துச் சொல்லுங்கள். ஹிஜாப் எனும் தீண்டாமைத் திரையை தூக்கி எறியுங்கள், அனைவரும் சுந்தந்திரமானவர்கள், சமனானவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்.


இதுவரை பகிரங்கமாகப் பேசப்படாத இந்த உண்மைகளை அறிந்த பின்னர் ஹிஜாப்
, ஹபாயா, நிகாப், ஜில்பாப் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் நியாயப் படுத்த முடியாது என்கின்ற தெளிவு பிறக்கின்றது, இதுவரை ஹிஜாப், ஹபாயா போன்றவை தொடர்பில் இருந்த நிலைப்பாடுகள் (எனக்கும் கூட) மாற்றமடைகின்றன்றன. நேர்மையாக சிந்திக்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு உண்மைகள் புரிந்தாலும் இதுவரை காலமும் ஹிஜாபை, ஹபாயாவை கட்டாயமாகவே அணிந்து பழக்கப் பட்டதால் எல்லோராலும் அவற்றை உடனே தூக்கிக் குப்பையில் எறிந்துவிட முடியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களிடம் ஏற்படும் நேர்மையான சிந்தனை மாற்றம் அவர்களை சமத்துவத்தை நோக்கி, தீண்டாமைத் திரைப் புறக்கணிப்பை நோக்கிக் கொண்டு செலுத்தும், விரைவில் மாற்றங்கள் அவர்களிடம் ஏற்படும். ஆனால் சிந்திக்கவே மாட்டோம், மதத்தைக் கண்மூடிப் பின்பற்றியே ஆகுவோம் என்று பிடிவாதமாக இருப்பவர்களிடமும், கடுமையான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் அடிமைகள் போன்று இருப்பவர்களிடமும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாமல் போகலாம்.


சாதிய வசைமொழிகள்
, N word, அடிமைத்தனம், தீண்டாமை போன்று ஹிஜாபும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றே. அன்பு, சமத்துவம், புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை தளைத்தோங்க காதல் தின வாழ்த்துக்கள்.


-றிஷ்வின் இஸ்மத்
 1
4.02.2022