ஹிஜாப் இன்று பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில்
ஹிஜாபின் தீண்டாமை வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். (ஹிஜாப் எனும் தீண்டாமைத் திரை எனும் ஆக்கத்தை வாசிக்க : http://www.allahvin.com/2022/02/Untouchability.html )
"சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால்
முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்” (குர்ஆன் 9:5)
"நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், அவர்களுடைய
கழுத்துகளை வெட்டுங்கள்" (குர்ஆன் 47:4)
இஸ்லாம் முன்வைக்கும் இதுபோன்ற வன்முறை வசனங்களை
விமர்சித்தால், இஸ்லாத்தில் வன்முறையும், பயங்கரவாதமும்
இருக்கின்றதே என்று வாதிட்டால், உடனே “அது அந்த காலத்தில், அந்த
சந்தர்ப்பத்தில், அந்த சூழலில் கூறப்பட்டது, அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது” என்று
உருட்டோ உருட்டு என்று உருட்ட ஆரம்பித்து விடுவார்கள் தக்கியாவாதிகள். மேலே
குறிப்பிட்ட இந்த வசனங்கள் மட்டுமல்ல குர்ஆனில் இருக்கக்கூடிய அனைத்து வசனங்களும்
குறிப்பிட்ட சூழலுக்கு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அந்த காலத்தில்
கூறப்பட்ட விஷயங்களாகவே இருக்கும். ஆனால் விமர்சனத்திற்கு உள்ளாகும் பொழுது
மட்டும்தான் ‘அது அந்தக்காலம், இது இந்தக்காலம்’ என்ற தக்கியாவை
இஸ்லாமியவாதிகள் பயன்படுத்துவார்கள்.
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்ற வசனம் ஒரு
குறிப்பிட்ட சூழலுக்கு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்காக சொல்லப்பட்டது என்றால், ஹிஜாப் அணிய
வேண்டும் என்று சொல்லப்பட்டதும் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு குறிப்பிட்ட
சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது தான். ஆனால் அதை மட்டும் ஏன் எல்லா காலத்திற்கும்
பொருந்துவதாக எடுத்துக் கொண்டு பெண்கள் மீது திணிக்கின்றார்கள்? இது தெளிவான
இரட்டை நிலைபாடல்லவா? முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்ட இடத்தில்
வெட்டினால் அரசாங்கம் பிடித்து தூக்கில் போட்டுவிடும் என்பதால் ஜிஹாத் செய்ய
வேண்டிய ஆண்கள் அதனை செய்யாமல் அதற்கு “அந்தக் காலம், அந்தச் சந்தர்ப்பம், அந்தச் சூழல்”
என்று ஒரு கதை சொல்வதும், ஹிஜாபுக்கு மட்டும் “அந்தக் காலம், அந்தச்
சந்தர்ப்பம், அந்தச் சூழல்” என்றெதுவுமே சொல்லாமல் பெண்கள் மீது அந்த
ஆடையைத் திணிப்பதும் தெளிவாகக் காணக் கூடிய இரட்டை நிலை ஆகும்.
காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்ட வேண்டும் என்று சொல்கின்ற
வசனத்திற்கு எப்படி ஒரு சூழலும் சந்தர்ப்பமும் உள்ளதோ அதே போன்றுதான் பெண்கள்
ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறப்பட்ட வசனத்திற்கும் அந்த காலத்துக்கு மட்டுமே
பொருந்தக்கூடிய ஒரு சூழலும் சந்தர்பமும் இருந்துள்ளன.
14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரேபியாவிலும் இன்னும் பிற
தேசங்களிலும் மனிதர்கள் இரண்டு வகையாக பிரிக்கப் பட்டிருந்தனர். சுதந்திரமானவர்கள், அடிமைகள் என்பனவே
அந்த இரண்டு பிரிவினர் ஆவர். அடிமைகள் என்ற மனிதர்களை ஆடு மாடுகளைப் போன்று விலை
கொடுத்து வாங்கலாம், விற்கலாம். ஒரு குழு பலவீனமான மக்களை
கீழ்ப்படுத்தி அடிமைகளாக்கலாம். அவர்களைப் பாலியல் ரீதியாக பயன்படுத்தலாம். மனித
நேயமற்ற மனிதாபிமானமற்ற இந்த கொடுமையான நடைமுறையை இஸ்லாம் இன்றுவரை ஆதரிக்கின்றது
என்பது அந்த மதத்தின் அற்புதங்களில் ஒன்று. மது அருந்தாதே, வட்டி வாங்காதே, முஹம்மதின் மனைவியர்களை
முஹம்மது இறந்த பின்னர் திருமணம் செய்யாதே என்றெல்லாம் கூறிய குர்ஆனில் ஒரு மனிதன்
இன்னொரு மனிதனை அடிமையாக ஆடு மாடுகளைப் போல் வைத்திருப்பது கூடாது என்று தடை
செய்யும் ஒரு வசனம் கூட இல்லை.
அடிமை முறை நடைமுறையிலிருந்த காலகட்டத்தில் அடிமைப்
பெண்களாக இருப்பவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள். அடிமைப் பெண்களை
வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளலாம். அவர்களுக்கு
திருமணமாகி கணவன் இருந்தாலும் அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளவும் இஸ்லாம்
அனுமதிக்கிறது.
"அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள ஏனைய
(சுதந்திரமான) பெண்கள் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது" (குர் ஆன் 4:24)
மேலும் அடிமைப் பெண்கள் அவர்களின் எஜமானர்கள் அல்லாத
பிறராலும் பாலியல் பார்வைக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் ஆளாக்கப் பட்டார்கள்.
அவர்களுக்கு கேட்க நாதியில்லை. அன்றைய அடிமைப் பெண்களுக்கும் சுதந்திரமான இஸ்லாமிய
பெண்களுக்கும் உடை அளவில் பெரும் வித்தியாசங்கள் இருந்திருக்கவில்லை. யார் அடிமைப்
பெண், யார் சுதந்திரமான பெண் என்பதை பிரித்து அறிவது சற்று
கடினமாகத்தான் இருந்திருக்கின்றது.
மின்சாரமும் நவீன கழிப்பிடங்களும் இல்லாத அன்றைய
காலகட்டத்தில் இரவான பின்னர் தான் பெண்கள் வெட்ட வெளிக்கு இயற்கைக் கடனை
நிறைவேற்றச் செல்வார்கள். ‘மண்டேலா’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு அந்தக்
காட்சிகள் ஞாபகம் இருக்கும். இருட்டிய பின் இவர்கள் வெளியில் வருவதால் சுதந்திரமான
பெண் யார், அடிமைப் பெண் யார் என்பதை அறிவது இன்னும் கடினமாக
போய்விடுகிறது. அடிமைப்பெண் என்று நினைத்து சுதந்திரமான பெண்களை பாலியல் சீண்டல்
செய்வதும் வாடிக்கையாக நிகழ்வதுண்டு. இதற்கு ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்று
முஹம்மது சிந்தித்திருக்கவில்லை. ஆனால் முஹம்மதின் சகாக்களில் ஒருவரான உமர்
சிந்தித்தார். அடிமைப் பெண்களுக்கு பாலியல் சீண்டல் நிகழலாம், ஆனால், சுதந்திரமான
இஸ்லாமிய பெண்களுக்கு அது நிகழக்கூடாது என்பதில் உமர் அக்கறை எடுத்தார்.
சுதந்திரமான முஸ்லிம் பெண்கள் அடிமைகளாகக் கருதப்பட்டு
பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப் படாமல் இருப்பதற்காகவும், அடிமைப் பெண்கள்
இலகுவாக அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காகவும், சுதந்திரமான
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட்டு உடல் முழுவதையும் மறைக்கச் செய்ய வேண்டும் என்று
உமர் ஒரு திட்டம் போட்டு அதனை முஹம்மதிடம் சொல்லியும் கூட முஹம்மது அதனை பெரிதாக
பொருட்படுத்தி இருக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றை அறிந்தவர்களுக்கு உமரைப் பற்றி
நன்றாகவே தெரியும். உமர் சாதாரணமானவர் அல்ல, அவர் ஒரு
தந்திரசாலி, புத்திசாலி, முன் கோபக் காரர், கொலைகாரரும் கூட.
அவர் தன்னுடைய தந்திரத்தையும் புத்திசாலித்தனத்தை இங்கே பயன்படுத்துகிறார். எங்கே
எப்படி அடித்தால் முஹம்மதுக்கு உறைக்கும் என்பதை நன்கு உணர்ந்த உமர் ஒரு தந்திரமான
காரியத்தை செய்தார்.
அனைவரையும் போல முஹம்மதின் மனைவிமார்களும் இரவான பின் வெட்ட
வெளியில் மலம் கழிக்க செல்வதுதான் வழக்கம். அப்படி ஒரு நாள் முஹம்மதின்
மனைவிமார்களில் ஒருவரான சவ்தா மலம் கழிக்க வெட்ட வெளிக்கு சென்றார். முஹம்மதின்
மனைவிமார்களில் இவர் சற்று உயரமானவராக இருந்தவர். சவ்தா மலம் கழிக்கையில், பெண்கள் மலம்
கழிக்கும் இடத்திற்கு சென்று பார்த்த உமர், முஹம்மதின் மனைவி
சவ்தா மலம் கழிப்பதை பார்க்கிறார். பார்த்ததோடு மட்டும் நிற்காமல் அவரிடமே சத்தம்
போட்டு “சவ்தா, சவ்தா, நான் உங்களை அடையாளம் கண்டு விட்டேன்” என்று சொல்கின்றார்.
தான் சவ்தாவைப் பார்த்த விடயத்தை சவ்தாவே சென்று முஹம்மதிடம் சொல்ல வேண்டும்
என்பதே உமரின் தந்திரமான திட்டமாக இருந்தது, அதனால் தான் உமர்
சத்தம் போட்டு அதனை சவ்தாவிடமே சொல்லி இருந்தார்.
சவுதா பதறியவாறு ஓடிவிட்டார். உமர் நேராக முஹம்மதிடம் வந்து
நடந்த விஷயத்தை கூறுகிறார். அப்போதுதான் முஹம்மதுக்கு உறைத்திருக்கிறது. இனியும்
பொறுக்கலாகாது என்று புரிந்து கொண்ட முஹம்மது இறக்குடா ஒரு வசனத்தை என்று அவசர
அவசரமாக ஒரு வசனத்தை அந்த சந்தர்ப்பத்தில் இறங்குகிறார்.
மேலே சொல்லப்பட்ட சம்பவத்தை குர்ஆன், ஹதீஸில் இருந்து
பார்ப்போம்.
முஹம்மது நபியின் மனைவிகள் இரவு நேரங்களில் மலம்
கழிப்பதற்காக (மதீனாவில் பக்கி'க்கு அருகில்) அல்-மனாசி என்ற பரந்த திறந்த
வெளிக்கு செல்வார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் "உங்கள் மனைவியரை
(வெளியே செல்லும் பொது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று
சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதனை
செயற்படுத்தவில்லை. ஒரு நாள் இரவு முஹம்மது நபியின் மனைவி சவ்தா பின்த் ஸம்ஆ
அவர்கள் இஷா நேரத்தில் (கழிப்பிடம் நாடி) வீட்டை விட்டு வெளியே சென்றார்கள். அவர் ஒரு உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.
அவரைப் பார்த்து விட்ட உமர் (ரலி), "சவ்தாவே, உங்களை நான் யார்
என்று அடையாளம் கண்டுகொண்டேன்" என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது
பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உமர் (ரலி) உரத்து அழைத்தார்.
அப்போதுதான் பெண்கள் முக்காடு போட்டு மறைப்பது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
(சஹீஹுல் புகாரி : 146)
"நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண்
மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள்
தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள்.
அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய
துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ்
மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்." (குர்ஆன் 33:59)
சுதந்திரமான முஸ்லிம் பெண்களையும், அடிமைப்
பெண்களையும் வேறுபடுத்தி இலகுவாக அடையாளம் காண வேண்டும் என்கின்ற உமரின் தேவைக்கு
ஏற்பவே முஹம்மது குர்ஆன் வசனத்தை இறக்கி இருக்கின்றார். தனது தேவையை நிறைவேற்ற
முஹம்மதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதற்காகவே முஹம்மதின் மனைவி மலம் கழிப்பதை
உமர் சென்று பார்த்துவிட்டு அவருக்கே கேட்கும் படியாக சத்தமிட்டு “உங்களை
கண்டுகொண்டேன்” என்று கூறி இருக்கின்றார். ஆக இந்த விடயத்தை சவ்தாவும் முஹம்மதிடம்
சென்று முறையிட வேண்டும் என்பதே உமரின் தந்திரமான திட்டமாக இருந்தது, அதில் உமர்
வெற்றியும் பெற்றார்.
மேலும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆனின் 33:59 ஆவது
வசனத்தில் “அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய
துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும்” என்று
குறிப்பிடப் பட்டிருப்பதானது சுதந்திரமான முஸ்லிம் பெண்களை யாராவது அடிமைகள் என்று
தவறாகக் கருதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளக்கிவிடாமல் இருக்கவே ஹிஜாப் சட்டம்
உருவாக்கப் பட்டிருப்பதுடன், அடிமைகள் ஹிஜாப் அணியாமல் இருப்பார்கள், அவர்களை பாலியல்
சீண்டல் செய்யலாம் என்பதையும் இந்த வசனம் உறுதி செய்கின்றது. இது அடிமைகளை பாலியல்
சீண்டலுக்கு இரையாக்கும் படியான கொடுமையான ஏற்றத் தாழ்வை உருவாக்கும் நடைமுறை
ஆகும்.
மேலே சொல்லப்பட்ட விடயங்களை மேலும் உறுதி செய்வதாக
தொடர்ந்து வரும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது
قَالَ رَأَى عُمَرُ أَمَةً لَنَا مُتَقَنِّعَةً فَضَرَبَهَا وَقَالَ
لَا تَشَبَّهِي بِالْحَرَائِرِ
அனஸ் (ரலி) அறிவித்தார் : தங்கள் உடலை மறைத்திருந்த அடிமைப்
பெண்களைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அந்த அடிமைப் பெண்களுக்கு கசையடி
கொடுத்துவிட்டு “சுதந்திரமான பெண்களுக்கு ஒப்பாக ஆடை அணியக் கூடாது” என்று
எச்சரித்தார்.
(ஆதாரம் : முஸன்னஃப் இப்னு அபிஷைபாஹ் 6/236)
இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் குறித்த பதிவுகள் இஸ்லாமிய
நூல்களில் உள்ளன.
ஆக, அடிமைப் பெண்களை பாலியல் ரீதியாக இம்சைப்
படுத்தும் பொழுது சுதந்திரமான பெண்கள் தவறுதலாக பாதிக்கப் படாமல் இருப்பதற்காக
அவர்களை வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காகவே சுதந்திரமான பெண்கள் மீது ஹிஜாப்
கடமையாக்கப் பட்டது.
மேலே கூறப்பட்ட எந்த சந்தர்ப்பங்களும் இன்றைய காலத்தில்
இல்லை. அடிமை பெண்கள் என்று தவறாக நினைத்து சுதந்திரமான பெண்களை யாரும் சீண்டப்
போவதில்லை. இஸ்லாம் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றாலும் அறிவியல் மற்றும் நாகரிக
வளர்ச்சி காரணமாக மனிதநேய சமூகம் அடிமை முறையை ஒழித்துக் கட்டிவிட்டது. அதனால்
இன்றைய வாழ்வில் அடிமை, சுதந்திரமானவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும்
மனிதர்களாகவே இருக்கிறார்கள். ஆகையால், சுதந்திரமானவர்கள்
என்று அடையாளம் காண்பதற்காகவும், தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும்
அணியச் சொன்ன ஹிஜாப் இன்றைய காலகட்டத்திற்கு தேவையில்லை. அது அந்த காலகட்டத்தில்
அன்றைய சூழலில் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்காக மட்டுமே சொன்ன ஒரு விஷயமாகும்.
வன்முறையை பேசும் குர்ஆன் வசனங்களை சுட்டிக்காட்டினால்
மட்டும் அது அந்தக் காலத்துக்கு அந்த சூழலுக்கு என்று மணிக்கணக்காக பிரசங்கிக்கும்
இஸ்லாமியவாதிகள், ஹிஜாபின் சந்தர்ப்பத்தையும், சூழலையும், காலத்தையும்
மறைத்து அது எக்காலத்திற்குமானது என்று பிரசங்கித்து பெண்கள் மீது அதனைத் திணித்து
வருகின்றார்கள். இதுதான் இஸ்லாத்தின் இரட்டை நிலைப் பாடு. அடிமை, சுதந்திரமானவர்
என்ற பாகுபாடு இல்லாத இந்த காலகட்டத்திலும் முஸ்லிம் பெண்கள் அனைவரும் கட்டாயம்
ஹிஜாப் அணிய வேண்டும் என்று மூளை சலவை செய்வதும், கட்டாயப்
படுத்துவதும் எதனால் என்பதை முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்திக்கவேண்டும். பெண்களை
என்றும் தங்களது கட்டுக்கோப்புக்குள் வைத்து, தங்களுடைய
உடமைகளாக அதிகாரம் செய்து வரும் ஆண் வர்க்கத்தின் அடக்குமுறையின் நீட்சிதான்
இன்றிருக்கும் ஹிஜாப் திணிப்பு, இதற்கு பக்கபலமாக இஸ்லாம் என்ற மதம் திகழ்கிறது
என்பதை அறிவார்ந்து சிந்தித்து உணரவேண்டும்.
சுதந்திரமான பெண்களில் இருந்து அடிமைகளைப் பிரித்து அறிந்து
அவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ஹிஜாபை இன்றைக்கும்
பெண்கள் மீது திணிப்பதை நியாயப் படுத்துவதற்காக வைக்கப்படும் “பெண்களின்
தலைமுடியைப் பார்த்தாலே ஆண்களுக்கு காமக் கிளர்ச்சி வந்துவிடும்” என்பது போன்ற
சுத்த அபத்தமான விளக்கங்கள் எல்லாமே மிகக் கேவலமானவை, பொதுவான மனித
இயல்பிற்கு முரணானவை ஆகும். ஆகவே வீட்டை விட்டு வெளியில் இறங்கும் பொழுது
கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது இன்றைய காலத்திற்கு எந்த விதத்திலும்
தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒன்று ஆகும்.
மூல ஆக்கம் : சஹாபாஸ்