ரிஷாத் வீட்டில் தீப்பிடித்த சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் - செயற்பாட்டாளர்கள் ஏன் மெளனம்?

 


2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த டயகம தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி, பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் உடைய வீட்டிற்கு 2020 ஒக்டோபரில் வேலைக்காக கொண்டுவரப்பட்ட பொழுது குறித்த சிறுமியின் வயது 15 மட்டுமே. குறித்த சிறுமி தீயில் உடல் கருகிய நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனளிக்காமல் இரண்டு தினங்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.


ரிஷாத் பதியுத்தீன் பல வருட காலமாக இலங்கையின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர், 20 வருடங்களாக தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர், அரசியல் வட்டாரங்களிலும், சமூக விவகாரங்களிலும் மிகவும் செல்வாக்கான ஒருவர், தேசிய, சர்வதேச ரீதியாக பல்வேறு உயர்மட்டங்களுடன் தொடர்புகள் உள்ளவர். முஸ்லிம் சமூகத்தின் தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் ஒருவர். இத்தகைய ஒருவர், மலையாகத்தைச் சேர்ந்த, பாடசாலையில் கல்வி பெற வேண்டிய வயது இந்திய வம்சாவளி தொழிலாளர் வர்க்க சிறுமியை தனது வீட்டில் அடிமை போன்று அல்லது சிறைக்கைதி போன்று வீட்டு வேலைக்கு வைத்துக்கொண்டது அறம்சார்ந்த செயற்பாடு அல்ல. ரிஷாத் பதியுத்தீன் இற்கும் அதே வயதில் அல்லது அதற்கு அண்மைய வயதுகளில் குழந்தைகள் இருக்கலாம், தனது குழந்தைகள் கல்வி பெறாமல் யார் வீட்டிற்கோ அடிமை போன்று வீட்டு வேலைக்கு செல்வதை ரிஷாத் பதியுத்தீன் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார், அப்படியிருக்க மக்கள் வாக்கில் செல்வாக்கான ஒருவராக மாறிவிட்டவர் இப்படியான அறம்சாரா செயலை செய்திருப்பது கேவலமான ஒரு விடயமாகும்.
இன்று காலை வெளியாகிய சிங்கள ஊடகத் தகவல்களின் படி குறித்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது. சிறுமியின் மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புகின்றது. வேலைக்கு வந்தது முதல் சிறுமி சிறை வைக்கப்பட்ட நிலைமையிலேயே இருந்துள்ளார், குடும்பத்தவர்கள் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொழுது 'நுளம்புச் சுருளை பற்றவைத்த பொழுது தவறுதலாக தீப் பிடித்தது' என்று ரிஷாத் பதியுத்தீன் குடும்பத்தினர் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது, தற்பொழுது சிறுமி தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டதாகவும், அதனை அணைக்க ரிஷாத் பதியுத்தீன் இன் மனைவியும் இன்னும் இருவரும் முயன்றதாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகின்றது. முதல் கட்டத் தகவல்களே ஒன்றுடன் ஒன்று முரண்படுவது பலத்த சந்தேகங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாதது.
சிறுமி இப்பொழுது இறந்துவிட்டார், அவரால் நடந்தவற்றை இனிமேல் யாருக்கும் சொல்ல முடியாது. இருந்தாலும் விசாரணைகளை முறையாக மேற்கொண்டால் இதுவரை வெளிவராத பல விடயங்களை வெளிக்கொணர முடியுமாக இருக்கலாம். சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளமை, சிறுமிக்கு தீப்பிடித்தமை குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ரிஷாத் பதியுத்தீன் குடும்பத்தினராலும், அவர்களை சார்ந்தவர்களாலும் சொல்லப்பட்டுள்ளமை, வேலைக்கு வந்தது முதல் சிறுமியை சந்திக்க குடும்பத்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படாமை போன்ற விடயங்களை பார்க்கும் பொழுது இது மேலும் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டிய விடயம் என்பது தெளிவாகின்றது.
பெண்ணிய செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற் சங்கப் பிரதிநிதிகள் போன்றவர்கள் இந்த விடயத்தில் தொடர்ந்தும் மெளனம் காக்காமல் இந்த விடயம் குறித்து ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும், தம்மால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாகத் தயாராக வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசும் செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தில் இதுவரை அசாதாரண மெளனம் காப்பதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
செயற்பாட்டாளர்களே, நீங்கள் மெளனம் கலைக்க வேளை வந்துவிட்டது. இம்மாதம் 3 ஆம் திகதி சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது இறந்தும் போய்விட்டார், ஆகவே இனியும் தாமதம் வேண்டாம். குறித்த சிறுமி போன்று இன்னும் பல சிறுமிகள் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதிகளின், சமூகத் தலைவர்களின், அரசியல்வாதிகளின், செல்வந்தர்களின் வீடுகளில் கொத்தடிமைகள் போன்ற, சிறைக்கைதிகள் போன்ற நிலைகளில் பல்வேறு துன்பங்களுக்கு, இம்சைகளுக்கு, துஷ்பிரயோகங்களுக்கு மத்தியில் வேலைக்காக வைக்கப்பட்டிருக்கலாம், ஆகவே இன்னொரு சிறுமி இறக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை, இப்பொழுதே அவர்களை மீட்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மேற்படிதுயரச் சம்பவம் தொடர்பான எனது முன்னைய பதிவு : http://www.allahvin.com/2021/07/RishardB.html மேற்படி துயரம் குறித்து இன்று செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் சிலவற்றின் செய்தி இணைப்புக்கள் : https://liveat8.lk/%E0%B6%BB%E0%B7%92%E0%B7%82%E0%B7%8F%E0%B6%A9%E0%B7%8A-%E0%B6%9C%E0%B7%9A-%E0%B6%9C%E0%B7%99%E0%B6%AF%E0%B6%BB-%E0%B6%9C%E0%B7%92%E0%B6%B1%E0%B7%92-%E0%B6%AD%E0%B6%B6%E0%B7%8F-%E0%B6%9C%E0%B6%AD/
https://www.dailymirror.lk/top_story/Girl-working-at-fmr-minister-Bathiudeens-house-dies-of-burn-wounds/155-216197

http://www.colombotoday.com/rishard-badurdeen-1763-387/

https://www.dailymirror.lk/breaking_news/Probe-finds-she-was-brought-to-the-house-at-age-of-15/108-216338

https://tamilwin.com/article/girl-was-brought-to-the-house-at-age-of-15-1626501172 றிஷ்வின் இஸ்மத் 17.07.2021