அரசியல்வாதி வீட்டில் சிறைப்படுத்தப்பட்ட 16 வயது சிறுமிக்கு தீப்பிடித்தது எப்படி? உண்மைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் உடைய கொழும்பு இல்லத்தில் வீட்டு வேலைக்காக என்று அழைத்துவரப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஹட்டன் டயகம பகுதியை சேர்ந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி உடலில் 70 வீதமான பகுதி தீப்பிடித்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், தீக்காயங்கள் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வீட்டு வேலைக்காக என்று தரகர் ஒருவர் மூலம் வீட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறுமி 8 மாத காலப் பகுதியில் ஒரு தடவை கூட வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் சிறுமி வேலைக்காக என்று தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் குடும்பத்தினர் சிறுமியை சந்திக்க முயன்ற பொழுதும் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்று அறிய முடிகின்றது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும் என்பதில் எத்தகைய சந்தேகங்களும் இருக்க முடியாது. இலங்கையில் ஒருவரை தடுத்து வைப்பது, அடிமை போன்று நடத்துவது ஆகியவை சட்டத்தால் தடுக்கப்பட்டவை ஆகும். பாடசாலை சென்று கல்வி கற்க வேண்டிய வயதில் உள்ள ஒரு சிறுமியின் கல்விக்குக் கூட உதவாமல், அந்தச் சிறுமியின் வறுமையான குடும்ப நிலையைப் பயன்படுத்தி வீட்டு வேலைக்காக என்று கூட்டிவந்து அடிமை போன்று சிறைப்படுத்தி வைத்திருந்தமை பாரதூரமான விடயம் ஆகும். கடந்த 03 ஆம் திகதி தீப்பிடித்த நிலையில் சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

நுளம்புச் சுருள் ஒன்றை பற்றவைக்கும் பொழுதே சிறுமிக்கு தீப்பிடித்ததாக ரிஷாத் பதியுத்தீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், எனினும் அதற்கான எவ்வித சான்றுகளும், அதாவது அறையில் தீப்பிடித்த எவ்வித சான்றுகளும் காணப்பட்டிருக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வருடம் ஏப்ரல் 24 ஆம் திகதி ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டு குற்றவியல் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி கடந்த வருடம் ஒக்டோபர் மாதமே வீட்டு வேலைக்காக என்று அழைத்து வரப்பட்டுள்ளமையால், வீட்டு வேலைக்காக என்று தனது வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட சிறுமி குறித்து தனக்குத் தெரியாது என்று கூறி பொறுப்புக் கூறலில் இருந்து ரிஷாத் பதியுத்தீன் தப்ப முடியாது. ரிஷாத் பதியுத்தீன் தரப்பிலிருந்தோ, அவரது கட்சியிடமிருந்தோ உத்தியோகபூர்வமான அறிக்கைகள், தகவல்கள் எதுவுமே இதுவரை வெளியாகவில்லை.

ரிஷாத் பதியுத்தீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பதில் தலைவராக நூர்தீன் ஷஹீட் செயற்பட்டு வருகின்றார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்பொழுது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன்னிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஆஜராகிய பொழுது ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் சட்டத்தரணியாக ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி இருந்தவர் இந்த நூர்தீன் ஷஹீட் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் பிரஜை என்ற அடிப்படையில் மட்டுமல்லாது, மக்கள் வாக்குகள் மூலம் அரசியல் வாழ்க்கை நடத்தும் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மேற்படி விடயம் குறித்து பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ரிஷாத் பதியுத்தீனுக்கு உள்ளது. ரிஷாத் பதியுத்தீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் அறிக்கை விட முடியாமல் இருக்கலாம், ஆகவே கட்சியின் பதில் தலைவர் நூர்தீன் ஷஹீட் அல்லது கட்சியின் செயலாளர் மெளனம் கலைக்க வேண்டும்.

பாடசாலைக் கல்வி வசதிகள் வழங்கப்படாமல் வீட்டு வேலைக்காக என்று கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்டு அடிமை போன்று வைக்கப்பட்டிருந்து, தற்பொழுது உடல் தீப்பிடித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு நீதி கிடைப்பதற்காக வேண்டி சமூக செயற்பாட்டாளர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டும், மேலும் முன்னணி சட்டத்தரணிகள் சிறுமிக்காக இலவசமாக ஆஜராக முன்வர வேண்டும். பாடசாலைக் கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்காக என்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மீட்கப்படல் வேண்டும்.
 

மேற்படி துயர சம்பவம் தொடர்பான செய்திகளை கீழ்வரும் செய்தித்தள இணைய இணைப்புக்களில் காணலாம் :

https://en.trueceylon.lk/child-employed-at-rishad-bathiudeens-residence-found-with-burn-wounds/

https://www.madawalaenews.com/2021/07/16.html

https://www.facebook.com/dailyceylon/posts/4296804210380063

-றிஷ்வின் இஸ்மத்
  09.07.2021