ரிஸ்வி முப்தியின் வட்டலாப்பச் சிக்கலும் உலமா சபைக்குள் நடக்கும் சதியும்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மன்றிற்குள் திருட்டுத்தனமாக ஒலிப்பதிவு செய்வதற்காக கைத்தொலைபேசியை எடுத்து சென்று மாட்டிக்கொண்டார் உலமா சபையின் பிரதிச் செயலாளர் முர்ஷித் முலாஃபர் ஹுமைதி, அது நடந்து சுமார் மூன்று மாதங்களின் பின்னர் ஆணைக்குழுவிற்கே வட்டலாப்பம் கொடுக்கப்போய் அவமானப் பட்டார் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி. இது தவிர சாம்பல் வாங்கச் சொன்னது, ஹலால் சான்றிதழை வியாப்பாரமாக்கியது, தலைப்பிறையை தீர்மானிப்பதில் குளறுபடி செய்தது என்று ஏற்கனவே ரிஸ்வி முப்தி மீது பல்வேறு விமர்சனங்களும் உள்ளன.

இவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உலமா சபையின் தலைமைப் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு அந்தப் பதவியை கைப்பற்ற ஜமாத்தே இஸ்லாமி தலைமயிலான கர்ளாவிய கிலாபத் சிந்தனைக் கூட்டங்கள் திட்டமிடுவதாக அறிய முடிகின்றது. உலமா சபை மீதான முஸ்லிம்களின் அதிருப்தியை தமக்கு சாதகமாக திசை திருப்பி லாபம் காண இந்த கர்ளாவியக் கூட்டங்கள் முயல்வதன் ஒரு வெளிப்பாடாகவே விடிவெள்ளியில் வெளிவந்த கார்ட்டூனை பார்க்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் உள்ள இயக்க சார்பற்ற சில புத்திஜீவிகளும் கூட இந்த சதி குறித்து அறியாமல் இந்த சதிக்குள் உள்வாங்கப் பட்டு, விமர்சனங்களையும், கார்ட்டூன்களையும் பகிர்ந்து வருவதனை காண முடிகின்றது.

ரிஸ்வி முப்தியின் தலைமை மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு, வழமை போலவே முறையாக பதிலளிக்கத் தெரியாத அவர் சார்ந்த தப்லீக் முகாம், விடிவெள்ளி பத்திரிகை மீது அது யூத பணத்தில் இயங்கும் பத்திரிக்கை என்று மொட்டைத்தனமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தமக்கு எதிர்கொள்ள முடியாத ஏதாவது ஒன்று முன்வைக்கப் படும் பொழுது அதற்கு ‘யூத சதி’ என்று சொல்லிவிட்டு தீக்கோழி போன்று தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் வழக்கம் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது. முன்னாள் முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் பொழுதும் இதே அடிப்படையில் “இஸ்ரவேல் பணம் கொடுக்கின்றது, டாலரில் பணம் வருகின்றது” என்று சொல்லி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்வதை காண முடியும்.


தப்லீக் ஜமாத் ஒரு ஒரு பிற்போக்குவாத இயக்கமாக இருந்தாலும், அந்த இயக்கம் ஜமாத்தே இஸ்லாமி போன்று ஆயுதப் போராட்டம், கிலாபத், இலங்கையில் இஸ்லாமிய ஆட்சி என்றெல்லாம் பேசும், நீண்டகால திட்டத்துடன் இயங்கும் இயக்கமோ, அப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர் என்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதிற்காக அனுப்பிய இயக்கமோ அல்ல. தற்கொலைத் தாக்குதலுக்கான அனுமதியை வழங்கியவர் யூஸுப் அல் கர்ளாவி, அதனை இலங்கையில் இஸ்லாமிய மயப்படுத்தியது ஜமாத்தே இஸ்லாமி. இலங்கையில் ஆயுத முனையில் ஆட்சியை பிடிக்க ஜமாத்தே இஸ்லாமி திட்டமிட்டது தொடர்பில் அதன் முன்னாள் தலைவரிடம் நான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வைத்து கேள்வி எழுப்பி இருந்தேன், அந்த தினத்திலேயே நான் ஜமாத்தே இஸ்லாமியினரால் அச்சுறுத்தப்பட்டேன்.


ரிஸ்வி முப்தியோ, உலமா சபையோ விமர்சிக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை, அவர்களை கார்ட்டூனாக வரைவதிலும் சிக்கல் இல்லை, ஆனால் அதனை பயன்படுத்தி லாபமடையக் காத்திருக்கும் கூட்டம் மிகவுமே ஆபத்தான கூட்டமாகும். வெளிப்படையாகப் பார்க்கும் பொழுது மிகவும் நாகரீகமானவர்களாக, கற்றவர்களாக, சகிப்புத் தன்மை உள்ளவர்களாக தோற்றமளிக்கும் கர்ளாவிஸ்டுகள், மிகவும் ஆபத்தான திட்டங்களுடன் செயற்படுபவர்கள் ஆகும். இவர்களின் செயற்பாடுகள் அப்பாவி இலங்கை முஸ்லிம்களின் எதிர்கால இருப்பிற்கு மட்டுமல்ல, இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் ஆகும், இதற்கு ஒரு சிறு உதாரணம் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்.