ரணில் ஆட்சியில் மீளெழுச்சி பெறும் இஸ்லாமியவாதிகள்


 குண்டுத் தாக்குதல் நடாத்தத் தயாராக இருந்த ISIS இஸ்லாமிய ஜிஹாதிகள் 14 பேர் மாலைதீவின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளதாக மாலைதீவின் பயங்கரவாதம், வன்முறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் தலைவர் உஸ்வத் அஹமத் (படத்தில் இருப்பவர்) திங்கட்கிழமை அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் கோயம்புத்தூரில் கார்க் குண்டு தவறுதலாக வெடித்ததில் ஜமீஷா முபீன் எனும் ஜிஹாதிய பயங்கரவாதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளில் தமிழ்நாட்டு ISIS ஜிஹாதிகளுக்கும், இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்திய மெளலவி ஸஹ்ரான் தலமையிலான ஜிஹாதிய பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துத் தெரிய வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் பாரிய அளவில் இஸ்லாமிய பயங்கரவாதம் செயற்ப்பட்டு வரும் நிலையில், பங்களாதேசில் ஏற்கனவே இஸ்லாமிய ஜிஹாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இலங்கை, இந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு தென்னாசிய வட்டகை நாடான மாலைதீவில் குண்டுத் தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த 14 இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தற்பொழுது கைது செய்யப் பட்டுள்ளமை, அந்த முஸ்லிம் நாட்டிலும் ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகள் செயற்படுவதை உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளது. இது தென்னாசியாவில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் செயற்பாட்டு வீரியத்தைக் காட்டுகின்றது.


கோயம்புத்தூர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் தெரிய வந்த விடயங்கள் மாலைதீவு ISIS பயங்கரவாதிகளின் கைதிற்கு உதவியாக இருந்தனவா, இவர்களிற்கும் இலங்கை இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் கண்டறியப் பட்டுள்ளனவா என்பன குறித்து இது வரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


இந்தியா, மாலைதீவு ஆகிய இரண்டு அயல் நாடுகளில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் உத்தியோக பூர்வமாக வெளியாகியுள்ள நிலையிலும் கூட இலங்கையின் தற்போதைய அரசு இஸ்லாமியவாதிகளின் செயற்பாடு குறித்துக் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் போன்று இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமியவாதிகளும் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் ஆபத்தான சூழல் இலங்கையில் தற்பொழுது படிப்படியாக ஏற்படுத்தப் பட்டு வருகின்றது. முழு உலகையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும், இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் ஆகிய முக்கிய இலக்குகளைக் கொண்டு அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) முறையில் செயற்படும் ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் புதிய பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு புதிய தந்திரத் திட்டங்களுடன் வீரியமாகச் செயற்பட ஆரம்பித்து விட்டன. தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் தடையை நீக்குவதற்கு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு புறம் முயற்சி செய்து வருகின்றார்கள். இலங்கை முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதப் பயிற்சிகளுக்காகவும், ஜிஹாதிற்காகவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர் என்று அனுப்பிய ஜமாத்தே இஸ்லாமி இவ்வக நடந்தும் இதுவரை தடை செய்யப்படவே இல்லை என்பது 2019 ஏப்ரல் முதல் இன்று வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அனைவர் மீதும் சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றது. தீவிரவாத மற்றும் மாணவர்களுக்குப் பொருத்தமற்ற போதனைகள் கண்டு பிடிக்கப் பட்டதால் திருத்தி அமைப்பதற்காக திருப்பிப் பெறப்பட்ட பாடசாலை இஸ்லாம் பாடப் புத்தகங்களை அவசர அவசரமாக மீண்டும் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கும் படி கல்வி அமைச்சர் கட்டளை இட்டு இருக்கின்றார், எனினும் புத்தகங்கள் உண்மையில் முழுமையாகத் திருத்தி அமைக்கப் பட்டுள்ளனவா, பாடப் புத்தகங்களில் உள்ள அனைத்து விடயங்களித்கும் அமைச்சர் பொறுப்பு ஏற்கத் தயாரா என்பன கேள்விக் குறிகளே.


2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடப்பதற்கு சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்தே இலங்கையில் செயற்படும் ISIS இஸ்லாமியப் பயங்கரவாதம் பற்றி போதிய தகவல்கள், எச்சரிக்கைகள் கிடைத்து இருந்த பொழுதும் அந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடக்கும் வரை பொடுபோக்காக இருந்த அரசின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக உள்ள இந்தக் காலத்திலேயே இஸ்லாமியவதிகளினதும், இஸ்லாமிய இயக்கங்களினதும் மீளெழுச்சி இலங்கையில் இடம்பெற்று வருகின்றது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.


வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும்.


-றிஷ்வின் இஸ்மத்
18.11.2022