தான் போகாத சொர்க்கத்திற்கு வழி சொன்னவர் இயற்கை மரணம்!

எகிப்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கத்தாரில் பதுங்கி வாழ்ந்து வந்தவரும் பயங்கரவாதத்தை, தற்கொலைத் தாக்குதல்களை ஊக்குவித்தவருமான தீவிரவாத இஸ்லாமிய அறிஞர் யூஸுப் அல் கர்ளாவி தனது 96 ஆவது வயதில் சற்று முன்னர் இயற்கை மரணம் எய்தியுள்ளார். மதத்தின் பெயரால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகின்றார்கள், மக்களின் வாழ்க்கைகள் எவ்வாறு நாசமாக்கப் படுகின்றன என்பதற்கு யூஸுப் அல் கர்ளாவியின் இயற்கை மரணம், சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நல்ல பாடமாக உள்ளது.


‘தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது, கணவனின் அனுமதி பெறாமலே மனைவி கூடத் தற்கொலைத் தாக்குதலில் பங்கேற்கலாம்’ என்று பத்வா (மதப் பிரகடனம்) வெளியிட்டு ஜிஹாதிய தற்கொலைத் தாக்குதல்களை ஊக்குவித்தத மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராக யூஸுப் அல் கர்ளாவி இருக்கின்றார். இவரது இந்த பத்வாவை ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி தனது உத்தியோகபூர்வ மாத சஞ்சிகையில் தமிழ் மொழியில் வெளியிட்டு இலங்கை முஸ்லிம்களைத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு வழிகாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


யூஸுப் அல் கர்ளாவி போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அறிஞர்களின் பத்வா ஜமாத்தே இஸ்லாமி மூலமாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப் பட்டமை காரணமாக மெளலவி சஹ்ரான் போன்ற பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்களைத் தற்கொலைத் தாக்குதலுக்கு வழிநடாத்திச் செல்லவது இலகுவாக அமைந்திருந்தது.


இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்பதை குர்ஆனின் 5:33 வசனத்தையும், மேலும் ஹதீஸ்களையும் குறிப்பிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யூஸுப் அல் கர்ளாவி சரி கண்டு இருந்தார். இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களைக் கொலை செய்யாவிட்டால் இஸ்லாமே அழிந்து போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட சாதாரண இஸ்ரவேலிய பொதுமக்களைக் கொலை செய்வதையும் யூஸுப் அல் கர்ளாவி ஊக்குவித்து இருந்தார். இவ்வளவு பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்த, தற்கொலைத் தாக்குதல்களை உன்னதமான ஜிஹாத் என்று புகழ்ந்த யூஸுப் அல் கர்ளாவி கடைசி வரையும் எந்த ஜிஹாதிலும் பங்கேற்காமல், தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடாமல் சொகுசாக, ஆரோக்கியமாக வாழ்ந்து தனது 96 வயதில் இயற்கையாக மரணித்தார்.


எகிப்திய நீதிமன்றத்தினால் ‘ஆயுள் தண்டனை’ வழங்கப்பட்ட போதும், ‘அல்லாஹ்வுக்காக சிறை செல்கின்றேன்’ என்றெல்லாம் மடத்தனகள் செய்யாமல், எகிப்துப் பக்கமே தலை வைத்துப் படுக்காமல், தனது வாழ்க்கையை தான் தான் சந்தோசமாக வாழ வேண்டும் என்று கத்தாரில் வாழ்ந்து வந்தார். யூஸுப் அல் கர்ளாவி இவ்வாறு வாழ்ந்திருந்தாலும், இவரது வன்முறையைத் தூண்டும் தீவரவாதப் போதனைகளால் ஊந்தப்பட்டு பல இளைஞர்கள் தமது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டு அற்ப ஆயுளில் மரணித்துப் போயுள்ளனர், அவர்கள் மரணித்தது மட்டுமின்றி பல அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையையும் மண்ணாக்கியுள்ளனர், இன்னும் பல இளைஞர்கள் சிறைகளில் தம் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு இருட்டில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். இந்த அனைத்துக்கும் காரணமான யூஸுப் அல் கர்ளாவி மற்ற இஸ்லாமிய தலைவர்கள் போலவே மிகப் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் செயற்பட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து மரணித்து இருக்கின்றார்.


இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமி, ஜமிய்யத்துல் ஸலமா ஆகிய அமைப்புக்களும், மிஷ்காத் ஆய்வு நிலையம் என்ற பெயரில் செயற்படும் அக்குரணை மன்சூர் மெளலவியும் யூஸுப் அல் கர்லாவியை ஆஸ்தான குருவாக ஏற்றுக் கொண்துள்ளனர். இந்தியாவில் ஜமாத்தே இஸ்லாமி மற்றும் அதனது கிளை, துணை மற்றும் பிணாமி அமைப்புகளும் யூஸுப் அல் கர்ளாவியின் சிந்தனைத் தாக்கத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜமாத்தே இஸ்லாமியின் துணை அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) இற்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (NIA) நடவடிக்கை எடுத்து இருந்தனை இங்கு குறிப்பிடத் தக்கது.


அல்லாஹ்வின் திருப்தியும் சுவர்க்கமும் கிடைக்கும் என்று சொல்லி மற்றவர்களை ஜிஹாத்திற்கும், தற்கொலைத் தாக்குதல்களுக்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும், வன்முறைகளுக்கும் தூண்டிய யூஸுப் அல் கர்ளாவி, தான் மட்டும் அவை எதிலுமே ஈடுபடாமல் ஆரோக்கியமாக, சந்தோசமாக நீண்ட காலம் வாழ்ந்துள்ளார் என்பதை சிந்தனைக்கு எடுத்தால் மதங்களைப் பிரச்சாரம் செய்கின்றவர்கள் கூறுவது எல்லாமே பொய்கள், ஏமாற்றுக்கள், மதத்தில் உள்ளவற்றை அவர்களே நம்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜிஹாதில் மரணித்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்பது உண்மையாக இருந்தால், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியவாதிகளுக்கு அதனைப் பிரச்சாரம் செய்த யூஸுப் அல் கர்ளாவி, தான் அதனை செய்து சுவர்க்கத்தை பெற்றுக் கொள்ளாமல் விட்டிருப்பாரா? ஆகவே மதத்தின் பெயரால், கடவுளின் நீங்கள் ஏமாற்றப் படாமல் இருங்கள், மேலும் உங்கள் வாழ்க்கையயும், மற்றவர்களின் வாழ்க்கையையும் மண்ணாக்காமல் இருங்கள். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு யூஸுப் அல் கர்ளாவியின் மரணத்தில் படிப்பினை உள்ளது, குறிப்பாக முஸ்லிம்களுக்கு இதில் நிறையவே படிப்பினை உள்ளது.


மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முஸ்லிம் அல்லாத மக்களுடன் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பது போன்ற போதனைகளை யூஸுப் அல் கர்ளாவி செய்து இருக்கின்றாரே என்ற கேள்வி சிலருக்கு எழலாம், அதற்கான பதில் இலகுவானது. சந்து பொந்துகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கின்ற சுய பிரகடன தாயிகளே பக்காவாக அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) பண்ணும் பொழுது யூஸுப் அல் கர்லாவியைப் பற்றித் தனியாக சொல்லவும் வேண்டுமா?

-றிஷ்வின் இஸ்மத்
26.09.2022