தள்ளாடும் இலங்கையில் இஸ்லாமிய ஆட்சி – ஜமாத்தே இஸ்லாமி பதில் சொல்லுமா?


ஹஜ்ஜுல் அக்பரைப் போன்று இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இரகசிய திட்டத்துடன் ஜமாத்தே இஸ்லாமியை வழிநடாத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றால்  உஸைர் இஸ்லாஹி இதற்குப் பதில் சொல்லட்டும்!

 

ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்கான பிரகடனமாக மொழிய வேண்டிய لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ (லா இலாஹா இல்லல்லாஹ்) என்ற கலிமாவில் உள்ள  إِلَٰهَ (இலாஹ்) எனும் சொல்லுக்கு الحاكمية (ஹாகிமியத்) என்ற முக்கியமான அர்த்தம் உள்ளது என்ற விளக்கத்தை இலங்கை முஸ்லிம்களிடம் முதன் முதலில் முன் வைத்தது ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி அமைப்பாகும். இந்த விளக்கத்தின் படி இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை என்று ஜமாத்தே இஸ்லாமி அதன் அங்கத்தவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவாளர்களுக்கும் மூளைச் சலவை செய்தது. பின்னர் ஜமாத்தே இஸ்லாமியில் இருந்து பிரிந்து ஜமாத்துஸ் ஸலாமா அமைப்பினர், அக்குரணை மன்சூர் மவ்லவி ஆகியோர் இதே வழியில் பயணித்தனர்.


அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ வேண்டும், அப்படியல்லாமல் மனிதர்கள், பாராளுமன்றங்கள், அரசுகள் இயற்றும் சட்டங்களுக்கு கட்டுப்படுவது, அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்வது ஆகியன அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவமான ‘ஷிர்க்’ (இணைவைப்பு) ஆகும், ஷிர்க் எனும் பாவத்தைச் செய்தால் மரணத்தின் பின்னர் நிரந்தர நரகம் கிடைக்கும்’ என்று கலிமாவுக்கு ஜமாத்தே இஸ்லாமி விளக்கம் வழங்கியது. ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர் அபுல் அஃலா மெளதூதி இந்த விளக்கத்தின் படி, அதாவது ‘இஸ்லாமிய ஷரியாவைப் பின்பற்றாத ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் வாழ்வது பெரும் பாவமாகும், ஆகவே அந்தப் பாவத்தில் இருந்து முஸ்லிம்களை மீட்க உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்’ என்ற நோக்கத்துடனேயே 1941 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பை உருவாக்கினார். 


இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்தவரான அபுல் அஃலா மெளதூதி, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்து விட்டார். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் பொழுது பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பாகிஸ்தானான பங்களாதேஷ் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஜமாத்தே இஸ்லாமி பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாகப் போராடியது. பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமியினர் பங்களாதேஷ் சுதந்திரப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கு எதிரான யுத்தக் குற்றங்களிலும், மோசமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டார்கள் என்று பங்களாதேஷ் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் வழக்கின் தீர்ப்புக்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதிகள் ஒன்றாக இணைந்திருத்தல் வேண்டும், அப்பொழுதுதான் இஸ்லாமிய ஆட்சியை இலகுவாக உருவாக்க முடியும் என்ற காரணத்திற்காகவே பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக ஜமாத்தே இஸ்லாமி யுத்தக் குற்றங்களிலும், மோசமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது. ஜமாத்தே இஸ்லாமியினரைப் பொறுத்தவரை இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் திட்டத்திற்கு இடையூறாக இருந்தால் சாதாரண முஸ்லிம்களுக்கு எதிராகக் கூட செயற்படலாம், முஸ்லிம்களைக் கூட கொன்று குவிக்கலாம், அதைத்தான் பங்களாதேஷில் செய்தார்கள்.


மேலே குறிப்பிடப்பட்ட ஹாகிமியத் விளக்கத்தின் அடிப்படையில் இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி அமைப்பானது, கலிமாவில் உள்ள இலாஹ் என்ற சொல்லின் முக்கிய பகுதியான ஹகிமியத்தின் படி இலங்கையின் பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் இயற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பாடு இலங்கை முஸ்லிம்கள் வழ முடியாது, இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த ஒவ்வொரு முஸ்லிமும் தன்னால் முடியுமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற போதனையை தேர்ந்தெடுத்தவர்கள் பங்குபற்றும் வகுப்புகளில் போதித்து மூலச் சலவை செய்கின்றது. இதற்காக தலைமைத்துவப் பயிற்சிகள், கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், 5, 7  நாட்கள் விதிவிடப் பயிற்சிகள், முஅய்யித் பாடநெறி என்று பல்வேறு பெயர்களில் வேலைத்திட்டங்களை மேற்கொண்டார்கள். இவற்றின் விளைவாக ஜமாத்தே இஸ்லாமியால் இலங்கை முஸ்லிம்கள் ஜிஹாத் பயிற்சி மற்றும் யுத்தம் செய்வதற்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காஷ்மீர் என்று நாட்டுக்கு வெளியில் அனுப்பி வைக்கப் பட்டார்கள். அதன் உச்சபட்சமாக ஜமாத்தே இஸ்லாமியால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சிரியாவுக்குச் சென்று ISIS இல் இணைந்தது மட்டுமின்றி இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் வரையான பயங்கரவாத செயற்பாடுகள் வரை பங்கு கொண்டார்கள்.


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின் தற்காலிகமாக விழித்துக் கொண்ட இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்ட அமுலாக்கல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பயனாக ஜமாத்தே இஸ்லாமியின் 24 வருடகால தலைவர் உட்பட பல ஜமாத்தே இஸ்லாமியினர் கைது செய்யப்பட்டனர். முதன் முறை கைது செய்யப்பட பொழுது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலையானார் ஜமாத்தே இஸ்லாமியின் 24 வருடத் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர். இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பல இஸ்லாமிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும், இலங்கையில் இருந்து முதன் முதலாக ஜிஹாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தில் கடுமையான செல்வாக்கையும், அழுத்தத்தையும் பிரயோகித்து தடையில் இருந்து தப்பிக் கொண்டது. ஜமாத்தே இஸ்லாமி தடையில் இருந்து தப்பிக் கொண்டாலும் கூட, இக்கட்டான வேளைகளில் அதிலிருந்து தப்பிப்பதற்காக பல்லி தனது வாலை அறுத்துக் கொள்வது போன்று ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு மட்டும் கண்துடைப்பிற்காக தடை செய்யப்பட்டது. ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு பெயரளவில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அதன் செயற்பாடுகள் இரகசியமாகவும், இணையம் மூலமும் நடை பெற்று வருகின்றன. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தற்பொழுது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜமாத்தே இஸ்லாமி உட்பட இஸ்லாமியவாத இயக்கங்களினதும், இஸ்லாமியவாதிகளினதும் மதவாத செயற்பாடுகள் புத்துயிர் பெற்றுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.


உறுதியற்ற அரசியல் தன்மை இலங்கையில் காணப்படும் நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின் வருடாந்த மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றதாகவும் அதில் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி இரண்டாவது தடவையாகவும் தலைவராக (அமீராக) தெரிவு செய்யப்பட்டுள்ளாதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.


இலங்கையின் ஆட்சி, அதிகாரம் தொடர்பில் நிச்சயமற்ற தளம்பலான நிலை காணப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புக் கட்டமைப்புக்கள், சட்ட அமுலாக்கப் பிரிவுகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆட்சியை, பாராளுமன்றத்தை, மக்கள் பிரதிநிதிகளை பாதுகாப்பதற்கும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும் தமது முழு வளங்களையும் பிரயோகித்துத் திண்டடிக்கொண்டு இருக்கும் நிலையில், சாதாரண  பொது மக்களின் கவனம் வாழ்வியல் பிரச்சினைகளில் குவிந்து இருக்கின்றது. இந்தச் ஸ்திரமற்ற சர்ந்தப்பத்தைக் கண கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஜமாத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்கள் தம்மை மீள் கட்டமைத்துக் கொள்ள அல்லது முன்னரை விடவும் வலுவாகக் கட்டமைத்து இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவரும் நீண்ட காலத் திட்டத்திற்காக வீரியத்துடன் செயற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலகளைத் தொடர்ந்து ஜமாத்தே இஸ்லாமி, ஜமாத்துஸ் ஸலமா, அக்குரணை மன்சூர் மவ்லவி போன்ற இஸ்லாமிய ஆட்சி பேசுகின்றதும், தற்கொலைத் தாக்குதலகளை ஆதரிக்கும் இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவியுடன் தொடர்புடையதுமான தரப்புக்கள் அடக்கி வாசித்து வந்தாலும் கூட கலிமாவுக்கு உள்ள ஹாகிமியத் விளக்கத்தை கைவிட்டதாக பகிரங்கமாக இதுவரை அறிவிக்கவில்லை. (இவர்கள் குறித்து கடந்த வருடம் வெளியிட்ட வீடியோவை இந்த இணைப்பில் காணலாம் : https://youtu.be/hPWTeJwxq5A ) தற்பொழுது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுல்லாதால் இவர்களின் செயற்பாடுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


ஹாகிமியத் கலிமாவில் உள்ளாதா, இஸ்லாமிய ஆட்சியை, கிலாபத்தை உருவாக்குவது முஸ்லிம்களின் கடமையா, இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கும் திட்டம் ஜமாத்தே இஸ்லாமியிடம் இன்னுமும் இருக்கின்றதா’ போன்ற கேள்விகளுக்கு அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) செய்யாமல் ஜமாத்தே இஸ்லாமி நேர்மையாகப் பதில் சொல்லுமா? அல்லது கடந்த காலங்களை விட நேர்த்தியான நீண்ட காலத் திட்டத்துடன் அல் தக்கியா செய்துகொண்டு உரிய சந்தர்ப்பம் வரும் வரை இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக ஜமாத்தே இஸ்லாமி கபடத்தனமாகக் காத்திருக்குமா? கலிமாவில் இருந்து ஹாகிமியத் விளக்கத்தை நீக்கிவிட்டால் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பே இல்லாமல் போய்விடும் என்பது குறிப்பிடத் தக்கது.


ஊரில் நடைபெறும் சாதாரண விடயங்கள் மற்றும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையிலான சர்ச்சைகளில் கூட மிகச் சிறப்பாக அல் தக்கியா செய்யும் திறமை வாய்ந்த ஜமாத்தே இஸ்லாமி, அவர்களின் அச்சாணியாக இருக்கும் ஹாகிமியத் – இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பான பகிரங்கமான இந்தக் கேள்விக்கு பதில் தருவார்களா, பதில் தந்தாலும் கூட அல் தக்கியா (புனிதப் பாசாங்கு) செய்யாமல் நேர்மையாகப் பதில் தருவார்களா, அல்லது நியாயமான கேள்விகளை முன்வைக்கும் என்னைத் தங்களது இயக்கத்தின் பெயர் சம்மந்தப்படாத விதத்தில் கொலை செய்வதாற்கான திட்டத்தை செயற்படுத்த அவசரப் படுவார்களா அல்லது நான் இலங்கை அரசாங்கத்திற்கும், உளவுப் பிரிவிற்கும் வேலை செய்கின்றேன் என்று தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி (அவர்களிடம் அநியாயமாகப் பலியாகும்) முஸ்லிம்கள் எனது பதிவுகளை வாசித்து சிந்திக்காமல் தடுக்க முயல்வார்களா?


குறிப்பு : சிறுவர் மற்றும் மகளீர் விவாகர அமைச்சிற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என்னைக் கொலை செய்வதற்காக வந்த 4 ஜிஹாதிகளில் ஒருவரான ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பின் முன்னாள் பிராந்தியப் பொறுப்பாளர் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு வெளியில் சுதந்திரமாக உள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடனும், ISIS உடனும் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டிருந்த பலர், அசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மை, பல்வேறு (உள்நாட்டு, வெளிநாட்டு) அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 735 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும் தற்பொழுது 10 இற்கும் குறைவானவர்களே தடுப்புக் காவலில் உள்ளனர், அவர்களும் விரைவில் விடுதலை ஆகக் கூடிய நிலையே காணப்படுவதாக அறிய முடிகின்றது.


-றிஷ்வின் இஸ்மத்
 01.08.2022