பருவகால மாற்றம் குறித்து அல்லாஹ்வுக்கு இவ்வளவு அறிவா?

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், ‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே’ என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)
(சஹீஹுல் புகாரி : 3260)

உலகின் பெரும்பாலான பிரதேசங்களில் நான்கு பருவகாலங்கள் காணப்படுகின்றன. இளவேனிற்காலம் (வசந்தகாலம்) , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம் (பனிக்காலம்) ஆகியனவே அந்த நான்கு பருவகாலங்களாகும். உலகில் சில வெப்பமண்டலப் பிரதேசங்களில் இரண்டு பருவகாலங்கள் காணப்பட்டாலும், வெப்பமண்டலத் தமிழர்கள் வருடத்தை இவ்விரண்டு மாதங்களாகப் பிரித்து 6 பருவகாலங்களைப் பெயரிட்டுள்ளனர். இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி,பின்பனி ஆகியனவே அந்த ஆறு பருவகாலங்கள் ஆகும்.

பருவகாலங்களைக் கருதும் பொழுது வட அரைக்கோளத்திற்கும், தென் அரைக்கோளத்திற்கும் இடையில் நேரெதிரான வேறுபாடு காணப்படும். உதாரணமாக டிசம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப் பகுதி வட அரைக்கோளத்தில் பனிக்காலமாக இருக்கும், ஆனால் அதே காலப் பகுதி தென் அரைக்கோளத்தில் கோடைகாலமாக இருக்கும். ஐரோப்பாவில் பனி பொழியும் பொழுது தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வெயில் காலமாக இருக்கும்.

பருவநிலை மாற்றங்கள் என்பது பூமியின் சுழற்சி, சூரியனைச் சுற்றிய பூமியின் பயணப் பாதையில் ஏற்படும் தூர மாற்றம், பூமியின் சுழற்சிமைய அச்சு சூரியனுடனான ஒப்பிட்டுப் பார்வையில் சற்று சாய்ந்திருப்பது (அச்சுச் சாய்வு) போன்ற காரணிகளால் நிகழ்கின்றது என்பதைப் பற்றிய எவ்வித அறிவுமே இல்லாத ஒருவர் தனது கற்பனைக்கு ஏற்ப சொன்ன கலப்படமில்லாத பொய்யே மேற்படி ஹதீஸ் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாம் சொல்வது போன்றே சர்வ வல்லமை உள்ள மிக்க அறிவாளியான அல்லாஹ் எனும் படைப்பாளி இருந்திருந்தால், ஒரு பாடசாலை மாணவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாத ஒருவராகவா அந்த அல்லாஹ் இருப்பார்? இஸ்லாம் மதத்தை உருவாக்கியவர்களுக்கு பூமியின் சுழற்சி பற்றியோ, பூமி கோள வடிவானது என்பது பற்றியோ, ஏன் இரவு பகல் ஏற்படுகின்றது என்பது பற்றியோ எவ்வித அறிவும் இருந்திருக்கவில்லை என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றைப் படிக்கும் பொழுது புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக நரகம் மூச்சு விடுவது பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. மூச்சுவிடுதல் (சுவாசித்தல்) என்கின்ற உடலியற் செயற்பாடு எதற்காக நிகழ்கின்றது என்கின்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவரே இவ்வாறானதொரு பொய்யை கொஞ்சமும் சிந்திக்காமல் அவிழ்த்து விட்டிருக்க வேண்டும். ஆக அல்லாஹ் என்கின்ற கற்பனைக் கடவுளின் பெயரால் முஹம்மது நபி அவிழ்த்து விட்ட ஆயிரக்கணக்கான பொய்களில் இதுவும் ஒன்றாக உள்ளது என்பதே உண்மையாகும். உடலுக்குத் தேவையான பிராணவாயுவை (ஒக்ஸிஜனை) தொடராகப் பெற்றுக் கொள்வதற்கான உடலியற் செயற்பாடே சுவாசித்தல் அல்லது மூச்சு விடுதல் ஆகும். இஸ்லாமிய மத மூலாதார நூல்களின் படி நரகம் என்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பால் ஆனா சித்திரவதைக் கூடம் ஆகும். நெருப்பு எரிவதற்கு சதாவும் பிராணவாயு (ஒக்ஸிஜன்) தேவைப்படும். ஆனால் நரகத்திற்கு ஓய்வு தரும் வகையில் வருடத்திற்கு இரண்டு தடவைகள் சுவாசிக்க அனுமதி கொடுக்கப் பட்டுள்ளதாக கூறுவது அறிவியல் குறித்த அடிப்படை அறிவற்ற ஒருவர் தனது அறிவீனத்தை வெளிப்படுத்திய சர்ந்தர்ப்பம் என்றே சொல்ல வேண்டும்.


மேற்படி ஹதீஸை வாசிக்கும் பொழுதே இது எவ்வளவு அபத்தமானது என்பததை சாதாரண அறிவுள்ள ஒருவரே புரிந்து கொள்ளலாம். உலகின் பருவநிலை மாற்றங்கள் நிகழ்வதற்கான காரணிகள், சுவாசச் செயற்பாடு நிகழ்வதற்கான காரணிகள் குறித்த எவ்வித அடிப்படை அறிவுமே இல்லாதவராக முஹம்மது நபி இருந்துள்ளார் என்பதுடன், தனக்குத் தோன்றிய விதமாகவெல்லாம் பொய்களை உருவாக்கி அவற்றை அல்லாஹ் எனும் கற்பனைக் கடவுளின் பெயரால் அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் மத்தியில் சொல்லி அவர்களை ஏமாற்றி இருக்கின்றார் என்பது இந்த ஹதீஸைப் படிக்கும் பொழுது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

பாட்டி வடை சுட்ட கற்பனைக் கதையில் நரி பேசியது, காகம் பேசியது என்று எழுதப்பட்டுள்ளதற்கு சற்றும் சளைக்காமல் ‘நரகம் பேசியது’ என்று வேறு சொல்லும் மேற்படி ஹதீஸை இதுவரை யாரும் பலவீனமானது, இட்டுக் கட்டப் பட்டது என்று சாக்குப் போக்குச் சொல்லி நிராகரித்ததாக அறிய முடியவில்லை. எனினும் இந்த ஹதீஸ் குறித்து முல்லாக்களிடம் கேள்விகள் எழுப்பப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஏதாவது சாக்குப் போக்குகளைக் கூறி இந்த ஹதீசை சில முல்லாக்கள் நிராகரித்துவிடும் சாத்தியங்கள் உள்ளன. இஸ்லாத்தில் காணப்படும் அறிவியலுக்கு முரணான எண்ணற்ற விடயங்களில் ஒன்றாக இந்த ஹதீஸ் காணப்படுகின்றது. இஸ்லாத்தில் அறிவியல் இருப்பதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை, மாறாக அறிவியலுக்கு முரணான விடயங்களே இஸ்லாத்தில் உள்ளன.

-றிஷ்வின் இஸ்மத்
14.07.2022