இஸ்ரவேலை உருவாக்கக் கட்டளையிட்ட அல்லாஹ் - குர்ஆனின் வன்முறைச் சாட்சி!

இஸ்ரவேல், சவூதி அரேபியா இடையிலான நட்புறவு மலர்ந்ததன் விளைவாக தனது வான்பரப்பை சவூதி அரேபியா இஸ்ரவேலுக்குத் திறந்து விட்டதைத் தொடர்ந்து இலங்கை இஸ்ரவேல் இடையேயான விமானச் சேவைகளும் ஆரம்பிக்கவுள்ள நிலையில், நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வளர்ச்சியைப் பாராட்டிப் பதிந்த பதிவின் கீழ் அமைந்த பின்னூட்டம் காரணமாக சில தெளிவுகளை வழங்க வேண்டிய தேவை உணரப்பட்டதன் விளைவே இந்தப் பதிவு. அதிகமான முஸ்லிம்கள் இஸ்ரவேல் தேசத்தின் உருவாக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை அறியாமலே இருக்கின்றனர். இஸ்ரவேலின் உருவாக்கத்திலும், அங்கே வன்முறையைத் தூண்டுவதிலும் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பது குறித்து இந்தப் பதிவு முஸ்லிம்களுக்கும், ஏனையவர்களுக்கும் தெளிவை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றேன்."யூதர்கள் பாலஸ்தீனப் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஒரு நாட்டை உருவாக்கியது வெறுமனே யூத சியோனிச சதி, அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை" போன்ற கடந்த நூற்றாண்டின் பொய்களை இஸ்லாம் பற்றிப் போதிய தெளிவில்லாத மனிதர்களுக்கு வேண்டுமானால் வெற்றிகரமாக விற்பனை செய்யலாமே தவிர, குர்ஆன், ஹதீஸ் பற்றிய ஓரளவு அறிவுள்ள முன்னாள் முஸ்லிம்களிடம் இந்தப் பொய்களைத் தூக்கிக் கொண்டு வந்தால் மொத்த இஸ்லாமிய மதமும் அவமானப் பட்டு நிற்க வேண்டும் என்பதை இஸ்லாமியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
குர்ஆனின் 5ஆவது அத்தியாயமான ஸூரத்துல் மாஇதா வின் 21 – 26 வரையான வசனங்களைப் படித்துப் பார்த்தால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளலாம். தாமுண்டு, தம்பாடுண்டு என்று இருந்த யூதர்களை ‘வாக்களித்த பூமி’, ‘புண்ணிய பூமி’, ‘புனிதப் பூமி’ என்று கூறி யாரோ பலசாலியான மக்கள் வாழ்ந்த பூமிய அக்கிரமிக்கச் சொன்னதே இஸ்லாத்தின் கற்பனைக் கடவுளான அல்லாஹ் தான் என்பதை ஏற்றுக்கொண்டு குர்ஆன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது.


ஸூரத்துல் மாஇதா வின் 21 – 26 வரையான வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். (வசனங்கள் உள்ளபடி அப்படியே தரப்படுகின்றன.)

21 ஆவது வசனம் :
يَـٰقَوْمِ ٱدْخُلُوا۟ ٱلْأَرْضَ ٱلْمُقَدَّسَةَ ٱلَّتِى كَتَبَ ٱللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا۟ خَـٰسِرِينَ
(தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.

விளக்கம் : இன்று இஸ்ரவேல் + பாலஸ்தீனம் என்று அறியப்படும் பூமியை, அல்லது அதை விடவும் விசாலாமான, அல்லது அதை விடவும் குறுகிய பூமியை யூதர்களுக்கான ‘புண்ணிய பூமி’ என்று அறிவித்து, போர் செய்து அந்தப் பூமியில் நுழையுங்கள் என்று மூஸாவின் மூலமாக அல்லாஹ் யூதர்களுக்குக் கட்டளையிடுகின்றார். அல்லாஹ் யூதர்களை நோக்கி அந்தப் பூமியில் நுழையும் படியும், அதனைக் கைப்பற்றும் படியும், அப்படி நுழைந்து கைப்பற்றும் பொழுது அங்கே வாழ்கின்ற மக்கள் தமது நிலத்தை யூதர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தற்காப்புப் போர் தொடுத்தால் போரில் புறமுதுகு காட்டி ஓடிவிடாமல் ‘வெற்றி அல்லது வீர மரணம்’ என்று அந்த மக்களுடன் போரிடும் படியும் கட்டளை இடுகின்றார்.

குறிப்பு : மூஸா என்பவரும், அவரது சகோதரன் ஹாரூன் என்பவரும் அல்லாஹ்வால் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட இறைதூதர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது. இங்கு குறிப்பிடப் படும் அந்தப் ‘புண்ணிய பூமிப்’ பிரதேசத்தின் சரியான அளவு என்ன என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும்.


22 ஆவது வசனம் :
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًۭا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ
அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.

விளக்கம் : அல்லாஹ் மூஸாவின் மூலம் யூதர்களை போர் செய்து அந்தப் பூமியில் நுழையச் சொன்னாலும், யூதர்கள் போர் செய்வதை விரும்பவில்லை. அந்தப் பூமியில் ஏற்கனவே பலசாலியான மக்கள் வாழ்வதால் யூதர்கள் அங்கே நுழையயும் விரும்பவில்லை, அந்த மக்கள் வெளியேறினால் மட்டுமே அல்லாஹ் சொன்ன ‘புண்ணிய பூமியில்’ நுழைவோம், மாறாக யாருடனும் சண்டை போட்டு நிலத்தைக் கைப்பற்றுகின்ற வேலையைச் செய்ய மாட்டோம் என்று கூறி யூதர்கள் யுத்தத்தை, வன்முறையை, இரத்தக் களரியைத் தவிர்த்து விடுகின்றனர், அல்லாஹ்வின் இரத்த வெறியாட்ட ஆசையை நிராகரித்து விடுகின்றனர்.


23 ஆவது வசனம் :
قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِمَا ٱدْخُلُوا۟ عَلَيْهِمُ ٱلْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَـٰلِبُونَ ۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.

விளக்கம் : ‘இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடைகளைப் பொழிந்தான்’ என்பது மூஸாவையும், அவரது சகோதரர் ஹாரூனையும் குறிப்பதாக இருக்க வேண்டும். அந்த இருவரும் அல்லாஹ்வின் ஆசைப் படியே இரத்தத்தை ஊட்டுவதற்காக யுத்தம் செய்யத் தயாராக இருந்ததுடன் ‘பலசாலியான மக்களைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம், அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து போராட வாருங்கள், அல்லாஹ் வெற்றியைத் தருவான், ஆகவே குறைந்த பட்சம் வாசல் வரையாவது வாருங்கள்’ என்று மற்றவர்களையும் யுத்தம் செய்ய வரும்படி தூண்டிக் கொண்டு இருந்துள்ளனர்.


24 ஆவது வசனம் :
قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدْخُلَهَآ أَبَدًۭا مَّا دَامُوا۟ فِيهَا ۖ فَٱذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَـٰتِلَآ إِنَّا هَـٰهُنَا قَـٰعِدُونَ
அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்;. நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

விளக்கம் : யார் என்ன சொன்னாலும் வீணாக யுத்தம் செய்து இரத்தக் களரியை உருவாக்குவதில்லை என்பதில் யூதர்கள் தெளிவாக இருந்திருக்கின்றார்கள், ஆகவே அவர்கள் ‘நீங்கள் என்ன தான் சொன்னாலும் நாங்கள் போர் செய்ய வரப் போவதில்லை, உங்கள் அல்லாஹ் தான் ரொம்ப ஆற்றலுள்ளவர், எல்லாம் வல்ல அப்பாடாக்கர் என்றெல்லாம் சொல்கின்றீர்களே, ஆகவே அல்லாஹ் எல்லாம் வல்ல அப்பாடாக்கர் என்றால் அந்த அல்லாஹ்வுடன் சேர்ந்து சென்று நீங்கள் போர் செய்துகொள்ளுங்கள், எங்களை வீணாக வன்முறைக்குள் தள்ள வேண்டாம்’ என்று மூஸாவிடம் கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்கள்.


25 ஆவது வசனம் :
قَالَ رَبِّ إِنِّى لَآ أَمْلِكُ إِلَّا نَفْسِى وَأَخِى ۖ فَٱفْرُقْ بَيْنَنَا وَبَيْنَ ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ"
என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று மூஸா கூறினார்.

விளக்கம் : எவ்வளவோ முயன்றும் எந்த ஒரு யூதரும் அல்லாஹ்வின் வன்முறைத் திட்டத்திற்கு உடன்படாத காரணத்தால் மூஸா விரக்தி அடைகின்றார். மூஸாவும், மூஸாவைப் போலவே கடவுள் தன்னுடன் பேசுவதாகக் (இறைதூதர் என்று) கூறிக் கொள்ளும் மூஸாவின் சகோதரன் ஹாரூனும் மட்டுமே யுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும், வேறு யாருமே உடன்படாததால் அவர்களை தண்டிக்கும் படியும் மூஸா அல்லாஹ்விடம் முறையிடுகின்றார்.


26 ஆவது வசனம் :
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ أَرْبَعِينَ سَنَةًۭ ۛ يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْفَـٰسِقِينَ (அதற்கு அல்லாஹ்) "அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்;. ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினான்.
விளக்கம் : தனது ஆசைப்படி யூதர்கள் அந்தப் பூமியில் அடாவடியாக நுழைந்து அங்குள்ள மக்களைத் தாக்கி இரத்தைத்தை ஓட்டி யுத்தம் செய்து, வன்முறைகளை மேற்கொள்ளாததால் அல்லாஹ் கோபம் கொண்டு யூதர்களைத் தண்டித்துள்ளார். அல்லாஹ் யூதர்களை நாற்பது ஆண்டுகள் தண்டித்தார் என்று இந்த வசனம் சொல்கின்றது.


மேற்படி குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்க்கும் பொழுது சும்மா இருந்த யாரோ ஒரு மக்கள் கூட்டத்தின் மீது, சும்மா இருந்த யூதர்களை ஏவி விட்டு யுத்தத்தை உருவாக்கி, இரத்தத்தை ஓட்டி, வன்முறைகள் செய்து அந்தப் பூமி கைப்பற்றப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் குரூரமான ஆசையாக இருந்தது என்பதை அறிய முடிகின்றது. ஆபிரஹாமிய மத நூற்களின் படி பார்த்தால் மூஸா வாழ்ந்த காலம் சுமார் 3000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். 3000 வருடங்களுக்கு முன்னர் அரபு என்கின்ற மொழியே உருவாகி இருந்திருக்கவில்லை, அரபு மொழியின் வரலாறு சுமார் 2000 வருடங்களுக்கு சற்று அதிகம் என்றே அறியப்படுகின்றது. இஸ்லாம் மதம் உருவாக்கப்பட்டு 1412 வருடங்கள் தான் ஆகியிருக்கின்றது, ஆகவே 3000 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பூமியில் வாழ்ந்த பலசாலியான மக்கள் நிச்சயமாக அரபிகளோ, முஸ்லிம்களோ இல்லை என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஆகவே இன்றைய அரபிகளோ, முஸ்லிம்களோ அந்தப் பூமிக்கு சொந்தம் கொண்டாடுவது குர்ஆனின் அடிப்படையில் தவறான செயலாகும்.


யூதர்கள் இஸ்ரவேல் என்ற நாட்டை வன்முறை, ஆக்கிரமிப்பு மூலம் உருவாக்கினார்கள் என்று கூறி அந்தப் பழியை மொத்தமாகவே யூதர்கள் மீதோ, அல்லது சியோனிஸ்ட்டுகள் மீதோ போடுவதும், இஸ்ரவேல் – பாலஸ்தீனத்தில் நடக்கும் வன்முறைகளுக்கான முழுக் குற்றச்சாட்டையும் யூதர்கள் மீது சுமத்துவதும் குர்ஆனைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் செய்யக் கூடாத செயல்களாகும். குர்ஆனை இறைவேதம் என்று உண்மையாகவே நம்பும் ஒரு முஸ்லிம், இன்று அந்தப் பிரதேசத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் அல்லாஹ் மட்டுமே என்பதை விசுவாசிக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாத்தின் பங்கு எதுவும் இல்லை என்று முஸ்லிம்கள் யாராவது சொல்வதாக இருந்தால், முஹம்மது நபி பின்விளைவுகளை யோசிக்காமல் யூத வேதத்தில் இருந்த வரலாற்றை திருடி உல்டா பண்ணி குர்ஆனில் இணைத்துவிட்டார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டி வரும், எப்படி வசதி?


குறிப்பு : இஸ்ரவேலிய இராணுவத்தால் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள், அடக்குமுறைகளை இந்த ஆக்கம் எவ்விதத்திலும் நியாயப் படுத்தவில்லை, அத்துடன் எதோ இத்துப்போன பண்டைய நூற்களில் எழுதப் பட்டுள்ள காரணத்திற்காக மக்கள் வாழும் நிலங்களை ஆக்கிரமிப்பது, வன்முறைகளை நிகழ்த்துவது போன்றவற்றையும் இந்த அக்கம் சரிகானவில்லை. ‘இன்றைய இஸ்ரவேலிய – பாலஸ்தீனப் பிரச்சினை என்பது வெறுமனே யூதர்களால் அல்லது சியோனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட ஒன்று, அதற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமுமே இல்லை’ என்ற வகையில் இஸ்லாமியவாதிகளால் மேற்கொள்ளப் படும் பிரச்சாரத்தை முறியடித்து உண்மையை முஸ்லிம்களுக்கும், ஏனையவர்களுக்கும் புரிய வைப்பதே இந்த ஆக்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

-றிஷ்வின் இஸ்மத்
19.07.2022