நாகரீகமான மனிதர்களாக பரிணாமமடையும் வஹ்ஹாபிகள், குப்பைக்குப் போகும் ஏகத்துவமும், நபி வழியும்!
‘மாற்றம் ஒன்றே மாறாதது, மற்ற அனைத்தும் மாறியே தீரும்’ என்று சொல்வதுண்டு. “இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாது, குர்ஆனில் ஒரு எழுத்துக் கூட மாறவில்லை, இஸ்லாத்தில் எதையும் மாற்ற முடியாது, அல்லாஹ்வின் சட்டங்களை மாற்ற முடியாது, நபி வழி எக்காலத்திற்கும் பொருத்தமானது, இணைவைப்பு மிகப் பெரிய பாவம்” என்றெல்லாம் காலாகாலமாக சொல்லி வந்த இஸ்லாமிய கடும் போக்குப் பிரிவான வஹ்ஹாபிகள் கூட தற்பொழுது மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.
வஹ்ஹபிச பிரச்சாரகரான மரீனா ரிபாய் நேற்றைய தினம் (27.01.2022) ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி முன்னிலையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்த விடயம் முக்கியமான ஒன்றாகக் கருதப் படுகின்றது. தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதும், “தேசிய கீதத்தைப் படுவதும் ‘ஷிர்க்’ – அதாவது அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவமான இணைவைப்பு, ஆகவே தேசிய கீதத்தை ஒரு போதும் பாட வேண்டாம் என்று முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றோம்” என்று கூறி வந்த மரீனா ரிபாய் அவர்களே நேற்றைய தினம் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்துள்ளார். அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவம் என்று தானே பிரச்சாரம் செய்து வந்த விடயத்தில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ள மரீனா ரிபாய், தானே அதனை செய்தும் இருக்கின்றார் என்பதன் மூலம் வஹ்ஹாபிகள் மாறி வருகின்றார்கள் என்பது தெளிவாகின்றது.
முஸ்லிம் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களினதும் குறைந்த பட்ச திருமண வயதை 18 ஆக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை இஸ்லாமியவாதிகளால் தொடர்ந்தும் சவாலுக்கு உட்படுத்தப் பட்டும், எதிர்க்கப் பட்டும் வந்தது. முஹம்மது நபி தனது 53 ஆவது வயதில் ஒரு 6 வயது சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாலும், குர்ஆனின் 65:4, 33:49 வசனங்களின் படியும், ஜலாலைன் உட்பட பல தப்சீர்களின் படியும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்ய முடியுமாக இருப்பதாலும் பெண்களுக்கு 18 ஐக் குறைந்த பட்ச திருமண வயதாக நிர்ணயிப்பதை இஸ்லாமியவாதிகள் எதிர்த்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் ‘பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மரீனா ரிபாய் தெரிவித்த ஆலோசனை இஸ்லாமிய அடிபப்டைவாதிகளின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் ஆச்சரியமான மாற்றமாகப் பார்க்கப் படுகின்றது.
SLTJ (ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்) தலைவர் மெளலவி A.K ஹிஷாம், CTJ (சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்) தலைவர் அப்துல் ராசிக் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் ஆஜராகி இருந்த அதே தினத்திலேயே நானும் எனது அறிக்கையை வழங்க அங்கே சென்றிருந்தேன். SLTJ, CTJ ஆகிய அமைப்புக்களின் சார்பில் அவர்களது தலைவர்களுடன் சுமார் 10 பேரளவில் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து இருந்தனர். அவர்கள் காத்திருப்பு அறையில் (Waiting Room) இருக்கும் பொழுது அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுமார் நான்கு தடவைகள் அறையைக் கடந்து சென்றார். ஒவ்வொரு தடவை அவர் சென்ற பொழுதும் அவர்கள் அனைவருமே எழுந்து மரியாதை செலுத்தியதையும், யாருமே உட்கார்ந்து இருக்கவில்லை என்பதையும் நான் நேரடியாகவே கண்டேன். பிரதமர் அந்த அறைக்கு வரவில்லை, அவர்களை எழுந்து மரியாதை செய்யும் படி யாரும் சொல்லவோ, நிர்ப்பந்திக்கவோ இல்லை, ஆனாலும் பிரதமர் அவர்காளைக் கடந்து சென்ற பொழுது அந்த ஏகத்துவவாதிகள் சுயமாகவே எழுந்து பிரதமருக்கு மரியாதை செய்தார்கள். ஒருவருக்கு எழுந்து மரியாதை செய்வது ஷிர்க் எனும் அல்லாஹ் மன்னிக்காத இனைவைப்புப் பாவமாக இருந்தாலும் அவர்கள் அந்தப் பாவத்தை சுயமாக விரும்பியே செய்து இருந்தார்கள் அல்லது தமது கொள்கையை மாற்றி அது பாவம் என்பதை நிராகரித்து விட்டு செய்து இருந்தார்கள்.
SLTJ, CTJ அமைப்பினர் பிரதமருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தமை,, மரீனா ரிபாய் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதையை செய்தமை, நபிவழிக்கு முரணாக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் படி பரிந்துரை செய்தமை ஆகியவற்றையும், இன்னும் நம்மைச் சூழ நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் பார்க்கும் பொழுது இஸ்லாமியவாதிகளில் ஒரு முக்கிய அங்கமான வஹ்ஹாபிகள் நாகரீகமடைந்த மனிதர்களாக பரிணாமம் அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. நபி வழி எனும் காலத்திற்குப் பொருத்தமில்லாத நடைமுறைகளை குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிந்து இருப்பதும், ஏகத்துவம் ஏகத்துவம் என்று இல்லாத அல்லாஹ்வுக்காக வரட்டுத் தத்துவம் பேசியவர்கள் அதனை புறக்கணித்து விட்டு அவர்களே பெரும் பாவம் என்று பிரச்சாரம் செய்த ஷிர்க் எனும் இணைவைப்பை விரும்பிச் செய்வதும் மிக முக்கியமான மாற்றங்களாக கருதப்பட வேண்டியவை. வஹ்ஹாபிகளிடம் ஏற்பட்டுள்ளா இந்த மாற்றமானது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.
தேசிய கீதத்திற்கு எதிராக முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்து வந்த மரீனா ரிபாய் போன்ற ஒருவர் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செய்வார் என்பதோ, நபிவழியை நிராகரித்து முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றும் படி கோரிக்கை வைப்பார் என்பதோ, ஆசிரியருக்கு எழுந்து மரியாதை செய்வது ஷிர்க் என்று பேசிய SLTJ, CTJ யினர் பிரதமருக்கு சுயமாகவே எழுந்து மரியாதை செய்வார்கள் என்பதோ யாரும் எதிபார்த்து இருக்காத மாற்றங்களே. ஆகவே மற்றவர்கள் செய்யும் வரை காத்திருக்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் சுயமாக சிந்தித்து, இஸ்லாத்தில் இருக்கும் காலத்திற்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத விடயங்களை தூக்கி எறிய முன்வர வேண்டும். இஸ்லாத்தில் இருக்கும் காலத்திற்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத விடயங்கள் தூக்கி எறியப்படும் பொழுது பல முஸ்லிம்கள் விடுதலை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியுமாக இருக்கும் என்பதுடன், இஸ்லாத்தில் எஞ்சி இருப்பவர்கள் கூட மற்ற மனிதர்களுக்கும், தங்களுக்கும் இடையூறு இல்லாத மனிதர்களாக வாழ வழி ஏற்படும், அத்துடன் உலகில் இடம்பெறும் வன்முறைகள், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவையும் பாரிய அளவில் குறைவடையும்.
மற்றம் ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக் கூடியவை, இஸ்லாமும் மாறித்தான் ஆக வேண்டும், ஆகவே முஸ்லிம்களே, நீங்களும் இஸ்லாத்தை மாற்றுங்கள், உலகின் உண்மையான அமைத்திக்காண ஒரு வழியாக அது அமையும்.
குறிப்பு : பிரபல வஹ்ஹாபிச பிரச்சாரகரான மரீனா ரிபாய் அவர்களைப் பற்றித் தெரியாத முஸ்லிம்கள் இலங்கையில் குறைவு எனலாம். இவரது அல் முஸ்லிமாத் அமைப்பிற்குச் சொந்தமான ‘தாருன் நுஸ்ரா’ எனும் சிறுமிகள் இல்லத்தில் சிறுமிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தை மூடி மறைக்க முற்பட்ட விடயத்தில் இவர் அதிகம் அறியப்பட்டு இருந்தார். மேலும் இவர் மீது அல்லது இவரது NGO மீது பண மோசடிக் குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அல் முஸ்லிமாத் எனும் NGO வில் பொருளாளராக இருந்த ஷாமிலா ஹஃபீஸ் என்பவர் 25.07.2017 திகதியிட்ட தனது ராஜினாமாக் கடிதத்தில் தான் வெற்றுக் காசோலைகளில் கையெழுத்துப் போட நிர்பந்திக்கப் பட்டதாகவும், அவற்றைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட பண பரிமாற்றங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியப் படுத்தப் படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருந்தமை குறிப்பிடத் தக்கது.
-றிஷ்வின் இஸ்மத்
28.01.2022