குர்ஆன் பாதுகாக்கப் பட்டதா? இஸ்லாமிய அறிஞரின் வீடியோ வாக்குமூலம்


இஸ்லாத்தின் பெயரில் எது சொன்னாலும் முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் கொஞ்சமும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக அப்படியே நம்பிவிடுவார்கள் என்பதனால் தான் அந்த மதம் இன்று வரை நிலைத்திருக்கின்றது, அதனால் தான் அந்த மதத்தினால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடிகின்றது, அவர்களை அடிமைகள் ஆக வைத்திருக்க முடிந்திருக்கின்றது. முஸ்லிம்கள் சற்று சிந்திக்க ஆரம்பித்தால் மதத்தின் அத்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.
முஹம்மது நபியின் வரலாறே தெரியாத முஸ்லிம்கள் கூட முஹம்மது நபி மிகவும் நல்லவர் என்று எப்படி நம்ப வைக்கப் படுகின்றார்களோ, அதே போன்றே குர்ஆன் குறித்த உண்மைகளே தெரியாமல், குர்ஆன் பாதுகாக்கப் பட்டது, அதில் ஒரு எழுத்துக் கூட மாறவில்லை, அது மிகச்சிறந்த அரபி மொழி இலக்கியம் என்றெல்லாம் முஸ்லிம்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளனர். உண்மையில் குர்ஆன் பாதுகாக்கப் பட்டதா என்று பார்ப்பதற்கு முன்னர் எதற்கும் இந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் வீடியோவில் கூறும் விடயங்களைத் தெளிவாக ஒரு தடவை கேட்டுவிட்டு வாருங்கள்.
“நிச்சயமாக நாம்தான் (இவ்) வேதத்தை இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்போம்.” (15:9) என்று அல்லாஹ் குர்ஆனில் பன்மையில் சொல்வதாக இருந்தாலும் கூட, குர்ஆன் பாதுகாக்கப் படவில்லை, முஹம்மது நபி மரணித்த சிறிது காலத்திலேயே நாற்பதற்கும் மேற்பட்ட வித்தியாசமான குர்ஆன்கள் இருந்தன என்பதன் மூலம் குர்ஆனைப் பாதுகாப்பதாகச் சொல்லும் மேற்படி குர்ஆனின் வசனம் கூட பொய்யாகிவிட்டது. முஹம்மது நபியின் தோழர்களே வித்தியாசமான நாற்பது குர்ஆன்களை வைத்து இருந்தார்கள் என்பது குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதற்கான சான்று ஆகும். மேலும் அலி, இப்னு மஸ்ஊத் ஆகியோரின் குர்ஆன்களில் இருந்த வேறுபாடுகளும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை.
அன்று ஆட்சியில் இருந்த உஸ்மான் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் உருவாக்கிய குர்ஆன் பிரதியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் எரித்ததன் மூலமே இன்று பரவலாக உள்ள குர்ஆன் பிரதி உருவாக்கப் பட்டது. எனினும் அதில் கூட வேறுபாடுகள் உள்ளன.
முஹம்மது நபி மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்த சில வசனங்களை நபி மரணித்த பொழுது ஆடு தின்று விட்டது, அந்த வசனங்கள் இன்று இருக்கும் குர்ஆனில் விடுபட்டுப் போய்விட்டன என்று முஹம்மது நபியின் மனைவி ஆயிஷாவே அறிவித்து இருக்கின்றார்.

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்."
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(ஸஹீஹுல் முஸ்லிம் : 2876)

"(திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது. எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது."
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(அஹ்மத் : 20112)

குர்ஆணைக் குப்புறப் போட்டுத் தேடினாலும் ஆயிஷா சொல்லும் ஆடு தின்ற வசனங்களை அதில் கண்டுபிடிக்கவே முடியாது. ஆக, ம்மே ம்மே என்று கத்தும் ஒரு ஆட்டிடமிருந்தே அல்லாஹ்வால் குர்ஆனைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது, அபப்டி இருக்க அல்லாஹ் 1400 வருடங்களாக குர்ஆனைப் பாதுகாக்கின்றார், ஒரு எழுத்துக் கூட மாறவில்லை என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனையும், பெய்யுமே தவிர நிஜம் அல்ல. இதனையும் வாசித்துப் பாருங்கள் :
"நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்த போது அல்அஹ்ஸாப் எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். (அந்த வசனம் இது தான்) இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். (33 : 23)"
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
(ஸஹீஹுல் புகாரி : 4784)


ஆக, காணாமல் போன வசனங்கள் ஏராளம் உள்ளன என்பது புரிகின்றது. அது மட்டுமா, குர்ஆனை வாசித்தால் உங்களுக்கு இலகுவாக ஒரு விடயம் புரியும், அதாவது எதுவுமே ஒரு முறையான ஒழுங்கமைப்பில் இருக்காது, மாறாக எல்லாமே குழம்பிப் போய், அங்கொன்றும், இங்கொன்றுமாகவே இருக்கும். சட்டங்களை சொல்கின்ற வசனங்கள் ஆகட்டும், வரலாறுகளை சொல்கின்ற வசனங்கள் ஆகட்டும், எவையுமே ஒரு முறையான ஒழுங்கமைப்பில் இருக்காது. இவற்றிற்கும் மேலாக முதலில் அருளப் பட்டதாக சொல்லப்படும் “இக்ரஹு” என்று ஆரம்பிக்கும் வசனம் கூட முதல் அத்தியாயத்தில் இல்லாமல் அது 96 ஆவது அத்தியாயத்தில் இருக்கும்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள். அப்போது உஸ்மான்(ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று(மதீனாவாசியாகிய) ஜைத் பின் ஸாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள்.
(ஸஹீஹுல்ப புகாரி : 4987)

குர்ஆன் அரபு மொழியின் சிறந்த இலக்கியம் என்பதும் இங்கே பொய் என்று ஆகிவிட்டது. குர்ஆன் அரபி மொழியின் சிறந்த இலக்கியத் தரத்தில் அமைந்தது அல்ல, மாறாக அது குறைசிக் கோத்திரத்தாரின் பேச்சு மொழிநடையில் அமைந்த புலம்பல் என்றாகிவிட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ்வே குறைசிகளின் வட்டார அரபு மொழியைத்தான் பேசினாரா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, வீடியோவில் பேசும் இஸ்லாமிய அறிஞர் சொன்ன இன்னொரு செய்தியையும் மேற்படி ஹதீஸ் உறுதி செய்கின்றது. அதாவது சஹாபாக்களின் காலத்தில், குர்ஆன் தொகுக்கப்படும் பொழுது பல வித்தியாசமான மொழிநடைகள் கொண்ட வித்தியாசம் வித்தியாசமான பல குர்ஆன்கள் இருந்திருக்கின்றன என்பதாகும். ஆகவே குர்ஆன் பாதுகாக்கப் பட்டது என்பதும், குர்ஆன் சிறந்த அரபி இலக்கியம் என்பதும் பொய்கள் ஆகும். உண்மையைப் போட்டு உடைத்த இஸ்லாமிய அறிஞருக்கு நன்றிகள். கடைசியாக, எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் குர்ஆனைக் காப்பாற்றுவது அடைப்புக் குறிகளே (Brakcets). அடைப்புக் குறிகள் நீக்கப்பட்ட குர்ஆன் படு கோமாளித்தனமாக, கேவலமாக இருக்கும், சந்தேகம் என்றால் அடைப்புக் குறிக்குள் இருப்பவற்றை நீக்கிவிட்டு குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவை வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இஸ்லாம் பற்றிய உண்மைகள் கன் முன்னே விரிந்து கிடக்கின்றன, முஸ்லிம்கள் அவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தயாரா? சிந்தித்து இஸ்லாத்தில் இருந்து விடுதலை பெறத் தயாரா?

-றிஷ்வின் இஸ்மத்
13.01.2022