முஹம்மது நபி திருடரா? சம்பவத்தை உறுதி செய்யும் குர்ஆன்!


தன்னை நாற்பது வயதில் இறைதூதர் என்று சுய பிரகடனம் செய்து கொள்வதற்கு முன்னரே முஹம்மது நபியை அவர் வாழ்ந்த சமூகத்து மக்கள் அல் அமீன், அஸ்ஸாதிக் (நம்பிக்கையாளர், உண்மையாளர்) போன்ற நற்பெயர்களைக் கூறி அழைத்தார்கள், அவர் நபியாக ஆகியதன் பின்னர் அவரது எதிரிகள் கூட அவரது நம்பிக்கையை, நாணயத்தை விமர்சித்ததே இல்லை என்றெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் மூட்டை மூட்டையாக நபி புகழ் பாடுவதை கேட்டு இருக்கின்றோம். எனினும் இஸ்லாமிய மூலாதரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது முஹம்மது உண்மையிலேயே நம்பிக்கையாளராக, உண்மையாளராக, நேர்மையாளராக இருந்தாரா என்பது பெரியதொரு கேள்விக் குறியே.

முஹம்மது உண்மையிலேயே நம்பிக்கையாளராக, உண்மையாளராக இருந்தாரா என்பது மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்து மக்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லோரும் உண்மையிலேயே முஹம்மது நபியை நம்பிக்கையாளர், உண்மையாளர், நேர்மையாளர் என்றெல்லாம் சொன்னார்களா என்பது கூடக் கேள்விக் குறிதான்.

தனக்கு வஹி (இறை செய்தி) வருகின்றது, அல்லாஹ் எனும் கடவுள் தன்னோடு பேசுகின்றார் என்றெல்லாம் முஹம்மது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தன் பாட்டுக்கு அவிழ்த்து விட ஆரம்பித்த பொழுதே அவர் உண்மையாளரா என்கின்ற விடயம் கேள்விக்குள்ளாகி விடுகின்றது, இருந்தாலும் இந்தப் பதிவின் பேசுபொருள் அதுவல்ல என்பதால் விடயத்திற்கு வருவோம்.

முஹம்மது தனது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து முதலாவது மாபெரும் கொள்ளைக்காக செல்கின்றார், அது பத்ரு எனும் போராக மாற்றமடைகின்றது. பத்ரு என்பது கொள்ளைதானே தவிர, தற்காப்பு யுத்தம் அல்ல என்பதை பின்வரும் இரண்டு ஆக்கங்களின் மூலம் விபரமாகத் தெரிந்து கொள்ளலாம்.

மேலே உள்ள முதல் ஆக்கத்தை வாசித்து இருந்தால் கொள்ளை முயற்சி போராக மாறியதை புரிந்து இருப்பீர்கள். இரண்டாவது ஆக்கத்தை வாசித்து இருந்தால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட் பங்கு போட்ட கதையை தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இப்பொழுது அவர் திருட்டுப் பட்டம் பெற்ற விடயத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

பத்ரிலே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் இருந்த ஒரு சிவப்பு வெல்வெட் அங்கி ( قَطِيفَةٌ حَمْرَاءُ ) கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பங்கு பிரிப்பதற்கு முன்னரேயே அங்கிருந்து காணாமல் போய்விடுகின்றது, அப்பொழுது முஹம்மதின் சகாக்களான 'சஹாப்பாக்கள்' அந்த சிவப்பு அங்கியை முஹம்மதுதான் திருடி இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

(முகம்மதின் சகாவான) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்:
"மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று;" என்ற குர்ஆன் வசனம் சிவப்பு நிற வெல்வெட் ஆடை பற்றி வெளிப்பட்டது. பத்ர் போரின் நாளில் அந்த ஆடை காணாமல் போன போது சிலர் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எடுத்திருக்கலாம்’ என்று பேசிக்கொண்டார்கள். எனவே அல்லாஹ், "மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று;" என்று வசனத்தின் இறுதி வரை இறக்கி வைத்தான்.
(ஸுனன் அபூதாவூத் : 3971)

قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏ وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ‏}‏ فِي قَطِيفَةٍ حَمْرَاءَ فُقِدَتْ يَوْمَ بَدْرٍ فَقَالَ بَعْضُ النَّاسِ لَعَلَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ يَغُلَّ مَفْتُوحَةُ الْيَاءِ ‏.‏

ஹதீஸ்களின் தரம் இஸ்லாத்தின் உள்வீட்டுப் பிரச்சினையாக இருந்தாலும் கூட மேற்படி ஹதீஸ் ஸஹீஹ் (உறுதியானது – நம்பிக்கையானது) என்றே தரப்படுத்தப் பட்டுள்ளது. முஹம்மது நபியின் தோழர்களே அவர் உண்மையாளர், நம்பிக்கையாளர் என்பதை நம்பி இருக்கவில்லை, மாறாக அவரை ஒரு மோசடிக்காரராக, திருடராகப் பார்த்து இருக்கின்றார்கள், அதுவும் சாதாரண திருடராக அல்ல, மாறாக கொள்ளை அடிக்கப் போன இடத்தில் கொள்ளையடித்த பொருட்களில் திருடும் திருடராக பார்த்து இருக்கின்றார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது. அதன் காரணமாகவே காணாமல் போன சிவப்பு வெல்வட் அங்கியை ( قَطِيفَةٌ حَمْرَاءُ ) முஹம்மதுதான் திருடி இருக்கின்றார் என்று தமக்குள்ள பேசிக்கொண்டு இருந்திருக்கின்றார்கள்.

முஹம்மது நபிக்கு அவரது மனைவிகளுடன் பிரச்சினை வந்தாலும், வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று சொல்ல தயக்கம் வந்தாலும், வளர்ப்பு மகனின் மனைவி மீது இச்சை வந்தாலும் உடனே வஹி அனுப்பும் அல்லாஹ் இந்த விடயத்திலும் வஹி அனுப்பி முஹம்மதை சுத்தம் செய்ய முயற்சி செய்து இருக்கின்றார், அதனால் தான் குர்ஆனின் 3 ஆவது அத்தியாயத்தின் 161 வசனமக “மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று; எவரேனும் மோசம் செய்தால் அவர், அந்த மோசம் செய்ததுடன் மறுமை நாளில் வருவார்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்த வினைக்கு(ரிய பயனை)ப் பூரணமாக அளிக்கப்படும். (அவை செய்த நன்மையைக் குறைத்தோ, தீமையை அதிகரித்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநீதி செய்யப்படவுமாட்டார்கள்.” என்பதை இறக்கி முஹம்மதை சுத்தம் செய்து இருக்கின்றார் அல்லாஹ். (அல்லாஹ் என்ற பெயரில் முஹம்மது நபி தனக்குத் தானே வஹி இறக்கிக் கொண்டாரா என்பது தனித் தலைப்பாக பேசப்பட வேண்டிய அளவு விசாலமான விடயம்.) அல்லாஹ் இப்படி நபியை சுத்தம் செய்தாலும் அந்த சிவப்பு நிற வெல்வெட் அங்கி கண்டு பிடிக்கப் பட்டதாக எந்தத் தகவலும் இப்னு அப்பாஸின் அறிவிப்பில் இல்லை.

முஹம்மது நபி திருடவில்லை, அவர் நல்லவர் என்று அல்லாஹ்வே குர்ஆனில் வசனம் அருளிச் சொன்னாலும் கூட காணமல் போன, அல்லது முஹம்மது திருடியதாகக் கூறப்பட்ட சிவப்பு வெல்வட் அங்கி ( قَطِيفَةٌ حَمْرَاءُ ) தொடர்பான விடயம் இத்துடன் முடிவைடைந்து விடவில்லை.

பராஉ(ரலி) அறிவித்தார். "சிவப்பு நிற ஆடையில் நபி(ஸல்) அவர்களை விட அழகானவராக வேறெவரையும் நான் பார்க்கவில்லை."
(ஸஹீஹ் முஸ்லிம் : 780)

முஹம்மது நபியிடம் இருந்த சிவப்பு நிற ஆடையைப் பற்றி இங்கே பேசப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவும். இதை விட முக்கியமான் விடயம் தொடர்ந்து வருகின்றது.

திருடப்பட்ட சிவப்பு வெல்வெட் அங்கி ( قَطِيفَةٌ حَمْرَاءُ ) தொடர்பான விடயம் முஹம்மதின் புதைகுழி வரை செல்கின்றது என்பதை அந்த அங்கி திருடப்பட்ட விடையத்தை அறிவித்த அதே இப்னு அப்பாஸே அறிவிக்கின்றார்.

(முஹம்மதின் சகாவான) இப்னு அப்பாஸ் அறிவிக்கின்றார் :
“அல்லாஹ்வின் தூதர் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட பொழுது அவரது உடலுக்குக் கீழே சிவப்பு வெல்வெட் அங்கி வைக்கப்பட்டது”
(ஸஹீஹுல் முஸ்லிம் : 967)

மேற்படி ஹதீஸ் ஸுனன் நஸாஈ : 2012, ஜாமிஉத் திர்மிதி : 1048, மிஷ்காத் : 1694 ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது, இவை அனைத்திலுமே பத்ருக் கொள்ளைப் பொருட்களில் திருடப்பட்ட சிவப்பு வெல்வெட் அங்கியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட قَطِيفَةٌ حَمْرَاءُ என்ற அதே அரபுப் பதமே பயன்படுத்தப் பட்டுள்ளது. அந்த சிவப்பு அங்கிக்கு என்ன நடந்திருக்கும் என்பதை இப்பொழுது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலே சொன்ன விடயங்களுக்கு மேலதிகமாக முஹம்மதின் நேர்மை, நம்பிக்கை குறித்து அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கும் ஸஹீஹுல் புகாரியின் 3344 ஆவது ஹதீஸ் சொல்லும் செய்தியும் மிக முக்கியமானது. யமனில் இருந்து கிடைத்த தங்கக் கட்டியை முஹம்மது தனது சகாக்களுக்கு (சஹாபாக்களுக்கு) பங்கு பிரித்துக் கொடுக்கும் பொழுது நடந்த சம்பவம் இது :

அப்போது ஒருவர் முன் வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் “நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?“ என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி(ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.

புகாரி 3344 ஹதீஸின் படி முஹம்மதின் சஹாபாக்களே அவர் நேர்மையானவர், நீதியானவர், நம்பிக்கையானவர் என்பதை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.


முஹம்மது நபி நேர்மையானவர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று சொல்லப் படுவது பொய் என்பதையும், அவர் நேர்மையானவர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என்பதை அவருடன் இருந்த சஹாப்பாக்களே நமபவில்லை என்பதையும், அவர் கொள்ளை அடித்தார் (மேலே தரபப்ட்ட ஆக்கம் 02) என்பதையும், திருடி இருக்கின்றார் என்று குற்றம் சாட்டப் பட்டு இருக்கின்றார் என்பதையும் இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தே பார்த்தோம். சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இவற்றில் நற்சான்றுகள் உள்ளன, முஸ்லிம்களே, நீங்கள் சிந்திக்கத் தயாரா?


“கொள்ளைக்கரானிடம் ஒருவன் திருடும் பொழுது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கின்றார்.”
-இது ஒரு அமெரிக்கப் பழமொழி என்று பல இடங்களிலும், இந்தியப் பழமொழி என்று சில இடங்களிலும் குறிப்பிடப் பட்டு இருக்கின்றது. முஹம்மது நபி கடவுளையே சிரிக்க வைத்துவிட்டார். (பதிவாளர் கடவுள் நம்பிக்கை அற்றவர்)

-றிஷ்வின் இஸ்மத்
27.12.2021