தப்லீக் ஜமாத்தும் பயங்கரவாதமும் - சவுதியின் தடைக்கான காரணமும், ஆதாரமும்

 

தப்லீக் ஜமாத் அமைப்பை ‘பயங்கரவாதத்தின் நுழைவாயில்’ ( بوابات الإرهاب ) என்று அறிவித்து சவூதி அரேபியா தடை செய்துள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்தியா, இலங்கை உட்பட ஏனைய நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன எனும் முக்கியமான கேள்வி விடை வேண்டிக் காத்திருக்கின்றது. “மேற்கத்தேய மற்றும் இந்திய ஊடகங்களை நம்ப முடியாது, ஆகவே சவூதி அரேபியா தப்லீக் ஜமாத்தை தடை செய்ததற்கு குர்ஆன், ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டவும்” என்ற ரேஞ்சில் சில இஸ்லாமிய கத்துக்குட்டிகள் ஆதாரம் கேட்டுக் கொண்டு செய்தியை நம்பவே முடியாத அதிர்ச்சியில் காத்துக் கிடக்கின்றன. இது நாள் வரை “நான் தப்லீக் ஜமாத், சஹ்ரான் தான் பயங்கரவாதி, எனக்கும் சஹ்ரானுக்கும் சம்மந்தமில்லை” என்று தப்லீக் ஜமாத்தை வைத்து அப்பாவிகளை ஏமாற்றிக் கொண்டு இருந்த இஸ்லாமியவாதிகளும் இனிமேல் பயங்கரவாதத்தின் நுழைவாயில்களாகவே பார்க்கப்படுவார்கள்.

தப்லீக் ஜமாத் தொடர்பில் சவூதி அரேபியா மேற்கொண்ட அண்மைய தீர்மானம் தொடர்பில் ஊடகங்களில் வந்த செய்திகளை நம்பவும் முடியாமல், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கைத் தேடி அறிந்து கொள்ள போதிய அறிவும் இல்லாமல் ‘குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் தந்தால் மட்டும் தான் நம்புவோம்’ என்ற ரேஞ்சில் சிலர் இருப்பது வேடிக்கை அல்ல, ஏனென்றால் அவர்களின் அறிவின் தரம் அவ்வளவுதான். அதனால் தான் அவர்களால் குருட்டுத்தனமாக தங்களது மதத்தை இன்னுமும் நம்பிக்கொண்டு அதிலேயே மூழ்கிப் போய் இருக்க முடிகின்றது.

சவூதி அரேபியாவின் தப்லீக் ஜமாத் மீதான கெடுபிடி இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. பல வருடங்களுக்கு முன்னரே தப்லீக் ஜமாத்திற்கு தனது கதவுகளை சவூதி அரேபியா இறுக மூடிவிட்டது. தப்லீக் ஜமாத்தினர் ‘ஜமாத்தில் போவது’ அல்லது ‘அல்லாஹ்வின் பாதையில் போவது’ என்ற பெயரில் பள்ளிவாசலில் சோறு சமைத்துத் தின்று, குடித்து, குறட்டை விட்டுத் தூங்கி எழும்பி ஊர் ஊராகச் சுற்றி வருவதற்காக சவூதி அரேபியாவிற்குப் போக முடியாது, அங்கே அவர்களால் பிரச்சாரம் பண்ணவும் முடியாது. அதே போன்று சவூதி அரேபிய குடிமக்கள் யாரும் தப்லீக் ஜமாத்துடன் இணைந்து வேறு நாடுகளுக்கு ‘ஜமாத்தில் போகின்றேன், அல்லாஹ்வின் பாதையில் போகின்றேன்’ என்று போகவும் முடியாது. இந்தத் தகவலை நம்ப முடியாது என்று யாரவது சொல்வார்களாக இருந்தால், கடந்து 15 வருடங்களில் சவூதி அரேபியாவிற்குப் பிரச்சாரம் செய்யப் போன ஒரே ஜமாத்தைக் தேடிக் கண்டு பிடித்துக் காட்டும் படி சவால் விடுகின்றேன். இலங்கையில் இருந்து ‘அல்லாஹ்வின் பாதையில் போகின்றோம்’ என்று சொல்லிக் கொண்டு இந்தியா, இந்தோனேசியா, இங்கிலாந்துக்கு எல்லாம் ஜமாத்தில் போகின்றவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் கடந்த 15 வருடங்களில் அவ்வாறு சவூதி அரேபியாவிற்குப் போன ஒருவரையாவது காட்ட முடியுமா?

சவூதி அரேபியாயாவின் இஸ்லாமிய அறிஞர்கள் பல வருடங்களுக்கு முன்னரே தப்லீக் ஜமாத்திற்கு எதிரான தீர்மானத்தை எடுக்கக் காரணங்கள் பல இருந்தன. தப்லீக் ஜமாத்தினர் ‘பித்அத்’ (மதத்தில் புதுமைகள்) செய்கின்றார்கள், மதத்தை முறையாகக் கற்காத, தகுதியே இல்லாதவர்களைக் கொண்டு மக்களுக்கு பிரச்சாரம் செய்கின்றார்கள் போன்றவை முக்கியமான காரணங்களாக இருந்தன. தப்லீக் ஜமாத்தைப் பொறுத்தவரை அவர்களுடன் சிறிது காலம் ‘ஜமாத்தில் போன அரைகுறைகளை’ எல்லாம் அறிஞர்கள் ரேஞ்சுக்கு உயர்த்தி பள்ளிவாசல்களில் எழுந்து நின்று பிரச்சாரம் செய்ய வைக்கின்ற நடைமுறை உள்ளது. இந்த முறையற்ற நடவடிக்கையை சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாத்தை முறையாகக் கற்றவர்கள் மட்டுமே அடுத்தவர்களுக்கு அதனைப் பிரச்சாரம் செய்ய வேண்டும், தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் அல்ல என்பதே சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.


தப்லீக் ஜமாத்திற்கு சவூதி அரேபியாவில் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், கடந்த வாரம் வெளியான அறிக்கை அதிக முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஒரு முக்கியமான விடயமே ஆகும். அதாவது ‘தப்லீக் ஜமாத் பயங்கரவாதத்தின் நுழைவாயில்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதே அந்தக் காரணம் ஆகும். இந்த அடிப்படையில் நோக்கும் பொழுது தப்லீக் ஜமாத்துடன் தொடர்பு பட்டவர்களுக்கு இனிமேல் சவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப் பட வாய்ப்புள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் முதன் முதலாவதாக 1996 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பொழுது அதனை அதிகம் வரவேற்று, அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்ந்து கொண்டாடியவர்கள் தப்லீக் ஜமாத்தினரே என்பதை மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கும் சிறுவர்கள் ஆகியோரை அவர்களின் வீடுகளுக்கும், விளையாடும், கூடும் இடங்களுக்கும் தேடிச் சென்று வளைத்துப் பிடித்து பள்ளிவாசலுக்கு கொண்டு வந்து ‘அல்லாஹ்வின் பாதையில் போவது ஜிஹாத்’ என்று ஆரம்பித்து ‘சுவர்க்கம், கன்னிகள், ஜிஹாத், சஹாபாக்கள், நபி உயிருக்கும் மேலானவர்’ என்றெல்லாம் ஆசை காட்டி, மதவாதத்தை அவர்களின் மண்டைக்குள் திணித்து அதன் மூலம் அவர்கள் மனிதர்கள் என்ற நிலையில் இருந்து மதவெறியர்களாக திரிபடைய வழி ஏற்படுத்துவது தப்லீக் ஜமாத் அமைப்பினரே. தப்லீக் ஜமாத்தினரால் மூளைச் சலவை செய்து மதவெறியர்களாக மாற்றப்படும் ஒருவன் வஹ்ஹாபிசத்தின் பக்கம் சாய்கின்றான், அதிலிருந்து தலிபான், ISIS போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான். ஆகவே சாதாரண மனிதனாக வாழ்ந்த ஒருவனை பயங்கரவாதியாக மாற்றும் நுழைவாயிலாக தப்லீக் ஜமாத்தே செயற்படுகின்றது என்பதால் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் வார்த்தைகள் சரியானவையாகவே உள்ளன. இன்று இஸ்லாமியவாதிகளாக, ஜிஹாதிகளாக உள்ள பலருக்கும் இஸ்லாத்தை திணிக்கும் பணியை ஆரம்பித்து வைத்தது தப்லீக் ஜமாத்தாகவே இருக்கும்.

தப்லீக் ஜமாத்தைப் பொறுத்தவரை பொறுப்புக் கூறலில் இருந்து நழுவக் கூடிய ஒரு அமைப்பாகவே அது தன்னைக் கட்டமைத்துப் பேணி வருகின்றது. உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கு, பொதுக் கூட்ட, வருடாந்தக் கூட்ட அறிக்கைகள், பதவி நிலை தொடர்பான அறிவித்தல்கள், பதவித் தெரிவு தொடர்பான அறிக்கைகள், உத்தியோகபூர்வ இணையத்தளம், உத்தியோகபூர்வ பிரசுரங்கள், அங்கத்தவர் விபரக் கொத்து, படிவங்கள், அங்கத்தவர் அட்டை என்று எந்த விதமான ஆவணங்களும் இல்லாத நிலையிலேயே தப்லீக் ஜமாத் இயங்கி வருகின்றது. அத்துடன் தப்லீக் ஜமாத் மிகவும் பிற்போக்கான கொள்கைகள் மற்றும் பெண்வெறுப்புக் கொண்ட அமைப்பாகவும் உள்ளது. பெண்கள் முகத்தை மூட வேண்டும் எனும் கருத்தே இந்த அமைப்பில் காணப்படுகின்றது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெண்களை உயர் கல்விக்கு அனுமதிப்பதும் மிகக் குறைவாகவே உள்ளது. ஆக தப்லீக் ஜமாத் மீதான தடை வரவேற்கக் கூடிய ஒன்றே. மற்ற நாடுகளும் சவூதி அரேபியாவை இந்த விடயத்தில் பின்பற்ற வேண்டும்.

இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள், சினிமாக்கள் என்று சவூதி அரேபியா தற்காலத்திற்கு ஏற்ற விதமாக மனித நாகரீகத்தை நோக்கி முன் நகர்ந்து வரும் இந்த வேளையில் தப்லீக் ஜமாத் போன்ற இஸ்லாமிய பிற்போக்குவாத அமைப்பின் மீதான அந்த நாட்டின் தடையும், பார்வையும் நியாயமானவை என்பதை நடுநிலையாக சிந்திக்கும் அனைவருமே புரிந்து கொள்வார்கள்.

‘தப்லீக் ஜமாத் பயங்கரவாதத்தின் நுழைவாயில்’ எனும் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அறிவிப்புத் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தமது செய்திக்கு ஆதாரமாக அந்த அமைச்சின் டிசம்பர் 6 ஆம் திகதிய ஆங்கில டுவிட்டர் பதிவை இணைந்து இருந்தன. குறித்த டுவிட்டர் கணக்கு உறுதி செய்யப்பட்ட கணக்கு அல்ல, ஆகவே செய்திகள் பொய்யானவை எனும் சந்தேகம் செய்தியை நம்ப மறுக்கும், அரைகுறை அறிவுள்ள இஸ்லாமியவாதிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. குறித்த ஆங்கில டுவிட்டர் கணக்கு உறுதி செய்யப்பட்ட கணக்கு அல்ல என்பது மட்டும் உண்மை தான், காரணம் ஒரு அமைச்சிற்கு, நிறுவனத்திற்கு ஒரு உறுதி செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கையே செயற்படுத்த முடியும். அந்த வகையில் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு அரபு மொழியிலான டுவிட்டர் கணக்கையே உறுதி செய்யப்பட முதல் நிலைக் கணக்காக பயன்படுத்துகின்றது. அந்த உறுதிசெய்யப்பட்ட அரபு மொழி டுவிட்டர் கணக்கிலும் தப்லீக் ஜமாத் தொடர்பான அறிவித்தல் டிசம்பர் 6 ஆம் திகதி அரபு மொழியில் வெளியிடப்பட்டு உள்ளது : https://twitter.com/Saudi_Moia/status/1467836643612794887 தேடக் கூடிய, சிந்திக்கக் கூடிய அறிவுள்ள மக்களுக்கு இதில் நற்சான்று உள்ளது.

தப்லீக் ஜமாத்தை மட்டும் தடை செய்வதாலோ, தப்லீக் ஜமாத்தை மட்டும் ‘பயங்கரவாதத்தின் நுழைவாயில்’ என்று அறிவிப்பதனாலோ பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை, மாறாக பயங்கரவாதத்தின் உண்மையான நுழைவாயிலான ‘மதீனா இஸ்லாம்’ தடை செய்யப்பட வேண்டும்.

-றிஷ்வின் இஸ்மத்
12.12.2021