படகு விபத்து முன்னறிவிப்பும், வேத நூற்களின் விஞ்ஞானமும்


இலங்கையின் கிழக்கில் உள்ள கிண்ணியாவில் பலர் உயிரிழப்பதற்குக் காரணமாக அமைந்த படகு விபத்து நிகழ்வதற்கு சுமார் 9 மணித்தியாலங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் பதிவிட்ட பேஸ்புக் நிலைத் தகவலே இது.


“இரு படகில் கால் வைத்து
 பயணிப்பதில்
 நம்மவர்கள் மிகத்
 திறமைசாலிகள்!

#கவிழ்ந்தால்_தெரியும்.”

https://www.facebook.com/mohamed.naleer.562/posts/10221012617929274


நண்பர் இந்த நிலைத் தகவலை 22.11.2021 அன்று இரவு 10.25 இற்கு பதிவிட்டுள்ளார், படகு விபத்து மறுநாள் ( 23.11.2021) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இந்த நிலைத்தகவலில் உள்ள "நம்மவர்கள்" (இறந்தவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்), "படகு", "கவிழ்தல்" ஆகிய சொற்களை மட்டும் தேர்வு செய்து ஹைலைட் பண்ணிவிட்டு ஏனைய சொற்களை வசதியாக புறக்கணித்து விட்டால் இதனைக் கூட தீர்க்கதரிசனம் அல்லது முன்னறிவிப்பு என்று சொல்லி காதிலே பூச்சுற்ற முடியும். அதிலும் இதனை பிரெஞ்சு அல்லது அரபு மொழியில் சற்றுக் குழப்பமான கவிதை மொழிநடையில் எழுதி இருந்திருந்தால் வளைத்து விளையாடுவதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். அடுத்த 9 மணி நேரத்தில் நிகழப் போகும் படகு விபத்தைப் பற்றிய முன்னறிவித்தல் அல்லது தீர்க்கதரிசனம் தான் இந்த நிலைத்தகவலில் சொல்லப்பட்டு இருந்தது என்று கூறி குறித்த நபருக்கு இறைதூதர் அந்தஸ்து வழங்கியோ, அல்லது அவருக்குள் எதோ அதிசய / மாய சக்தி இருக்கின்றது என்றோ ஓட்டி இருந்தாலும் கூட பலர் அதனை நம்பி இருப்பார்கள். உண்மையில் குறித்த நிலைத் தகவலுக்கும் படகு விபத்திற்கும் எந்த தொடர்புமே இல்லை, இது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான ஒரு நிலைத்தகவல் மட்டுமே.

 

குர்ஆனிலும், ஏனைய வேத நூல்களிலும், நொஸ்ட்ரதாமஸ் போன்றவர்கள் எழுதிய நூல்களிலும் நவீன விஞ்ஞானம் இருக்கின்றது, சமகால அறிவியல் இருக்கின்றது, முன்னறிவிப்புகள் இருக்கின்றன, தீர்க்க தரிசனங்கள் இருக்கின்றன என்று விளம்பரப் படுத்துவது எல்லாமே கலப்படமற்ற உருட்டல்கள் தானே தவிர உண்மைகள் அல்ல.

 

குர்ஆனிலோ அல்லது ஏனைய வேத நூற்களிலோ நவீன விஞ்ஞானம், சமகால அறிவியல் ஆகியன இருப்பது உண்மையாக இருந்தால் அந்த நூற்களை மட்டும் படித்து நேரடியாக அவற்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட நவீன கண்டு பிடிப்பு என்று ஒன்றைக் கூட ஆதாரபூர்வமாகக் காட்ட முடியுமா? இதுவரை அப்படியான ஒன்றைக் கூட யாராலும் காட்ட முடிந்ததில்லை. ஒருவர் தனது கல்வி, அறிவியல், சிந்தனை, முயற்சி, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் சிரமப்பட்டு ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த பின்னர், மேலே உள்ள நிலைத்தகவலை வளைத்து படகு விபத்துடன் முடிச்சுப் போட முடியுமாக இருப்பது போன்று, வேத நூற்களில் உள்ள சம்மந்தமே இல்லாத ஏதாவது ஒரு வசனத்தை எடுத்து வளைத்து 'இந்த கண்டுபிடிப்பைப் பற்றித்தான் எமது வேத நூலில் சொல்லப் பட்டுள்ளது' என்று உருட்டுவதுதான் காலா காலமாக நடைபெற்று வருகின்றது.

 

அதே போன்று குர்ஆன் போன்ற வேத நூற்களிலோ நொஸ்ட்ரதாமஸ் போன்றவர்கள் எழுதிய நூற்களிலோ உள்ளதாகச் சொல்லப்படும் முன்னறிவுப்புகள், தீர்க்கதரிசனங்களைப் பயன்படுத்தி உலகத்தில் நிகழ இருந்த ஏதாவது பாரிய ஆபத்துக்கள் தடுக்கப்பட்டதாக அல்லது அவற்றில் இருந்து பொதுமக்கள் காப்பற்றப் பட்டதாக ஒரு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தகவலையாவது எடுத்துக் காட்ட முடியுமா? மேற்சொன்ன வாறான நூல்களில் உள்ள முன்னறிவுப்புகள், தீர்கதரிசனங்களின் பயனாக தடுக்கபப்ட்ட ஒரு ஆபத்து தொடர்பான தகவலோ, காப்பற்றப்பட்ட ஒரு நபர் தொடர்பான பதிவோ வரலாற்றில் எங்கேயும் இல்லை. மாறாக ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது அனர்த்தமோ நிகழ்ந்து முடிந்த பின்னர் ‘இதுதான் குறித்த நூலிலே’ சொல்லப்பட்டுள்ளது’ என்று உருட்டுவதை மட்டும் தான் கண்டு வருகின்றோம்.



குர்ஆனிலும்
, ஏனைய வேத நூல்களிலும், நொஸ்ட்ரதாமஸ் போன்றவர்கள் எழுதிய நூல்களிலும் நவீன விஞ்ஞானம் இருக்கின்றது, சமகால அறிவியல் இருக்கின்றது, முன்னறிவிப்புகள் இருக்கின்றன, தீர்க்க தரிசனங்கள் இருக்கின்றன என்று யாராவது உருட்டினால் உறுதியாக எதிர்க் கேள்வி கேளுங்கள், ஆதாரங்களைக் கேளுங்கள், அப்படிச் செய்யாமல் உருட்டுக்களை உண்மை என்று நம்பி ஏமாறாதீர்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
 
24.11.2021