முஸ்லிம் – இஸ்லாமியவாதி – ஜிஹாதி : அவசியம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வேறுபாடுகள்!



முஹம்மது நபியின் சித்திரத்தை வகுப்பறையில் காட்சிப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு குத்திக் கொலை செய்யப்பட்ட பிரஞ்சு பள்ளிக்கூட ஆசிரியர் சாமுவேல் படியின் நினைவு தினத்தை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் தாக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சில ஊடகங்கள், அந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களை வெறுமனே ‘முஸ்லிம்கள்’ என்று அடையாளப் படுத்தி இருந்தமையைக் காண முடிந்தது. முஸ்லிம், இஸ்லாமியவாதி, ஜிஹாதி போன்ற சொற்பிரயோகங்களிற்கு இடையிலான வேறுபாடு குறித்து பொதுப் பரப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற தன்மையின் ஒரு எடுத்துக் காட்டாகவே ஸ்டுட்கார்ட் தாக்குதல் தொடர்பான செய்திகள் அமைந்துள்ளன. அரசியல் பரப்பிலும், ஊடகப் பரப்பிலும், சமூக ஊடகங்களிலும் இந்த சொற்பிரயோகங்கள் தொடர்பான தெளிவற்ற தன்மையைத் தொடர்ந்தும் அவதானிக்க முடிகின்றது. இந்தத் தெளிவற்ற தன்மை அப்பாவிகள் மீதான வன்மத்திற்கு வழிவகுக்கின்றது.



முஸ்லிம்கள் என்பவர்கள் மற்ற அனைவரையும் போன்று சாதாரண மனிதர்களே. அவர்கள் இஸ்லாத்தை தங்களது மதமாக ஏற்றுப் பின்பற்றக் கூடியவர்கள். இஸ்லாம் என்பது அவர்களுடைய மத நம்பிக்கை
, அதனை அவர்கள் தேவையான நேரத்தில் மட்டும் தனி மனித நம்பிக்கை என்ற அடிப்படையில் பின்பற்றிக்கொண்டு, ஏனைய பொழுதுகளில் சாதாரண மனிதர்களாக வாழக் கூடியவர்கள். சனத்தொகைக் கணக்கெடுப்புக்களில் ‘முஸ்லிம்கள்’ என்று அடையாளப் படுத்தப் படுகின்றவர்களில் இத்தகையவர்களே பெரும்பான்மையினர் ஆவர். இவர்களில் சிலர் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுகை செய்யக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தொழுகை மேற்கொள்ளக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் தொழுகையில் ஈடுபடக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டோ மூன்றோ தடவைகள் மட்டும் தொழுகையில் ஈடுபடக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களே முஸ்லிம்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கப் படுகின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது அவர்களது முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்து இருக்காது.



முஸ்லிம்களுக்குள்ளேயே மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு அந்தச் சமூகத்தையே தமது மறைமுகக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் ஒரு ஆதிக்கப் பிரிவினர் இருக்கின்றார்கள்
, அவர்கள் ‘இஸ்லாமியவாதிகள்’ என்று அறியப்படுகின்றார்கள். இவர்கள் குறித்த உண்மைகள் பொதுப் பரப்பில் பெருமளவில் இதுவரை வெளிச்சத்திற்கு வந்ததில்லை. இஸ்லாம் மட்டும் தான் முழு உலகையும் ஆட்சி செய்ய வேண்டும், இஸ்லாம் மட்டுமே உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வு, உலகத்தில் உள்ள அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள பிரகாரமே நடக்க வேண்டும், அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும், உலகத்தில் உள்ள அனைவருக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டும்,  இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுடன் யுத்தம் செய்ய வேண்டும், இஸ்லாத்திற்காக உயிர் தியாகம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு ஆபத்தான ரகசிய கருத்துக்களைக் கொண்டவர்களாக, அவற்றிற்காக பல்வேறு தளங்களில் நீண்டகாலத் திட்டங்களுடன் செயற்படக் கூடியவர்களாக இஸ்லாமியவாதிகள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் நீண்ட பற்றைத் தாடியுடன் அரேபிய உடையில் காணப்படுவார்கள் என்று கருதினால் அது தவறாகும். இவர்களில் அதிகமானவர்கள் நாகரீகமான தோற்றத்தில் உள்ளவர்களாகவும், பல்வேறு துறைகளில், தளங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊடுருவியவர்களாகவும் கூட இருப்பார்கள். இவர்கள் நேரடியாக வன்முறைகளில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள், எனினும் வன்முறையில், பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்களை உருவாக்கும் திறன் கொண்டவர்களாகவும், தேவைப் படும் பொழுது மட்டும் தாமே அவற்றில் நேரடியாக ஈடுபடும் ஆற்றல் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். அடக்குமுறைக்கு உள்ளாகும் முஸ்லிம்கள் மீது கரிசனை செலுத்தும் இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் போன்ற தரப்புக்களை தமது நோக்கங்களை அடைவதற்காக சூட்சுமமாக பயன்படுத்துவதிலும், அரசியல் கருத்தாதரவு தேடுவதிலும் (lobbying) வல்லவர்களாக இவர்கள் இருப்பார்கள்.



இஸ்லாமிய மூலாதார நூல்களில் காணப்படும் வன்முறை
, பாலியல் பாகுபாடு, அறிவியல் முரண்பாடுகள், மூட நம்பிக்கைகள் போன்ற விடயங்களை அழகிய வார்த்தைகள் கொண்டு தந்திரமாக நியாயப் படுத்தும் திறன் கொண்டவர்களாகக் காணப்படும் ‘இஸ்லாமியவாதிகள், தாம் பேனாவைக் கொண்டு ஜிஹாத் செய்வதாக கருதுகின்றார்கள். ஜிஹாதிய பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்ளும் பொழுது அவை தொடர்பான நேரெதிரான நிலைப்பாடுகளை சந்தர்ப்பத்திற்கு தகுந்த விதமாக இஸ்லாமியவாதிகள் மேற்கொள்வார்கள். உலகின் பார்வையைப் பொறுத்து அவர்கள் தமது நிலைப்பாட்டை வடிவமைத்துக் கொள்வார்கள். ‘இஸ்லாத்திற்கும் இதற்கும் சம்மந்தமில்லை’ என்ற நழுவலை அதிகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் பயன்படுத்துவதுடன், சில சந்தர்ப்பங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப் படுத்த சுதந்திரப் போராட்டங்களை உதாரணம் காட்டுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரு திட்டமிடலுக்கு அமைய தமக்கு வழங்கப்பட்ட பணியை மேற்கொள்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். கல்வி, நிர்வாகம், ஊடகம், அரசு சாரா நிறுவனங்கள், சமூக சேவை போன்ற துறைகளுக்குள் இவர்களின் ஊடுருவல்கள் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட ரீதியில் இடம்பெற்றுள்ளன.



இலங்கை அரசாங்கம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் இஸ்லாம் பாடப் புத்தகங்களில் வன்முறையையும்
, வெறுப்பையும் தூண்டும் விடயங்கள் இடம்பெற்றிருப்பது, ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பல்வேறு பெயர்களில் நடாத்தும் வதிவிடப் பயிற்சிகளுக்கு அரச திணைக்கள அங்கீகாரம் வழங்கப்பட்டமை, அரசாங்க இலட்சினையைப் பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொள்ளப் பட்டமை போன்ற விடயங்கள் இஸ்லாமிய வாதிகளின் திட்டமிட்ட ஊடுருவலின் விளைவாக ஏற்பட்டவற்றுள் ஒரு சிலவாகும்.

 

மூன்றாவது தரப்பினரான ‘ஜிஹாதிகள்’ பொதுவாகவே இஸ்லாமியவாதிகளில் இருந்து உருவாகுகின்றவர்கள் ஆவார்கள். இஸ்லாமியவாதிகள் எவற்றை நம்புகின்றார்களோ, எவற்றை செயற்படுத்த நீண்டகாலத் திட்டங்களுடன் செயற்படுகின்றார்களோ, அவற்றை வன்முறை, ஆயுதம் ஆகியவற்றின் மூலம் அடைவதற்காக முயல்பவர்களே ஜிஹாதிகள் ஆவார்கள். தாக்குதலுக்கு தயாராகும் வரை இவர்கள் இஸ்லாமியவாதிகளாகவே இருப்பார்கள். இஸ்லாமியவாதியாக இருக்காத ஒரு முஸ்லிம் நேரடியாக ஜிஹாதியாக உருவாகுவது என்பது மிக மிக அரிதான ஒன்றாகும். ஒரு ஜிஹாதிய தற்கொலைக் கொண்டுதாரியால் ஒரு தடவை மட்டுமே தற்கொலைத் தாக்குதல் நடத்த முடியும், ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியவாதிக்கும் எண்ணற்ற ஜிஹாதி தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கும் திறன் உள்ளது.



இன்று வரை இஸ்லாமியவாதிகளையும்
, அவர்களின் இரகசிய திட்டங்களையும் தொடர்ந்தும் அம்பலப் படுத்தி வருகின்றேன். அதற்காக அவர்கள் உடனடியாகவே வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க போகின்றார்கள் என்று கருதிவிட முடியாது, அவர்கள் தங்கள் திட்டங்களை செயற்படுத்த போதுமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்வார்கள். சரியான சந்தர்ப்பம் வரும் பொழுது தான் செயற்படுவார்கள், ஆகவே அது உடனடியாக நடந்துவிடும் என்று கூற முடியாது. சஹ்ரான் மற்றும் அவரது ஐஎஸ்ஐஎஸ் ஈடுபாட்டைப் பற்றி நான் எனது முதல் புகாரை 2016 ஜூலையில் பாதுகாப்புத் தரப்பினரிடம் மேற்கொண்டேன், ஆனால் உடனடியாக எதுவும் நடக்கவில்லை, மாறாக சுமார் 03 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சஹ்ரானும் அவரது தோழர்களும் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களை உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தினார்கள். ஆகவே இன்று செயற்பட்டுக் கொண்டு இருக்கும் இஸ்லாமிய வாதிகள் எப்பொழுது தமது நீண்டகாலத் திட்டங்களை செயற்படுத்துவார்கள் என்று இலகுவாக கணித்துவிட முடியாது. 2016 ஜூலைக்கு முன்னர் சஹ்ரானின் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து வேறு யாரேனும் புகார் அளித்ததாக எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் எனக்கு தெரியாது. எனினும் குண்டுத் தாக்குதல்கள் இடம் பெற்ற பின்னர் பல இஸ்லாமியவாதிகள் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தமது முன்னைய பதிவுகளை நீக்கிவிட்டு சஹ்ரானுக்கு எதிரான பதிவுகளை பகிர்ந்து தாம் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று மற்றவர்களை நம்ப வைக்க முயன்றார்கள். மாவனல்லை புத்தர் சிலை உடைப்பைத் தொடர்ந்து மாவனல்லையைச் சேர்ந்த தஸ்லீம் சுடப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரைச் சுட்டவர்களை நான் அம்பலப்படுத்தியபோது, ​​ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமியுடன் தொடர்புடையவர்கள் என்னை மெளனமாக்க முயற்சி செய்தனர்.



ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி ஒரு நீண்ட காலத் திட்டத்துடன் செயற்பட்டு வரும் ஒரு ஜிஹாதிய
, இஸ்லாமியவாத அமைப்பாகும். இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் செய்வதற்காக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததில் முன்னோடி இவர்களே. இன்று இலங்கையில் செயற்படும் அதிகமான இஸ்லாமியவாதிகள் ஜமாத்தே இஸ்லாமியினால் பயிற்றுவிக்கப் பட்டு உருவாக்கப் பட்டவர்களே. சாதாரண முஸ்லிம்கள் வேறு, இஸ்லாமியவாதிகள் வேறு என்பது உண்மையாக இருந்தாலும் இதனை இஸ்லாமியவாதிகள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனை மற்றவர்கள் தெரிந்து கொள்வதையும் விரும்ப மாட்டர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்குள் பதுங்கிக் கொண்டு, தாங்களும் முஸ்லிம்களும் ஒன்றுதான் என்று காட்டவே முயல்வார்கள். இஸ்லாமியவாதிகள் தமது பிரச்சினைகள், தமக்கெதிரான விமர்சனங்கள் ஆகியவற்றை ‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவையாக’ சித்தரித்து அனுதாபம் தேடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அத்துடன் ‘இஸ்லாமோபோபியா எனும் சொற்பதத்தைத் திறமையாகப் பயன்படுத்தி தமக்கெதிரான கேள்விகள், விமர்சனங்களை மெளனிக்க வைப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.


இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் இயங்கும் முக்கிய அமைப்பான ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர், 26.10.2020 அன்று ஜனாதிபதி விசாரணை அணைக்குழு முன்னிலையில் ‘இலங்கையில் எல்லா முஸ்லிம்களும் இஸ்லாமிய தேசத்தைப் பற்றிப் பேசுவார்கள் என்ற விதமாகக் குறிப்பிட்டது கூட மேலே சொன்ன வாறானதொரு தந்திர முயற்சியாகவே காணப் படுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை இருவாக்கும் ஜமாத்தே இஸ்லாமியின் இரகசிய திட்டம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டதும், அதனை முழு முஸ்லிம் சமூகத்தினதும் திட்டமாக சித்தரிக்க முயன்று, முழு முஸ்லிம் சமூகத்தையுமே இஸ்லாமியவாதிகளாக காட்டவே ஹஜ்ஜுல் அக்பர் முயன்றுள்ளார். சாதாரண முஸ்லிம்கள் வேறு, இஸ்லாமியவாதிகள் வேறு என்ற உண்மை வெளிப்பாடு விடக் கூடாது என்பது இஸ்லாமியவாதிகளின் கரிசனைகளில் முக்கியமான ஒன்று. முஸ்லிம்களுக்குள் கலந்து இருப்பதே தமக்கு பாதுகாப்பு என்பதை இஸ்லாமியவாதிகள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். எனினும் இஸ்லாமியவாதிகளை இனம் கண்டு அம்பலப் படுத்துவதற்கும், அவர்களை ஒதுக்கிப் புறக்கணிப்பதற்கும் முஸ்லிம் சமூகம் உறுதியுடன் முன்வர வேண்டும், இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகம் மீண்டும் மீண்டும் ஆபத்திற்குள் தள்ளப் படலாம்.

 

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ‘சூபி முஸ்லிம்கள் நல்லவர்கள், அவர்களால் நாட்டுக்கு ஆபத்து இல்லை எனும் கருத்து பிரபல்யமடைந்துள்ள நிலையில் இன்று பல இஸ்லாமியவாதிகள் சூபி முகமூடியை அணிந்து தம்மை சூபிகளாக வெளிக்காட்டிக் கொள்வதிலும், மெளலானா ரூமி போன்ற சூபி மகான்களின் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இஸ்லாமியவாதிகளின் இந்த பச்சோந்தித் தனம் குறித்து சூபி முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.



‘இஸ்லாமியவாதிகள்
குறித்து இதுவரை பகிரங்கப் படுத்தப்படாத விடயங்களை முன்னாள் முஸ்லிமும், முன்னாள் இஸ்லாமியவாதியுமான நான் அம்பலப் படுத்துவது எனது உயிருக்கு ஆபத்தாக அமையலாம், எனினும் மெளனிக்க வைக்கப் பட்டாலன்றி நானாக மெளனித்துவிடப் போவதில்லை. இஸ்லாமிவாதிகள், ஜிஹாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் திட்டங்கள், போதனைகள் குறித்து தொடர்ந்தும் அம்பலப் படுத்துவேன், எனது கடைசி மூச்சு இருக்கும் வரை அதற்கு முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.


முஸ்லிம் சமூகம் முஸ்லிம் தலைவர்களால் வழிநடாத்தப்பட்டு வந்த காலத்தில் அது சட்டம், கல்வி
, தொழில், விளையாட்டு என்று பல அடைவுகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொண்டது. இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் பல சலுகைகள், உரிமைகள் போன்றவை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்கப் பட்டவையாகும். அந்தக் காலப் பகுதியில் முஸ்லிம்கள் மற்ற சமூகத்தவர்களால் பெரிதும் மதிக்கப் பட்டார்கள். ஆனால் எப்பொழுது முஸ்லிம் சமூகத்தின் தலைமையை முஸ்லிம் தலைவர்களிடம் இருந்து இஸ்லாமியவாதிகள் கைப்பற்ற ஆரம்பித்தார்களோ, அன்றில் இருந்து முஸ்லிம் சமூகம் மற்றவர்களால் வெறுக்கப்படுகின்ற சமூகமாக மாற ஆரம்பித்தது. இஸ்லாமியவாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்ததெல்லாம் அந்த சமூகத்திற்குள் தீவிரவாத சிந்தனையை உட்செலுத்தியதும், முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு அறிமுகமாக்கிக் கொடுத்ததும், அவர்களுக்குள்ளேயே பயங்கரவாத்தை உருவாக்கியதுமே ஆகும். முஸ்லிம்களால் அமைதி வழியில் ஒரு மதமாக மட்டும் பின்பற்றப் பட்டு வந்த இஸ்லாத்தை, மற்ற அனைத்து அரசியல் சமூக சித்தாந்தங்களையும் அழித்துவிட்டு தான் மட்டுமே ஆளவேண்டும் என்று நினைக்கின்ற பாசிச சித்தாந்தமாக மாற்றி அறிமுகம் செய்து வைத்த கேவலம் இஸ்லாமியவாதிகளையே சாரும். அமைதிவழியில் மதமாக பின்பற்றப்பட்டு வந்த இஸ்லாம் என்று ஒரு பாசிச அரசியல் சித்தாந்தமாக முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமியவாதிகளால் திணிக்கப் பட்டதோ (அல்லது அறிமுகம் செய்யப்பட்டதோ), அன்றில் இருந்து முஸ்லிம்களும், மற்றவர்களும் தமது நிம்மதியை இழக்க ஆரம்பித்தார்கள்.




இஸ்லாமியவாதிகளிடம் இருந்து முஸ்லிம்களை மீட்க
வேண்டிய பொறுப்பு மனிதநேயம் உள்ள அனைவருக்கும் உள்ளது. இஸ்லாமியவாதிகள் வேறு, முஸ்லிம்கள் வேறு என்கின்ற வேறுபாட்டை பல இடதுசாரிகளும், முற்போக்கு சிந்தனையாளர்களும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர், அல்லது புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றனர். அதன் காரணமாக சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம் என்று கூறும் இடதுசாரிகளும், முற்போக்குவாதிகளும் உண்மையில் முஸ்லிம்களை ஒடுக்கும் இஸ்லாமியவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு உள்ளனர். முஸ்லிம்களை நேசிப்பவர்கள் அவர்களை இஸ்லாமியவாதிகளிடம் இருந்து விடுதலை செய்வதற்காக முயற்சி செய்ய வேண்டுமே தவிர, இஸ்லாமியவதிகளுடன் கைகோர்க்கக் கூடாது. தாம் கைகோர்த்து இருப்பது அடக்கு முறைக்கு உள்ளன முஸ்லிம்கள் மற்றும் முன்னாள் முஸ்லிம்களுடனா அல்லது அடக்குமுறையாளர்களான இஸ்லாமியவாதிகளுடனா என்பது குறித்து முற்போக்கு சக்திகளும், இடதுசாரிகளும் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடக்குமுறைக்கு உள்ளகின்றவர்கள் குறித்து உண்மையாகவே அக்கறை இருக்குமானால், அடக்குமுறைக்கு உள்ளனவர்களுடன் இருக்கின்றோம் என்று வாயால் மட்டும் கூறிக்கொண்டு, அல்லது நினைத்துக் கொண்டு அடக்குமுறையாளர்களுடன் கை கோர்க்கும் முரண்பட்ட செயலை இனிமேலும் அவர்கள் செய்யக் கூடாது.



நாம் மீண்டும் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் தாக்குதல் சம்பவத்திற்கே வருவோம். பிரான்சில் பள்ளி ஆசிரியர் சாமுவேல் படியை கொலை செய்தவனை ஜிஹாதி என்று அழைப்பதும்
, சாமுவேல் படியின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தாக்கியவர்களை ஜிஹாதிகள் அல்லது இஸ்லாமியவாதிகள் என்றும் அழைப்பதுமே பொருத்தமானதாகும். இத்தகைவர்களை முஸ்லிம்கள் என்று பொதுமைப்படுத்தி அழைப்பது மிகத் தவறான ஒன்றாக அமைவதுடன், அது முஸ்லிம் வெறுப்பு உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றது. ஆகவே இனிமேல் முஸ்லிம்கள் என்று பொதுப்படையாகக் குறிப்பிடாமல், பொருத்தமான இடங்களில் ஜிஹாதி, இஸ்லாமியவாதி ஆகிய பிரயோகங்களை பயன்படுத்துவதே சரியானதாக அமையும்.


- றிஷ்வின் இஸ்மத்
   09.11.2021