
மூடர் கூட்டம்
திரைப்பட இயக்குனர் நவீன் முகமது அலி ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். ‘வரலாறும்
அறிவியலும் படித்தாலே குர்ஆன், பைபள் என்பவை
பொய் என்று புரிந்து கொள்ளலாம்’ என்ற ரீதியில் ஒரு கருத்தை அவர் அண்மையில் டுவீட்
செய்து இருந்தார். அதற்கு பதிலளிக்கின்றோம் என்று புறப்பட்ட இஸ்லாமியவாதிகள்
‘மிகப்பெரிய நாத்தீகரும், பகுத்தறிவுவாதியுமான
பெரியார்தாசனே குர்ஆனைப் படித்து அது அறிவியல் உண்மை என்று உணர்ந்து இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டார், நவீன் முகமது
அலிக்கு இஸ்லாமே தெரியாது’ என்ற கோசத்துடன் பதில் சொல்லி இருந்தார்கள்.
பெரியார்தாசன் நாத்தீகராக, பகுத்தறிவுவாதியாக
இருந்த நிலையில் தான் இஸ்லாத்தை ஏற்றார் என்கின்ற பொய்யான கருத்து மீண்டும்
மீண்டும் வேண்டுமென்றே மக்கள் மயப்படுத்தப் படுவதனாலும், முஸ்லிம்கள் அதனை உண்மை என்று நம்பிக்கொண்டு சுய சிந்தனை
அற்று இருப்பதனாலும் இதுவரை அதிகம் பேர் அறியாத உண்மைகளை மக்கள் மயப்படுத்த
வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
கிளப்ஹவுசில்
தன்னை ‘மிகப்பெரிய முன்னாள் நாத்தீகன்’ என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும்
இஸ்லாமிஸ்ட் ஒருவருடன் நண்பர் ஆய்வுகூடம் வசந்தன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர்
ஒரு விவாதம் செய்திருந்தார். அவர் அறிந்த நாத்தீக கருத்துக்கள் என்ன, எதற்காக, எப்படி நாத்தீகராக மாறினார் என்று வசந்தன் கேள்வி கேட்ட
பொழுது ‘முஸ்லிமாகப் பிறந்த தான் தினமும் போதைப் பொருள் பாவித்ததாகவும், மது அருந்தியதாகவும், எப்பொழுதும் போதையில் இருந்ததாகவும், ஐந்து வார்த்தைகள் பேசினால் அவற்றில் மூன்று கெட்ட
வார்த்தைகள் இருக்கும் என்றும், அடிக்கடி அடிதடி
சண்டைக்கு போவதாவும், தற்கொலை
செய்துகொள்ள முயற்சித்ததாகவும்’ கூறி அதுதான் உலகிலேயே பெரிய நாத்தீகம், அதிலிருந்து மீண்டுதான் மறுபடி இஸ்லாத்திற்கு
வந்தேன்’ என்று அவர் பதில் சொன்னார். வசந்தன் கேட்ட அறிவியல் ரீதியான எந்தக்
கேள்விக்குமே அவரிடம் ஒரு உருப்படியான பதில் கூட இருந்திருக்கவில்லை. ஆக ஒரு
‘முன்னாள் போதைப்பொருள் அடிமை’ தன்னை ‘முன்னாள் நாத்தீகன்’ என்று தப்பாக அறிமுகம்
செய்து கொண்டதற்கு ஒப்பான ஒரு செயலாகத்தான் பெரியார்தாசன் பகுத்தறிவுவாதியாக,
நாத்தீகனாக இருந்த நிலையில் இஸ்லாத்திற்கு
நேரடியாக மதம் மாறினார் என்று மேற்கொள்ளப்படுகின்ற பரப்புரையும் அமைந்துள்ளது.
ஊடகவியலாளரும்,
பறையோசை பதிப்பகருமான முன்னாள் முஸ்லிம் சாகித்
அவர்கள் ‘நாளை விடியும்’ எனும் பத்திரிகைக்காக பெரியார்தாசனை பேட்டி காண
முயற்சிகள் செய்த பொழுது பெரியார்தாசன் கூறிய விடயங்கள் மிக முக்கியமானவை. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார்தாசன்
கோயம்புத்தூரில் இருந்த பொழுது அவருக்கும், சாகித் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலை
மையப்படுத்தி, அதன்
ஒலிப்பதிவுடன் கடந்த புதன்கிழமை கிளப்ஹவுசில் இடம்பெற்ற நிகழ்வு பலருக்கும்
உண்மையை எடுத்துரைக்க கூடிய ஒன்றாக அமைந்திருந்தது, அது இரண்டு பாகங்களாக யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு
உள்ளது.
1. https://youtu.be/Sm58LUuQYNs
2. https://youtu.be/_AudNMuF8_c
குர்ஆனை 5 விதமான ஆய்வு முறைகளின் கீழ் இரண்டரை
வருடங்கள் ஆராய்ந்து அதன் பின்னரே இஸ்லாத்திற்கு மதம் மாறியதாக முஸ்லிம்களின்
மேடையிலே வீராப்புப் பேசுகின்றார் பெரியார்தாசன், அதைக் கேட்டுப் புல்லரித்துப் போகும் அப்பாவி முஸ்லிம்கள்
“நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்” என்று கோசம் போடுகின்றார்கள்.
அந்த உரையை இங்கே
கேட்கலாம் : https://youtu.be/VxLk_9cEdOk
விஷயம் தெரியாத
அல்லது உருப்படியாகக் கேள்வி கேட்கத் தெரியாத அப்பாவி முஸ்லிம் மக்களின் மத்தியில்
வீராப்பாகப் பேசும் பெரியார்தாசன், பத்திரிகை
நிருபரான ஒரு முன்னாள் முஸ்லிமைக் கண்டதும் பெட்டிப் பாம்பாக அடங்கிப்
போய்விடுகின்றார். ‘நான் குர்ஆனைப் படிக்கவே இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது, என்னை விட்டுவிடுங்கள் ஐயா’ என்று கெஞ்சுகின்றார். யாருமே
எதிர்க் கேள்வி கேட்க மாட்டார்கள் எனும் பொழுது பாமரர்கள் மத்தியில் வாய்க்கு
வந்ததை எல்லாம் அடித்து விடுவதும், ஒருவர் அறிவியல்
பூர்வமாக கேள்வி கேட்கப் போகின்றார் என்று அறிந்ததும் பெட்டிப் பாம்பாக அடங்கி,
ஒடுங்கி, நாணிக் குறுகி நழுவிச் செல்வதும் பகுத்தறிவு அல்ல, கற்ற மனிதன் செய்யக்கூடிய செயலும் அல்ல.
மேடையில் பேசிய வீராப்பை எல்லாம் கையிடுக்கில் ஒழித்து வைத்துவிட்டு, ‘தான் 20 வருடங்களாக நாத்தீகனாக இருக்கவில்லை, 32 ஆண்டுகளாக திராவிடக் கழகத்தில் இருக்கவில்லை, குரானை ஆராயவில்லை’ என்றெல்லாம் சொல்லி எஸ்கேப்
ஆகப் பார்க்கின்றார் பெரியார்தாசன். இப்படிப்பட்ட ஒருவரைத் தூக்கிக் கொண்டு வந்து
‘பெரும் நாத்தீகர், சிறந்த
பகுத்தறிவுவாதி, தலைசிறந்த
பெரியாரியவாதி இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்டார்’ என்றெல்லாம் முழக்கம் செய்வது,
ஒரு முன்னாள் போதைப் பொருள் அடிமை தன்னை மிகப்
பெரிய முன்னாள் நாத்தீகன் என்று சுய தம்பட்டம் அடித்து மூக்குடைபட்டது போன்ற ஒரு
செயலே.
பல வருடங்கள்
நாத்தீகம் பேசாத, பகுத்தறிவுச்
சிந்தனை பேசாத ஒருவராக பெளத்த மதத்திற்கு சென்று சித்தார்த்தன் என்று பெயர்
மாற்றுக்கொண்டு வாழ்ந்த நிலையில் இருந்துதான் அவர் அப்துல்லாஹ்வாக மாறினாரே தவிர,
நாத்தீகத்தில் இருந்தோ, பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்தோ, பெரியாரிய கருத்தில் இருந்தோ அவர் இஸ்லாத்திற்கு நேரடியாக
மதம் மாறி இருக்கவில்லை என்பதே உண்மை ஆகும்.
பெரியார்தாசன்
இஸ்லாத்திற்கு மதம் மாறிய விடயத்தில் உள்ள பொய்கள் கடந்த 29.09.2021 அன்று கிளப்ஹவுசின் ATHEIST HOUSE
TAMIL இல் அம்பலப் படுத்தப்
பட்டதைத் தொடர்ந்து, சட்டி சுட்டதடா,
கை விட்டதடா என்று அலறிப் போன இஸ்லாமியவாதிகள்,
ஒரு தனி நபரின் விடயத்தைப் பற்றி நாம் பேசுவதாக
புலம்பித் திரிகின்றார்கள். மேடை ஏறி ‘இன்ன இன்ன அறிவியல் காரணங்களுக்காகத்தான்
இஸ்லாத்திற்கு மதம் மாறினேன்’ என்று பகிரங்கமாக பிரச்சாரம் செய்த, இஸ்லாமிய மதப் பிரச்சாரத்திற்கு உதாரணமாகப்
இன்று வரை இஸ்லாமியவாதிகளால் பாவிக்கப்படும் ஒருவர் மதம் மாறியமை தொடர்பான விடயம்
தனிநபர் சார்ந்த விடயம் அல்ல என்பதை இஸ்லாமியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கிளப்ஹவுஸ்
நிகழ்வில் குறித்த ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்தப்பட்டதனால் மூக்குரிபட்டுப் போன
இஸ்லாமியவாதிகள் சில குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் முன்வைத்து இருந்தார்கள். ‘குறித்து
குறித்த ஒலிப்பதிவு போலியாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஒலிப்பதிவு உண்மையானது என்றால் ஏன் இவ்வளவு
காலமும் அதனை பகிரங்கப்படுத்தி இருக்கவில்லை, ஏன் குறித்த ஊடகவியலாளர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை’
ஆகியவை அவற்றில் பதில் சொல்லப்படத் தகுதியான குற்றச்சாட்டுக்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வினவு இணைய ஊடகத்தளத்தில் மேற்படி ஒலிப்பதிவை
அடியொட்டி ஒரு ஆக்கம் வெளியிடப்பட்டு, ஆக்கத்துடன் தொடர்புபடும் ஒலிப்பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன,
அப்பொழுது பெரியார்தாசனும் உயிருடன் இருந்தார்,
எனினும் அவர் குறித்த ஒலிப்பதிவு பகிரங்கப்
படுத்தப்பட்டமை தொடர்பில் ஒன்றுமே செய்திருக்கவில்லை. மேற்படி பதிவேற்றத்தை
இன்றும் வினவு இணையத்தளத்தில் https://www.vinavu.com/2010/04/19/periyardasan-islam/
என்ற இணைப்பில் காணலாம். குறித்த
பத்திரிகையாளரான பறையோசை பதிப்பகர் சாகித் அவர்கள் நிகழ்வில் கிளப்ஹவுஸ் நிகழ்வில்
கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த பொழுதும், அவரது கைத்தொலைபேசி ஒத்துழைக்காத காரணத்தால் மட்டுமே அவரால் நிகழ்வில்
கலந்துகொள்ள முடியாமல் போனது, எனினும் அவர் இது
குறித்து விரிவான வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தே உள்ளார், அதனை https://youtu.be/Z1IzxbVsaYU இல் பார்க்க முடியும்.
அன்பின்
முஸ்லிம்களே, பெரியார்தாசன்
நாத்தீகராக, பகுத்தறிவுவாதியாக
இருந்த நிலையில் அறிவியல் காரணங்களுக்காக இஸ்லாத்திற்கு மதம் மாறினார் என்று
மேற்கொள்ளப் படுகின்ற பிரச்சாரம் பொய்யானது என்பது நிரூபணமாகி விட்டதால் இனிமேலும்
அந்தப் பொய்யை இஸ்லாமியவாதிகள் தூக்கிக்கொண்டு வந்தால் நம்பாதீர்கள், நீங்கள் சுயமாக சிந்தியுங்கள்.
-றிஷ்வின் இஸ்மத்
01.10.2021