ISIS இன் முதல் கொலை முயற்சியும், 3 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அச்சுறுத்தல்களும்

என்னைக் கொலை செய்வதற்கான இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் சரியாக மூன்று வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. என் மீதான முதல் கொலை முயற்சியில் நேரடியாக ஈடுபட்டவர்கள், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு எதிராக வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டதாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

மரீனா ரிபாய் எனும் வஹ்ஹாபிய போதகரின் ‘அல் முஸ்லிமாத்’ அமைப்பின் கீழ் இயங்கும் ‘தாருன் நுஸ்ரா’ சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு நீதி வேண்டி பொதுவான அடிப்படையில் ‘சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு’ சார்பில் சமூக செயற்பாட்டாளர் முரளீதரன் மயூரன், சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, ஜனந்தன் தவராஜா ஆகியோருடன் இணைந்து சிறீன் சரூர், ஸர்மிளா ஸெய்யித், ஹசனா இஸ்ஸத்தீன், ஷெவோன் மிஸ்கின், அர்கம் முனீர் மற்றும் இன்னும் பலரின் பங்குபற்றலுடன் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ( https://youtu.be/AdJl3LQhyVU ) 2018 ஆகஸ்ட் 06 அன்று மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன் இடம்பெற்ற பொழுதே மெளலவி ஸஹ்ரானால் அனுப்பப்பட்ட நான்கு ஜிஹாதிய கொலையாளிகள் எனது கதையை முடிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து வந்திருக்கின்றார்கள்.

2013 ஆம் ஆண்டில் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்பதைக் ஊகித்ததால் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதை பகிரங்கப் படுத்தாத நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல் இஸ்லாம் தொடர்பான கேள்விகளை, ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்து வந்தேன். இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களை கொலை செய்ய வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தினால் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் ‘இஸ்லாம்’ பாடப்புத்தகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று இருப்பதையும், ‘இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என்ற அடிப்படையில் அவ்வப்போது இஸ்லாமிய போதனைகள், ஜும்மாப் பிரசங்கங்கள் நிகழ்த்தப்படுவதையும் அறிந்து இருந்த காரணத்தினாலேயே நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதை இரகசியமாக வைத்திருந்தேன்.

எனது கேள்விகள், விமர்சனங்கள் மூலம் நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்பதை ஊகித்துக்கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் எனக்கெதிரான சதித் திட்டங்களை 2015 ஆம் ஆண்டிலிருந்தே தீட்ட ஆரம்பித்து விட்டார்கள். கட்டாரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த சுமார் 30 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் 2015 ஆம் ஆண்டளவில் ஒரு தங்குமிடத்தில் கூடி எனக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலந்துரையாடி திட்டங்கள் போட்டது தொடர்பான இரகசியத் தகவல்களை ஒரு நம்பிக்கையான நண்பர் மூலம் அறிந்துகொண்டேன்.

எனக்கெதிரான கொலை அச்சுறுத்தல்களை விடுப்பது 2016 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் ஆரம்பமானது. 2016 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு (TID) சென்று அன்றைய DIG நாலக டி சில்வாவை சந்தித்துவிட்டு எனது முறைப்பாட்டையும், இலங்கையில் செயற்படும் சந்தேகத்திற்குரிய ISIS பயங்கரவாதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கையையும் முழு நாளும் அங்கிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வழங்கி இருந்தேன். எனினும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுத்து இருக்கவில்லை. நான் எனது அறிக்கையில் பெயர் குறிப்பிட்டிருந்தவர்கள், 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களாகவும், அதனைத் தொடர்ந்து தாக்குதலுடனான தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்டவர்களாகவும் உள்ளனர். அதே நேரத்தில் நான் கொல்லப்பட வேண்டும், என்னைக் கொலை செய்ய வேண்டும் என்று முதன் முதலாக பகிரங்கமாக எழுதியவர்களும், அதனைத் தூண்டியவர்களும், அந்தக் கொலைகாரக் கருத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகள் மத்தியில் வெகுஜன மயப்படுத்தியவர்களும் இன்றும் இலங்கை அரசாங்க நிர்வாக சேவையில் பணியில் இருக்கின்றார்கள்.

2016 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முதல் முறைப்பாட்டைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டு இருந்தேன். அரச பாதுகாப்புத் தரப்பினரோ, புலனாய்வுத் துறையினரோ எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்காத காரணத்தால் அவர்கள் மீதான நம்பிக்கை இல்லாமல் போனது, ஆகவே அதன் பின்னர் எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் எவ்வித முறைப்பாடுகளையும் மேற்கொண்டு இருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு இறுதியில் மாவனல்லையை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப் பட்டமை, புத்தளம் வனாத்துவில்லு பகுதியில் பாரிய தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டமை, மாவனல்லையைச் சேர்ந்த தஸ்லீம் சுடப்பட்டமை ஆகியவற்றை அவதானித்த பொழுது இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக செயற்பட ஆரம்பித்து விட்டார்கள் என்பதை ஊகிக்க முடியுமாக இருந்தது, அதனால் எனது நடமாட்டங்களை முற்றாகக் குறைத்துக் கொண்டிருந்தேன்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் ‘மெளலவி ஸஹ்ரான் ஹாஷிம் மஸ்ஊதி’ தலைமையிலான ஜிஹாதிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடாத்தி சுமார் 260 பேர் கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலேயே என்னைக் கொல்வதற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான தகவல்களைப் புலனாய்வுப் பிரிவினர் எனக்கு தெரிவித்தார்கள். தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே என்னைக் கொலை செய்வதற்காக மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் தெரிந்து கொண்டு இருந்தனர். ஹயாத்து முஹம்மது அஹமது மில்ஹான், கபூர் மாமா என அழைக்கப்படும் ஆதம் லெப்பை முஹம்மது ஷரீப், ரஷீத் முஹம்மது இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் ஹக் மற்றும் காலித் சமீர் ஹுசைனுல் ரிஸ்வி ஆகிய நால்வரே என்னைக் கொலை செய்வதற்காக முயற்சி செய்துள்ளார்கள். முதல் இருவரும் ISIS மேற்கொண்ட பல கொலைகளுடன் நேரடியாக தொடர்பு பட்டவர்கள் என்று போலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷீத் முஹம்மது இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் ஹக் என்பவர் மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட நாசகார சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஆவார், இவர் ஜமாத்தே இஸ்லாமியின் 24 வருடகால தலைவரின் சகோதரனின் மகனாவார். நான்காமவர் அதிகம் அறியப்பட்டவரக இல்லை. எனது நடமாட்டங்கள், வதிவிடம் ஆகியவற்றை கண்காணித்து தகவல் வழங்கும் பொறுப்பை மெளலவி ஸஹ்ரான் இவருக்கு வழங்கி இருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்தார்கள்.

முதல் இரண்டு கொலை முயற்சிகள் தொடர்பான தகவல்களை http://www.allahvin.com/2019/06/isis.html இல் அப்பொழுதே எழுதி இருந்தேன். சமூக செயற்பாட்டாளரும், பெண்ணியவாதியுமான ஸர்மிளா ஸெய்யித் அவர்களையும் கொலை செய்வதற்கு
மேற்படி பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தமையை புலனாய்வுத் துறையினர் அறிந்து கொண்டிருந்தனர். எனக்குப் போலவே ஸர்மிளா ஸெய்யித் அவர்களுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றை வழங்க முடியாத நிலையை போலீசார் அப்பொழுது வெளிப்படுத்தி இருந்தனர்.

புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்த விடயங்களை முன்வைத்தே பாராளுமன்றத் தெரிவிக்குழு முன்னிலையில் 2019 ஜூன் 20 ஆம் திகதி ஆஜராகி, எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் மற்றும் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைவாத பிரச்சாரங்கள், பயிற்சி வகுப்புகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய வாக்குமூலத்தை வழங்கி இருந்தேன். ‘முஸ்லிம்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தலாம்’ என்று ஜமாத்தே இஸ்லாமியின் அல்ஹஸனாத் சஞ்சிகையில் ‘பத்வா’ வெளியாகி இருந்தமை, இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களை கொலை செய்யலாம் என்று பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தமை உட்பட பல விடயங்களையும் பகிரங்கப்படுத்தி இருந்தேன். பாராளுமன்றத் தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராகியதைத் தொடர்ந்து எனது பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, இன்று வரை வீடு திரும்ப முடியாத நிர்ப்பந்தத்தில் இருக்கின்றேன்.

இலங்கை அரசாங்கத்தினால் விநியோக்கிக்கப்படும் இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களுக்கான தண்டனை கொலை என்று குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை நான் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் 20.06.2019 அன்று ஆதரங்களுடன் முன்வைத்து இருந்தேன். அப்பொழுது முக்கிய அமைச்சராகவும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் ஒரு அங்கத்தவராகவும் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள், தான் விசாரணைகளை நடத்தும் பாராளுமன்ற ஆணைக்குழுவின் ஒரு அங்கத்தவர் என்பதையும் மறந்து, எனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்த பாடப்புத்தகம் தொடர்பான விடயத்தை திசை திருப்பும் விதமாகவும், மூடி மறைக்கும் விதமாகவும், எனக்கு சேறு பூசும் விதமாகவும் சாட்சியாளர் போன்று மாறி சுய விளக்கம் ஒன்றை அதே ஆணைக்குழுவில் வழங்கிய அவமானகரமான செயற்பாடு 10.07.2019 அன்று இடம்பெற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலே இணைப்பில் (http://www.allahvin.com/2019/06/isis.html ) குறிப்பிடப்பட்ட இரண்டு முயற்சிகள் மட்டுமல்லாது மேலும் பல கொலை முயற்சிகளை இஸ்லாமிய பாயங்கரவாதிகள் மேற்கொண்டு இருந்த விடயத்தைப் புலனாய்வுப் பிரிவினர் பின்னர் தெரிவித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என்று அரச தரப்பால் அறிவிக்கப்பட்டவரும், தற்பொழுது காவலில் உள்ளவருமான காத்தன்குடியை சேர்ந்த மெளலவி நவ்பர் முஹம்மத் காஸிபி இடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நான் ஹவலொக்ஸ் ரக்பி மைதானத்திற்கு பயிற்சிகளுக்காக சென்ற சந்தர்ப்பங்களில் என்னைக் கொலை செய்வதற்கு சில தடவைகள் முயற்சித்த விடயம் தெரிய வந்திருந்தது. தடயம் எதனையும் வைக்காமல் கொலையை செய்யவேண்டும் என்பதில் மெளலவி ஸஹ்ரான் உறுதியாக இருந்த காரணத்தினாலேயே என்னால் தப்ப முடியுமாக இருந்துள்ளது என்ற விடயத்தை புலனாய்வுத் துறையினர் தெரிவித்து இருந்தார்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகளால் எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்டும் கொலை முயற்சிகள், அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பிரச்சாரம் என்பவை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் முடிவடைந்து விடவில்ல, அவை இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கடந்த வருடம் மார்ச் மாதம் நான் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகிய பின்னர் நான் இட்டிருந்த ஒரு பதிவு தொடர்பில் மீண்டுமொரு தடவை பாரிய அளவில் எனக்கெதிராக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரை 27.09.2020 அன்று ஆணைக்குழு முன்னிலையில் குறுக்கு விசாரணை செய்துவிட்டு திரும்பும் பொழுது ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருடன் கூட வந்திருந்த இருவரில் ஒருவரால் அச்சுறுத்தப் பட்டேன். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்த பொழுதும் போலீசார் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைதுசெய்து இருக்கவில்லை. இது பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் இடம்பெற்று இருந்தன.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து கெக்கிராவை பகுதியை சேர்ந்த அரசாங்கப் பாடசாலை ஆசிரியர் மற்றும் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்து இருந்தார்கள்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பு உட்பட சில இஸ்லாமிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டமைக்கு நான் தான் காரணம் என்ற ஒரு வெறுப்புப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தப் பிரச்சாரத்தின் மூலம் எனக்கெதிரான வெறுப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் இயக்கம் போன்றவை தடை செய்யப்பட்டமைக்கான காரணம் அவை கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளும், பிரச்சாரங்களும் தான் என்கின்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்டமைக்கான வெறுப்பை என்மீது சுமத்துவதும், அதற்காக என்னைப் பழி வாங்க வேண்டும் என்று இளைஞர்களைத் தூண்டுவதும் மிக மோசமான செயல் ஆகும்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு வல்லுனர்கள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை விடவும் தனிநபர்களால் திட்டமிட்டு நடாத்தப்படக் கூடிய Lone Wolf Attack பாணியிலான தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கக் கூடும் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அண்மைய நாட்களில் எனக்கு எதிராக மேற்கொள்ளப் படும் வெறுப்புப் பிரச்சாரங்கள், அச்சுறுத்தல்கள் போன்றவை பெரும்பாலும் தனிநபர்களால் மேற்கொள்ளப் படுபவையாகவே உள்ளன. ஜமாத்தே இஸ்லாமியை சார்ந்தவர்கள் பல்வேறு விதமான வெறுப்புப் பிரச்சாரங்களை தனிப்பட்ட விதத்தில் முன்னெடுத்து வருகின்றார்கள். இரகசிய குழுமங்களில் (வட்ஸப் / டெலிகிராம்) எனக்கு என்ன செய்லாம் என்று பேசுகின்றார்கள், அவற்றில் ஒரு சில விடயங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே எனக்குக் கிடைக்கின்றன.


நேற்று இரவு கிளப்ஹவுஸில் பேசிய, சிங்கப்பூரில் வசிப்பதாக சொல்லும் ஹபுகஸ்தலாவையை சேர்ந்த இஸ்லாமியவாதி ஒருவர், மெளலவி ஸஹ்ரான் என்ன காரணத்திற்காக என்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று இதுவரை புலனாய்வுத் துறையினர் கூட அறிந்திருக்காத ஒரு காரணத்தைக் கூறினார், மேலும் என் மீது வன்மத்தையும், வெறுப்பையும் வாரி இறைத்தார். மெளலவி ஸஹ்ரான் என்ன காரணத்திற்காக என்னைக் கொலை செய்ய முயற்சி செய்தார் என்கின்ற (புலனாய்வுத் துறையினருக்குக் கூட தெரியாத) காரணம் இவருக்கு தெரிந்து இருக்கின்றது, அதே காரணத்தை காத்தான்குடியைச் சேர்ந்த இன்னொருவரும் நேற்றிரவு அதே கிளப்ஹவுஸில் உறுதி செய்கின்றார். ஆக, வெறுப்புப் பிரச்சாரம், வன்மம், அச்சுறுத்தல் என்பவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள், எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எள்ளி நகையாடுவதன் மூலமும், அவற்றை நகைச்சுவையாக மாற்றுவதன் மூலமும் அவற்றின் பாரதூரத்தை இல்லாமல் செய்து, அதன் ஊடாக பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குவதன் மூலமும் நான் கொல்லப்படுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க முயல்கின்றனர். இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் கண்டறிந்த விடயங்களைக் கூட பெறுமதியற்றனவாக காட்டுவதன் மூலம் எனக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனும் தோற்றப்பாட்டை உருவாக்க முயல்கின்றனர். அவர்கள் அப்படி செய்வதற்கு வலுவான ஒரு காரணம் இல்லாமல் இல்லை.

இஸ்லாமியப் பயங்கரவாதம் எப்பொழுதும் இரண்டு தளங்களில் செயற்படும். முதல் தளமானது பயங்கரவாதம் உருவாகுவதற்கான சூழ்நிலையை தந்திரமாக உருவாக்கும் பணிய மேற்கொள்ளும், அதாவது பாதுகாப்புக் கட்டமைப்புகள், எச்சரிக்கையுணர்வுகள் ஆகியவற்றைத் தாலாட்டி நித்திரையாக்கும் செயற்பாடு மூலம் யாரது கண்களுக்கும் புலப்படாமல் இஸ்லாமியப் பயங்கரவாதம் நன்கு வளர்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். இதற்காக ‘இஸ்லாம் அமைதியின் மார்க்கம்’ என்று சொல்லி, அதற்கு ஏதுவான விடயங்களை மட்டும் வெளிக்காட்டுவது, இஸ்லாத்தினால் ஏற்படக் கூடிய உண்மையான அச்சுறுத்தல்களை மறைப்பது, இஸ்லாம் தொடர்பான நியாயமான விமர்சனங்கள், கேள்விகளை நசுக்குவதற்கு 'இஸ்லாமோபோபியா' எனும் போலியை பயன்படுத்துவது போன்றவற்றை முதலாவது தளம் மேற்கொள்ளும். இரண்டாவது தளம் வித்தியாசமானது, அது இஸ்லாத்தின் கோர முகத்தைக் கொண்டது. அது பயங்கரவாத, வன்முறைத் தளமாகும். முதலாவது தளத்தின் ஒத்துழைப்புடன் வலுப் பெறும் இரண்டாவது தளமானது அதனது பயங்கரவாத, வன்முறை அராஜகத்தை மேற்கொண்ட பின்னர் மீண்டும் முதலாவது தளம் செயற்பாட்டிற்கு வரும். பயங்கரவாதத் தாக்குதல், வன்முறைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் சூழ்நிலையை தனது கையில் எடுக்கும் முதலாவது தளம், இரண்டாவது தளம் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று உரத்துச் சொல்லிக்கொண்டு இருக்கும். இதற்கான உதாரணத்தை இலங்கையிலேயே நாம் காணலாம்.


இலங்கையில் ISIS பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் என்று உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சில காலங்களிற்கு முன்னர் பாராளுமனத்தில் முதன் முறையாக விஜயதாச ராஜபக்ச தரவுகளுடன் உரையாற்றிய பொழுது என்ன நடந்தது என்பதை ஞாபகப் படுத்திப் பாருங்கள். அவரது உரையை சாடி, கேலிக்கு உள்ளாக்கி, அவரை அவமானப் படுத்தி, அவருக்கு முத்திரைகள் குத்தி அவரை வாயடைக்க வைத்தவர்கள், ஸஹ்ரான் மெளலவியின் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற பின்னர் வெட்கமில்லாமல் வந்து “இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை” என்றும், “சஹ்ரான் முஸ்லிம் இல்லை” என்றும் சொன்னார்கள். இதே தந்திரத்தை இஸ்லாமியவாதிகள் எனது விடயத்தில் மட்டும் என்றில்லை, எல்லா இடங்களிலுமே பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆகவே அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பு சாதாரண முஸ்லிம்கள் உட்பட அனைவருக்குமே உள்ளது.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்களைக் கொல்ல வேண்டும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற விடயங்களும் மேலும் வன்முறையை, பயங்கரவாதத்தைத் தூண்டும் விடயங்களும் இன்று வரையும் இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் உள்ளன. மேலும் இவற்றுக்கு மேலதிகமாக இவற்றை விடவும் மோசமான விடயங்கள் இஸ்லாமிய மூலாதார நூல்களில் உள்ளன, அத்தகைய நூல்கள் புனிதமானவை என்று கருத்தப்படுவதுடன் அவை இலங்கையில் உள்ள மதரஸாக்கள் உட்பட இன்ன பிற ஸ்தானங்களிலும் உள்ளன என்பதையும் பதிவு செய்துகொள்கின்றேன்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது கொலை முயற்சியில் இருந்து தப்பி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கூட, எனக்கெதிரான கொலை அச்சுறுத்தல்கள், வெறுப்புணர்வு, தனிநபர் தாக்குதல்கள் ஆகியவை எவ்விதத்திலும் நீங்கிவிடவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் முழுமையாக திருப்தி அடையும் நிலையில் இல்லை என்பது கவலைக்குரியது.
-றிஷ்வின் இஸ்மத் 06.08.2021