காபூலில் இனிமேல் எந்தக் குயிலும் இசைக்காது, இரத்தக் கண்ணீர் மட்டுமே வடிக்கும்

"ஷாகியா மர தர்யாப்" (ساقيا مرا دريا) என்பது இங்கே வீடியோவாக இணைக்கப்பட்டுள்ள ரம்மியமான ஆப்கானியப் பாடலின் தலைப்பு, அதன் அர்த்தம் "(காதல் போதையின்) கிண்ணத்தை ஏந்தியவரே, என்னை தேடுங்கள்" என்பதாகும். காதல் போதை ததும்பும் வரிகளுடனான இந்த ஆப்கானிய பாடலை அந்தலிப், ஸுரோஷ் ஜோடி இணைந்து பாடியுள்ளது. அழகாகப் பாடிய இவர்கள் இருவரும் தற்பொழுது ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் வாழ்கின்றார்கள் என்ற தகவல் நிம்மதியளித்தாலும், இனிமேல் ஆப்கானில் இத்தகைய பாடல்கள் ஒலிக்காது என்கின்ற விடயம் கவலையளிக்கின்றது.
அனைவரும் பயந்தது போலவே தலிபான் பயங்கரவாதிகள் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள், அதில் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தானில் இசையை தடை செய்யும் அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்டு விட்டார்கள். அந்தக் கொடூரமான அறிவுப்புக் காரணமாக இனிமேல் அங்கு யாரும் இசைக்கப் போவதில்லை, ஒப்பாரிகள் மட்டுமே கேட்கும், அதையும் கூட மெல்லிய சத்தத்தில் முனகலாக மட்டுமே வெளிப்படுத்த அனுமதிக்கப்படும். அந்த நாடு கண்ணிருக்கும், இரத்தத்திற்கும் காணிக்கையாக்கப் பட்டு விட்டது.


காதுக்கும், மனதுக்கும் சுகமளிக்கும் இந்தப் பாடலுக்குப் பின்னாலும் கூட கண்ணீரும், இரத்தமும் தேய்ந்த கொடிய வரலாறு ஒன்று உள்ளது. ஆப்கானிய கவிஞரும் பாடகருமான அஹமட் ஸஹிர், தான் எழுதிய இந்தப் பாடலை ஆப்கானிய இசையமைப்பாளர் நைனவாஷ் (نينواز) இசையில் உஸ்தாத் மஹ்வஷ் அவர்களுடன் இணைந்து 1970 களில் பாடி இருந்தார். இங்கே இணைக்கப்பட்டுள்ள அந்தலிப், ஸுரோஷ்பாடியுள்ள புதிய பாடலுக்கான இசையமைப்பை விருதுபெற்ற ஆப்கானிய இசையமைப்பாளர் கைஸ் உல்ஃபத் மேற்கொண்டுள்ளார்.


1970 களில் அஹமட் ஸஹிர் உடன் இணைந்து இந்தப் பாடலை பாடிய உஸ்தாத் மஹ்வஷ் ஒரு ஆண் என்று நினைத்துவிட வேண்டாம். இசைத்துறையில் உஸ்தாத் பட்டம் பெற்ற ஆப்கானிஸ்தானின் முதல் பெண் உஸ்தாத் ஃப்ரீதா மஹ்வஷ் ஆவார். இன்று வரை வேறு எந்த ஆப்கானிய பெண்ணுக்கும் இசைத் துறையில் உஸ்தாத் பட்டம் வழங்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. தற்பொழுது கலிபோர்னியாவில் வசிக்கும் உஸ்தாத் மஹ்வஷ் தனக்கென ஒரு தனியான இசைக்குழுவை voice of Afghanistan என்ற பெயரில் நடாத்தி வருவதுடன் இசைக் கச்சேரிகளிலும் பங்குகொள்கின்றார்.


பாடகரும், பாடலாசிரியருமான அஹமட் ஸஹிரிற்கும், இசையமைப்பாளர் நைனவாஷ் இற்கும் என்ன நடந்தது என்று தெரியுமா? அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆபத்தில் தள்ளிவிட்டது என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் சிவப்புச் சட்டைக் காரர்களில் புதிதாக சிவப்புச் சட்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தவர்கள் சற்று நிதானித்து அறிந்துகொள்ள வேண்டிய விடயம் அது.


நை என்பது ஆறு துளைகளைக் கொண்ட முனை திறந்த ஒருவகை புல்லாங்குழல் ஆகும், இது பாரசீக இசையில் ஒரு பாரம்பரிய இசைக்கருவியாக காணப்படுகின்றது. நை எனும் புல்லாங்குழலை வாசிக்கும் கலைஞர் நைனவாஷ் என்று அழைக்கப்படுவார். நைனவாஷ் என்பதை தனது கலைப் பெயராக தெரிவு செய்து கொண்ட அந்த புகழ் பெற்ற அழியாக் கலைஞனின் இயற்பெயர் ஃபஸீல் அஹ்மட் கான் ஸக்ரியா என்பதாகும். 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளுக்கு முந்தைய தினம், இசைமேதை நைனவாஷ் தனது 43 ஆவது வயதில் மரண தண்டனை என்ற பெயரில் ஆப்கானிஸ்தானின் கம்யூனிஸ அரசால் படுகொலை செய்யப்பட்டார்.


பாடலாசிரியரும், பாடகரும், இசையமைப்பளருமான அஹமட் ஸஹிர் 1946 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று பிறந்தார். சரியாக 33 ஆண்டுகள் கழித்து அதாவது 1979 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அவரது 33 ஆவது பிறந்த தினத்தன்று ஆப்கானிஸ்தானின் கம்யூனிஸ அரசால் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட அன்று அவரது மனைவி சப்னம் எனும் பெண் குழந்தையை பிரசவித்து இருந்தார். அன்றைய ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ அரசு ஒரு கலைஞனுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு ‘கொலை’, அவன் குழந்தையை அது பிறக்கின்ற நாளில் அநாதையாகியது கம்யூனிஸ அரசு. தந்தையும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடிந்திருக்கவில்லை.


எதோ அமெரிக்கா மட்டும்தான் ஆப்கானிஸ்தானுக்கு அநியாயம் செய்தது போலவும், கம்யூனிஸ ஆட்சியிலும், சோவியத் ஆக்கிரமிப்பிலும் அங்கே தேனாறும், பாலாறும் பாய்ந்தோடியது போல ஒரு பக்கம் போலிப் பிம்பம் காட்டிக்கொண்டு தலிபானுக்காக மறுபக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கும் கம்யூனிஸ்டுகள், ஆப்கானிஸ்தானை சர்வதேச அளவில் முதன் முதலில் இக்கட்டுக்குள் தள்ளி, அரசியற் கொள்கைக் காரணத்திற்காக ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாக்கி, அங்கே படுகொலைகளை செய்ததும், இரத்தைத்தை ஓட்டியதும் கம்யூனிசமும், சோவியத் ரஷ்யாவும்தான் என்பதை வசதியாக மறைத்து விடுகின்றார்கள். சோவியத் ரஷ்ய ஆக்கிரமிப்புக் காலத்தில் அங்கே கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம் வரை இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்யூனிஸ்ட்டுகள் அணிந்திருக்கும் சட்டையின் சிவப்பிற்குக் காரணம் வெறும் சாயம் அல்ல, மாறாக நைனவாஷ், அஹமட் ஸஹிர் போன்ற பலரது குருதியும் தான் என்பதை அவர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். (குறிப்பு : கம்யூனிசத்தின் அநியாயங்கள் அமெரிக்காவின் அநியாயங்களை நியாயப்படுத்தி விடாது, அதே போல அமெரிக்கா அநியாயம் செய்தது என்பதால் கம்யூனிசம் செய்த அநியாயங்கள் சரியானவை என்றும் ஆகி விடாது)
மீண்டும் பாடலுக்கே வருவோம்.


பாரசீக மொழி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பாடலின் வரிகளை வாசித்துக் கொள்ளுங்கள்.

ساقيا مرا درياب،پر کن از وفا جامم
مستم امشب از غم ها، می نخورده بد نامم
توبه ام مده زاهد، ديگر از می و مستي
فارغ از حسابم کن، غافل از سر انجامم
شايد عمر اين هستی، چون وفای او باشد
ساغرم تُهی ماند، بشکند فلک جامم
من ز بيم رسوايی، گريه ميکنم در دل
ميکشد مرا آخر، خنده های آرامم
مگذر این چنین از من ای تو قبله گاهی دل
ای تمام امیدم ای خدای الطافم

தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளுங்கள் :

Saqiya mara daryab, pur kon az wafa jamam
Mastam imshab az gham ha, may nakhorda bad namam
Touba am madeh zahed, digar az may o masti
Faregh az hesabam kon, ghafel az sar anjamam
Shayad omre ein hasti, choon wafaye o bashad
Sagharam tuhi mand, beshkanad falak jamam
Man ze bime raswaye, gerya mekonam dar dil
Mekoshad mara aakher, khandahaye aramam
Magzar in chonin az man ay tu qeblagahe dil
Ay tamam omid-am ay khudaye eltafam


பாடிய 1970 களின் பழைய பாடலை கேட்டும், அவர்களின் பழைய புகைப்படங்களை பார்த்தும் ரசிக்க விரும்புகின்றவர்கள் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

-றிஷ்வின் இஸ்மத் 27.08.2021