தோழர் எனக்கு முஹம்மது நபியின் திருமணம் என்றாலே இன்னொரு குட்டி சந்தேகம் வருவதுண்டு. திருவிளையாடல் பாணியில் 'பிரிக்கவே முடியாதது' என நம்முடைய முஸ்லீம்களிடத்தில் கேட்டால் 'ஏழ்மையும் நபியும், எளிமையும் அவர் வாழ்வும்' என்பார்கள்.
ஆனால் பலதாரமணத்தில் நபியின் நிபந்தனை உடல் வலு, பொருளாதார பலம் கொண்டிருப்பது தான். இதில் மிக முக்கியம் எல்லா குடும்பத்தினையும் அந்த கணவன் பொருளாதார ரீதியில் சமமாக நடத்துவது.
கேள்வி 01: நபி ஏக காலத்தில் 9-10 மனைவியர், அடிமை பெண்கள் என்று வாழ்ந்திருக்கிறார். இவர்களை சமமாக நடத்த வேண்டும் என சொன்னால் அவர் பொருளாதார ரீதியில் மிக்க பலம் கொண்ட நபராக தான் இருந்திருக்க வேண்டும். எனவே நபி ஏழ்மையானவர் என்னும் வாதம் இங்கு அடிபட்டு போகிறது. (மதீனாவில் அவரது வருவாய் மூலம் எதுவாக இருந்தது?)
கேள்வி 02: அப்படி அவர் வாய்க்கும் வயித்துக்கும் வாழ்ந்த ஒரு ஏழை மனிதர் தான் என்றால் பொருளாதார சக்தி உள்ளவனே பல மணம் புரிய இடமுண்டு என்ற அவரது நிபந்தனைக்கு முரணான முறையில் அவரது நடத்தை இருந்திருக்கிறது.
இதில் எது உண்மை? or வேறு ஏதாவது பதில்கள்? முஸ்லீம் நண்பர்களும் பதில் சொல்லலாம்.
மேலே உள்ளது எனது பேஸ்புக் நட்பு ஒருவர் முன்வைக்கும் நியாயமான கேள்விகள் ஆகும். முஸ்லிம்களை சிந்திக்கத் தூண்டும் விதமான கேள்விகளை முன்வைத்த நட்புக்கு நன்றி.
"இஸ்லாம் பலதார திருமணத்தை எல்லோரும் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கவில்லை, அதற்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்து உள்ளது, அவற்றை பூர்த்தி செய்யக் கூடியவர்தான் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்களை செய்ய முடியும்" என்று கூறி பின்வரும் நிபந்தனைகளை இஸ்லாமியப் போதகர்கள் முன்வைப்பார்கள். பொருளாதார வலிமை, உடல் வலிமை மற்றும் நீதமாக நடந்து கொள்ளக் கூடிய தன்மை ஆகியவையே அவை. அவற்றை பூர்த்தி செய்யக் கூடியவர்களே ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்களை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மேற்படி தகுதிகள் முஹம்மது நபிக்கு இல்லாத பொழுது அவர் ஏன் பல திருமணங்கள் செய்துகொண்டார்? அதுவும் ஒரே தடவையில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை எதற்காக வைத்துக் கொண்டார்?
முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியல் :
கதீஜா பின்த் குவைலித் 595–619
சவுதா பின்த் சம்மா 619–632
ஆயிஷா பின்த் அபி பக்கர் 619–632
ஹஃபசா பின்த் உமர் 624–632
ஜைனப் பின்த் குசைமா 625–627
ஹிந்த் பின்த் அபி உமைய்யா 629–632
ஜைனப் பின்த் ஜஹ்ஷ் 627–632
ஜுவரியா பின்த் அல்-ஹரித் 628–632
ரம்லா பின்த் அபி சுஃபியான் 628–632
ரைஹானா பின்த் சையது 629–631
சஃபியா பின்த் ஹுயை 629–632
மைமுனா பின்த் அல்-ஹரித் 630–632
முஹம்மது நபி 11 திருமணங்கள் செய்ததாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தாலும், அதனை விடவும் அதிகமான மனைவிகள் அவருக்கு இருந்ததாக இந்த இணைப்பில் ஆதாரங்களை முன்னிலைப் படுத்தி பட்டியலிட்டுள்ளது. https://wikiislam.net/wiki/Muhammad%27s_Marriages
இவ்வளவு மனைவிகள் இருந்த முஹம்மது நபிக்கு பலதார மனம் செய்வதற்கு இருந்த தகுதிகள் என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பொருளாதார வலிமை
முஹம்மது நபி கஞ்சிக்கே வழியில்லாமல் இருந்ததாக பல ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: தன் போர்க் கவசத்தை முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைத்திருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2916 )
மரணிக்கின்ற நிலையிலும் கஞ்சிக்கு வழியில்லாமல் வாற்கோதுமைக்கு தனது கவசத்தை அடகு வைத்து இருந்திருக்கின்றார் முஹம்மது நபி. மரணிக்கின்ற போதுதான் இப்படி என்றால், வாழ்ந்த பொழுதாவது நன்றாக உழைத்து, சம்பாதித்து மனைவிகளை கவனிக்கக் கூடியவராக இருந்தாரா என்று பார்த்தால் நிலைமை அதை விடக் கேவலாமாக இருக்கின்றது.
‘எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்‘ என விடையளித்தார்.
அறிவிப்பவர் : உர்வா (ஸஹீஹுல் புகாரி : 2567)
‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார். (ஸஹீஹுல் புகாரி : 5374)
ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார். (ஸஹீஹுல் புகாரி : 5423)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) ‘எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார். (ஸஹீஹுல் புகாரி : 2069)
பக்கத்துவீட்டுக் காரன் போடுகின்ற சாப்பாட்டில் காலம் தள்ளி இருக்கின்றார் என்றும், வயிறார சாப்பிடவே வழியில்லாமல் லாட்டரி அடித்துக்கொண்டு இருந்தார் என்றும், பெருநாள் தினத்தில் கூட அவருக்கு ஒழுங்காக சாப்பிட வழியிருக்கவில்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வாக்குமூலம் தருகின்றார்கள். இன்னும் இதே போன்ற நிறைய ஹதீஸ்கள் இருந்தாலும், அவை பதிவை நீட்டிவிடும் என்பதால் தவிர்த்து விடுகின்றேன்.
பலதார திருமணத்திற்கான ஒரு நிபந்தனையான பொருளாதார வலிமை விடயத்தில் முஹம்மது படு தோல்வி அடைந்த ஒருவர் என்பது இங்கே நிரூபணமாகிவிட்டது. ஏனைய இரண்டையும் இப்பொழுது பார்ப்போம்.
உடல் வலிமை
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். குழந்தையை பெற்றெடுக்க அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். குழந்தையை பெற்றெடுக்க அதிகம் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் குழந்தைகளின் மூலமாக மாபெரும் சமுதாயத்திற்குரிய நபியாக நான் திகழுவேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)
(ஸுனன் நஸயீ :3175)
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமாகவேண்டும் அதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொன்ன, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்ணகளை திருமணம் செய்யாதீர்கள் என்று மற்றவர்களுக்கு தடை விதித்த முஹம்மது நபி, தன்னை இறைதூதர் என்று சொன்ன பின்னர் பல திருமணங்கள் செய்தும் கூட அவரால் அதிலே ஒரு மனைவியைக் கூட கர்ப்பமாக்க முடியாமல் போய்விட்டது. நபியுடைய மனைவிகளில் ஏற்கனவே தமது முன்னைய கணவர் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் இருந்தனர். அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத பெண்ணை திருமணம் செய்யாதே என்கின்ற அவரது கட்டளைகளை செயற்படுத்துவதில் அவரே தோல்வி அடைந்து இருப்பதால் அவரது உடல் வலிமை என்கின்ற விடயமும் கேள்விக்கு உள்ளாகின்றது என்பது தெளிவு.
தனது மனைவிகளுக்கு இடையில் நீதமாக நடந்து கொள்ளல்
பதிவு நீண்டுவிட்டதால் இந்த விடயத்தை சுருக்கமாக முடித்துக் கொள்ள முயல்கின்றேன். முஹம்மது நபி தனது எல்லா மனைவிகளிடமும் ஒரே விதமாக நீதமாக நடந்துகொள்ளவில்லை. ஆயிஷா மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டார், அதிக நாட்டம் காட்டினார், ஆயிஷாவின் போர்வைக்குள் இருக்கும் பொழுது மட்டுமே வஹி (இறைசெய்தி) வரும், ஜிப்ரயீல் வருவார் என்றெல்லாம் கூறினார். வயதான பெண்மணியான சவ்தாவை விவாகரத்து செய்வதாகக் கூட மிரட்டினார். அதனால் பயந்துபோன சவ்தா, முஹம்மது தன்னுடன் தங்க வேண்டிய நாட்களைக் கூட ஆயிஷாவுடன் தாங்கும் படி விட்டுக் கொடுத்து முகம்மதை குசிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக விட்டுக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும், சவ்தா அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கி வந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5212)
ஆக, மனைவிகளுக்கு இடையில் நீதமாக நடந்துகொள்ளும் விடயத்திலும் முஹம்மது நபி தகுதியற்றவராக, நேர்மையற்றவராக, தோல்வி அடைந்தவராகவே காணப்படுகின்றார்.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு எந்தத் தகுதியுமே இல்லாத நிலையில், மற்றவர்களுக்கு நான்கு பெண்களை திருமணம் செய்யச் சொல்லிவிட்டு, தான் மட்டும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து எல்லா வகையிலும் பின்வரும் குர்ஆன் வசனத்திற்கு முரணாக முஹம்மது நபி அவர்கள் நடந்துகொண்டு இருக்கின்றார்.ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியது. (குர்ஆன் 61:2-3)
முஹம்மது நபி உருவாக்கிய குர்ஆனே முஹம்மது நபியை அல்லாஹ்வின் கோபத்திற்குரிய செயலை செய்பவராக குறிப்பிடுகின்ற அசிங்கத்தை இங்கே காணலாம்.
அறியாமைக் காலத்தில் பத்துப் பெண்களை மணமுடித்திருந்த ஃகைலான் பின் ஸலமா அஸ்ஸகஃபீ (ரலி) இஸ்லாத்தை ஏற்றார். அவருடன் சேர்ந்து அவருடைய பத்து மனைவியரும் இஸ்லாத்தை ஏற்றனர். அப்போது அப்பெண்களில் நால்வரை மட்டும் தேர்வுசெய்து (கொண்டு மற்றவர்களை விட்டு விலகிக்) கொள்ள வேண்டும் என்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ( திர்மிதீ 1047; ஸஹீஹ் இபுனு ஹிப்பான் 4158).
தனக்கு மட்டும் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக்கொண்டு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஃகைலான் பின் ஸலமா அஸ்ஸகஃபீ என்பவருக்கு அவரது ஆறு மனைவிகளை விவாகரத்து செய்யும்படி முஹம்மது நபி சொல்கின்றார் என்றால், தனக்கொரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று வாழ்ந்து இருக்கின்றார் என்பதும் இங்கு புலனாகின்றது. ஆக, குர்ஆனின் 61:2-3 (மேலே உள்ளது) வசனங்களை மீண்டும் ஞாபகப் படுத்த வேண்டி உள்ளது. தனது போதனைகளுக்கு முரணாக தானே நடந்து கொன்டதன் மூலம் தானே உருவாக்கிய அல்லாஹ்வின் கோபத்தை தன் மீதே முஹம்மது இறக்கிக் கொண்டார்.
பலதார மணம் செய்வதற்கு முஹம்மது நபிக்கு இஸ்லாமிய போதனைகளின் படி கூட எவ்வித தகுதியும் இருக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகின்றது.
-றிஷ்வின் இஸ்மத்
03.08.2021