அல்லாஹ்வின் பால் - சில பொய்கள்!

 


இஸ்லாத்தின் கடவுளான அல்லாஹ் ஒரு ஆணா அல்லது பெண்ணா அல்லது மாற்றுப் பாலினமா? அல்லாஹு அக்பர் என்பதை “அல்லாஹ் பெரியவள்” என்றோ, “அல்லாஹ் பெரிசு” என்றோ சொல்லாதது ஏன்?

அல்லாஹ்வின் பால் என்ன என்று கேட்டால் அல்லாஹ் பால்நிலைகளுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்கின்றார்கள் இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள். அல்லாஹ் ஆணுமில்லை
, பெண்ணுமில்லை என்று பூசி மெழுகுகின்றார்கள், ஆனால் குர்ஆனில் ஆகட்டும், அஹதீஸில் ஆகட்டும் அல்லாஹ்வை குறிக்க ஆண்பாற் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர எந்த இடத்திலும் பெண்பாற் சொற்களோ,  வேறு பால்நிலைகளைக் குறிக்கும் சொற்களோ தவறியும் பயன்படுத்தப்படவில்லை. هو என்று அல்லாஹ்வைக் குறிப்பிடும் குர்ஆன், அஹதீஸ் என்பன தவறியும் هي என்பதை அல்லாஹ்வுக்காக ஒரு இடத்தில் கூட பயன்படுத்தியதே இல்லை.


அல்லாஹ்வுக்குக் கணவன் இல்லை என்று ஏன் கூறப்படவில்லை?


وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏

“மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவனுக்கு மனைவியோ மகனோ இல்லை. (குர்ஆன் 72:3)



بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌  وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌  وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (குர்ஆன் 6:101)

அல்லாஹ் தனித்தவர், அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதை சொல்ல அல்லாஹ்வுக்கு மனைவி (பெண்பாற் துணை) இல்லை என்று குர்ஆன் சொல்கின்றதே தவிர அல்லாஹ்வுக்கு கணவன் (ஆண்பாற் துணை) இல்லை என்று ஒரு இடத்திலேனும் குர்ஆன் சொல்லவில்லை.
ஆக, குர்ஆன் அல்லாஹ்வை ஆண்பாற் கடவுளாகவே வெளிப்படுத்துகின்றது என்பதைக் காணலாம்.

 

நடைமுறை சார்ந்து சொல்வதென்றால், ‘அல்லாஹு அக்பர்’ என்பதை 'அல்லாஹ் பெரியவள்' அல்லது 'அல்லாஹ் பெருசு' என்றெல்லாம் மொழி பெயர்க்காமல் 'அல்லாஹ் பெரியவன்' என்று ஆண்பாலில் மட்டும் மொழி பெயர்த்து இருப்பது கூட அல்லாஹ் ஆண்பால் கடவுளாகவே கற்பனை செய்யப்பட்டிருப்பதற்கான உறுதியான இன்னொரு சான்று ஆகும். அல்லாஹ் தொடர்பான அனைத்தும் ஆண்பாலிலேயே அமைந்துள்ளன, அதுவும் தமிழில் அல்லாஹ்வை ‘அவன்’, இவன்’ என்றுதான் அழைக்கின்றார்கள். (ஆனால் முஹம்மது நபிக்கு என்னவோ ‘அவர்’, இவர்’ என்ற மரியாதை கொடுக்கப் படுகின்றது என்பது தனியாக பேசப்பட வேண்டிய விடயம் ஆகும்.)


இஸ்லாத்தின் கற்பனைக் கடவுளான அல்லாஹ் ஒரு ஆண் தான் என்கின்ற விடயம் இவ்வளவு வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருக்க, முற்போக்குச் சிந்தனையாளர்களையும், பெண்ணியவாதிகளைகளையும் ஏமாற்ற புறப்பட்டுள்ள சில இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள் சொல்லும் பொய்கள் “அல்லாஹ் ஆண் இல்லை”, இஸ்லாத்தில் பாலியல் பாகுபாடு இல்லை என்பனவாகும்.

(விளக்கப்படம் : கூகிள் இல் “பால்” என்று தேடிய பொழுது கிடைத்தது, அவ்வளவுதான்.)