மொழி, மொழிப்பற்று, மொழி வெறி, மொழியின் அடிப்படைத் தேவை என்ன?

 பிற மொழிச் சொற்கள், எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் மொழி என்பது என்ன, மொழி ஏன் மனிதனுக்குத் தேவைப்படுகின்றது என்பதை நோக்க வேண்டும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்பாடல் மேற்கொள்வதற்கான ஊடகமே மொழி. ஒரு மொழியில் இருந்து பல மொழிகள் உருவாகலாம், சில மொழிகள் இணைந்து இன்னொரு மொழியாக மாறலாம். மொழிகள் வழக்கொழிந்து போவது, மொழிகள் அழிவது மற்றும் புதிய மொழிகள் உருவாவது என்பன வரலாறு நெடுகிலும் நிகழ்ந்தே வந்துள்ளன.

 மொழியில் தாய் மொழி, தந்தை மொழி என்றெல்லாம் அடையாளங்களை உருவாக்கிக்கொண்டு பெருமை பேசுவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு குறித்த மொழியை எடுத்துக் கொண்டால் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே அமைப்பில் அந்த மொழி இன்றைக்கு இருக்காது, அதே போன்று இன்று இருப்பது போன்ற அமைப்பில் எதிர்காலத்திலும் அப்படியே இருந்துவிடப் போவதில்லை.

குறிப்பிட்ட ஒரு மொழியை பேசுகின்றவர்களை எடுத்துக் கொண்டால் கூட பேசுகின்ற முறை, கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற முறை, சில சொற்களுக்கான அர்த்தம் என்று நிறைய வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

ஒருவர் சொல்வது, யாருக்கு சொல்லப்படுகின்றதோ, அவருக்கு தெளிவாகப் புரியக் கூடிய ஊடகத்தை பயன்படுத்துவதே அறிவுடைமை ஆகும், அது ஓசையாக, எழுத்தாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை, சைகையாகக் கூட இருக்கலாம்

தாய்மொழி என்பதற்கான வரைவிலக்கணத்தில் கூட சிக்கல்கள் உள்ளன. மனிதர்கள் கிணற்றுத் தவளைகள் போன்று தங்கள் ஊரோடு, தங்களை சார்ந்தவர்களோடு மட்டுமே வாழ்ந்த காலத்தில் ஒரே மொழியை மட்டும் பேசிக்கொண்டு இருந்தார்கள், பிறக்கின்ற குழந்தைகளுக்கும் அதே மொழியே தொடர்பாடலுக்காகக் கிடைத்தது. தமிழர் ஒருவரை திருமணம் செய்து வீட்டில் கணவனுடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு பிரான்ஸில் பிரெஞ்சுச் சூழலில் வாழும் சிங்களப் பெண்ணுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு தாய் மொழி எது? தமிழா, சிங்களமா, ஆங்கிலமா, பிரெஞ்சு மொழியா?

ஒவ்வொரு மொழியிலும் குறைகளும், நிறைகளும் இருக்கும். வெவ்வேறு மொழி பேசுகின்றவர்களுக்கு இடையிலான தொடர்பாடல்கள் இன்று அதிகரித்து விட்டன, ஆகவே ஒவ்வொரு மொழியில் இருந்தும் மற்ற மொழிகள் சொற்களை பெறுவதும், பாவனையில் இருந்த சொற்கள் வழக்கொழிந்து போவதும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன.

மதம் என்பது தேவையில்லாத ஆணி, ஆனால் மொழி அப்படியல்ல, இருந்தாலும் மொழி என்பது ஒரு தொடர்பாடல் ஊடகம் என்பதை தாண்டி வெறியாக மாறினால் ஆபத்து.

உலகில் எல்லோரும் ஒரே மொழி பேசுவது என்பது சாத்தியமில்லைதான், அதற்காக எனது மொழி சிறந்தது, உனது மொழி தாழ்ந்தது என்று பெருமைகள் பேசியும், இழிவுகள் செய்துகொண்டும் இருக்காமல், தொடர்பாடலுக்கு பொருத்தமான ஊடகத்தை பயன்படுத்துக் கொள்வதே பொருத்தமாகும். தொடர்பாடலை இலகு படுத்துவதற்காக தப்பே இல்லை.

மனிதன் வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக மொழி இருக்க வேண்டுமே தவிர, ஒரு மொழிக்காக மனிதன் வாழ வேண்டும் என்பதெல்லாம் அறிவுக்குப் பொருத்தமான விடயமாகத் தெரியவில்லை.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் பொழுது தாய் மொழி என்று ஒன்று எதற்கு? மதம் துறப்போம், மொழிவெறி தவிர்ப்போம், அனைத்து மானிடர்களையும் நேசிப்போம், மனிதவியலாளர்களாய் வாழ்வோம்.