மகள்களைக் கொன்ற பெற்றோரின் மூடநம்பிக்கை - முஸ்லிம்களின் சிந்தனைக்கு

 


இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் சேர்ந்து தமது 27 மற்றும் 23 வயதான இரண்டு மகள்களை 24.01.2021 அன்று கொலை செய்து இருக்கின்றார்கள். இந்த செய்தி தற்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


நரபலி இடம்பெற்ற ஞாயிறு தினத்தில் தமது மத நம்பிக்கைப் பிரகாரம் மந்திர வழிபாடுகளில் நால்வரும் ஈடுபட்டு உள்ளனர். கொலை செய்யப்பட மகள்கள் ஒரு நாளைக்குள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்று பெற்றோர் நம்பியுள்ளனர். பெற்றோர் தமது மகள்களை கொலை செய்ய காரணம் மூட நம்பிக்கையே அன்றி வேறெதுவும் இல்லை.

இத்தகைய கொலைகளை இஸ்லாம் அங்கீகரிக்காது என்பதிலும், இது தெளிவான மூட நம்பிக்கை என்பதிலும் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நம்பலாம். எந்த இஸ்லாமியப் பிரிவைப் பின்பற்றினாலும் முஸ்லிம்கள் மேற்படி கொலைகளை சரி காணப் போவதில்லை, அத்துடன் இஸ்லாம் இது போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் மார்க்கம் என்றும் அவர்கள் தயங்காமல் கூறுவார்கள். அத்துடன் குறித்த பெற்றோருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூட உறுதியாகச் சொல்வார்கள்.

முஸ்லிம்களே, சிற்றூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர் மூட நம்பிக்கையால் தூண்டப்பட்டே தமது பிள்ளைகளை கொலை செய்துள்ளார்கள், அது தவறு, குற்றம் என்று புரிந்துகொள்ளும் அளவு அறிவும், சிந்தனைத் திறனும் கொண்ட உங்களுக்கு, நீங்கள் தினமும் ஐவேளைத் தொழுகையில் போற்றிப் புகழும் நபி இப்றாஹீம் செய்ய முயற்சித்தது மட்டும் தவறு, பிழை, குற்றம் என்று ஏன் புரியாமல் உள்ளது? வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு தடவை நீங்கள் இது குறித்து சிந்தித்தாவது பார்த்ததுண்டா?


குறித்த பெற்றோர் தாம் நம்பிய நம்பிக்கைப்படி கொலைகளை செய்தார்கள், இப்றாஹீமும் தனது நம்பிக்கைப்படி தனது மகனை கொலை செய்ய முயன்றார், ஆக அடிப்படையில் இரண்டுமே ஒரே விதமான தூண்டல்களால் செய்யப்பட்ட செயல்களே. இப்ராஹீம் தனது மகனை கொலை செய்ய முயன்றார் என்பதில் உள்ள அந்தக் கொலையை இன்றுவரை நீங்களும் இன்னொரு வடிவில் செய்து கொண்டுதானே இருக்கின்றீர்கள்? வருடாந்தம் உல்ஹியா (குர்பானி) என்ற பெயரில் பிராணிகளை பலி கொடுப்பதில் நீங்கள் மீண்டும் மீண்டும் செய்வது அந்தக் கொலையைத்தானே? அதனால் தானே குறித்த வயது நிரம்பிய, பல்லு, கொம்பு உடையாத ‘ஆண்’ பிராணிகளை மட்டும் தெரிவு செய்து கொலை செய்கின்றீர்கள்? ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்காகவே உல்ஹியா கொடுக்கின்றோம் என்று மழுப்பி விடாதீர்கள், ஏனென்றால் குறித்த நாட்களில் மட்டுமல்ல, ஏனைய நாட்களிலும் கூட ஏழைகளுக்குப் பசிக்கத்தான் செய்யும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? கொம்பு, பல்லு உடையாத குறித்த வயதுடைய ஆண் பிராணியின் மாமிசத்தை சாப்பிட்டால் மட்டும்தான் ஏழையின் பசி போகும் என்று யார் சொன்னது? ஆகவே நீங்கள் வருடாந்தம் செய்வது, குறித்த ஆந்திரப் பெற்றோர் செய்ததற்கு ஒப்பான மனநிலை கொண்ட ஒரு செயலே, இரண்டுமே மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கொலைகளே.


மகனைக் கொலை செய்ய முயன்ற இப்ராஹீம் நபியின் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே நீங்கள் மில்லியன் கணக்கில் செலவு செய்து மக்கா நகர் சென்று அந்த மூட நம்பிக்கை சார் கிரியைகளில் ஈடுபடுகின்றீர்கள். ஆண்கள் உள்ளாடை இல்லாமல் அந்த கறுப்புக் கட்டிடத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுவது, மூலையில் பாதிக்கப்பட்டுள்ள கருமையான கல்லை முத்தமிட முண்டியடிப்பது, கட்டிடத்தின் கல்லு பதிக்கப்பட்ட மூலைக்கு கை காட்டுவது, தூண்களுக்குக் கல்லெறிவது, மொட்டையடிப்பது என்று பல மூட நம்பிக்கை சார்ந்த கிரியைகளில் அங்கே ஈடுபடுகின்றீர்கள்.


ஆந்திரப் பெற்றோர் தமது மகள்களை நரபலி கொடுத்தது பிழை, குற்றம்,தவறு என்று உங்களுக்குப் புரிந்தால், இனிமேல் மக்காவுக்கு சென்று இப்ராஹீமின் நரபலியை, கொலையை நினைவுகூரும் மூடநம்பிக்கையில் ஈடுபடாமல், மக்கா செல்ல செலவிடும் அந்த மில்லியன் கணக்கான ரூபாய்கள் பணத்தை ஏழைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக செலவு செய்யுங்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
26.01.2021


பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.