ஆய்வுகூட மாமிசம் - ஹலாலா? ஹராமா? சைவமா? அசைவமா?


 தொடர்ந்து முன்னேறும் அறிவியலின் வளர்ச்சியானது 'கடவுளின் இடைவெளியை' குறுக்கிக்கொண்டு செல்வது போலவே, காலாவதியாகிப்போன மதங்களுக்கும் அடிக்கடி புதிய தலைவலிகளை உருவாக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் தற்பொழுது சந்தைக்கு வந்துள்ள ஆய்வுகூட மாமிசமானது ஹலால், ஹராம் பேசும் இஸ்லாம், கோஷரை வலியுறுத்தும் யூதம் ஆகியவற்றுடன் சைவம், அசைவம் பேசும் பெளத்த, இந்து மதங்களையும் இக்கட்டில் தள்ளி விட்டுள்ளது.உண்மையான மிருகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மிருக உயிரணுவை, உயிரணு வளர்ப்பு முறை மூலம் ஆய்வுகூடத்தில் வளர்த்து உற்பத்தி செய்யப்பட்ட 'ஆய்வுகூட மாமிசம்' தற்பொழுது சந்தைக்கு விற்பனைக்காக வந்துவிட்டது. நேற்றைய தினம் (02 டிசம்பர் 2020) 'சிங்கபூர் உணவு மேலாண்மை மையம்' ஆய்வுகூட மாமிசத்தை சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டது. உலகின் ஏனைய நாடுகளும் விரைவில் இதனை பின்பற்றி விற்பனைக்கான அனுமதிகளை படிப்படியாக வழங்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


1931 ஆம் ஆண்டு, முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் "நெஞ்சுப் பகுதியையோ, பக்கவாட்டு சதையையோ உண்பதற்காக முழுக் கோழியை வளர்த்து, அதனைக் கொல்லும் அபத்தத்தில் இருந்து விடுபட்டு, பொருத்தமான முறைமையின் கீழ் குறித்த பகுதிகளை மட்டும் வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த தொடர் ஆய்வுகள் இந்த நூற்றாண்டில் வெற்றிபெற ஆரம்பித்தன. அந்த வெற்றிகளின் முதற்படியாக ஆய்வுகூட மாமிசம் சந்தைக்குள் நுழைவதற்கு சிங்கப்பூர் பச்சைக்கொடி காட்டிவிட்டது. தொழில்முறை மிருகப் பண்ணைகள் குறித்து கடும் விமர்சனங்கள் உள்ள நிலையில் ஆய்வுகூட மாமிச உற்பத்தியின் வெற்றியானது உலகம் விரும்பும் மிகச் சிறந்த மாற்றீடாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


ஆய்வுகூட மாமிசம் உயிருள்ள மிருகத்தில் இருந்து நேரடியாக பெறப்படுவது இல்லை, அதற்கு கழுத்தும் இல்லை, தலையும் இல்லை, இதயமும் இல்லை, ஆகவே அதனை ஹலால் பண்ணுவதற்காக "பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" சொல்லி வெட்டுவதற்கு தோதாக அங்கே எதுவுமே இல்லை, அதே போன்று கோஷரும் பண்ண முடியாது. தற்பொழுது இந்த வகையில் உற்பத்தியான கோழி இறைச்சி மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் மாமிசங்களும் சந்தைக்கு வரப்போகின்றன. "நான் நினைத்துக் கொண்டு இருப்பது போன்று எனது மதம் முக்காலத்தையும் உணர்ந்த, சர்வ வல்லமை கொண்ட, மிகுந்த ஞானமுள்ள இறைவனிடமிருந்து வந்த ஒன்றல்ல" என்பதை உணர்ந்துகொள்ள சிந்திக்கக் கூடிய மனிதர்களுக்கு இது ஒரு அழகான சந்தர்ப்பம் ஆகும். சந்தர்ப்பத்தை பயன்படுத்த எத்தனை பேர் தயார்? எத்தனை பேருக்கு அந்த அளவு சிந்தனைத் தைரியம் உள்ளது?


'ஆய்வுகூட கோழி இறைச்சி' உயிரற்ற ஒன்று, அது உண்மையான கோழி அல்ல என்ற காரணத்தால் அதனை ஹலால் என்று சொன்னால், அதே விதிமுறையின் கீழ் 'ஆய்வுகூட பன்றி இறைச்சியையும்' ஹலால் என்று சொல்ல வேண்டி வரும். அப்படி சொல்லிவிட்டால் முஸ்லிம்களுக்கு முதன் முதலாக ஹலால் பேகன் (Bacon) சாப்பிடும் வரம் கிடைக்கலாம். 'ஆய்வுகூட கோழி இறைச்சி' ஹலால் இல்லை என்று சொன்னால், அதனை எப்படி, எங்கே அறுத்து ஹலால் ஆக்குவது? கழுத்தை எங்கே தேடிப் பிடிப்பது என்கின்ற விடையற்ற பல கேள்விகள் எழலாம்.


கேள்விகள் இவற்றுடன் நிற்கவில்லை, இஸ்லாமிய, யூத மதங்களைத் தாண்டி இந்து, பெளத்த மதங்களுக்குள்ளும் அவை நுழைகின்றன. சைவ உணவு உண்போரின் நிலை என்னவாகப் போகின்றது? 'ஆய்வுகூட மாமிசம்' சைவ உணவா, அசைவ உணவா? எந்த அடிப்படையில் முடிவு செய்யப் போகின்றீர்கள்?


இஸ்லாமிய மத அறிஞர்களே, ஆய்வுகூட கோழி இறைச்சி, ஆய்வுகூட ஆட்டு இறைச்சி, ஆய்வுகூட மாட்டு இறைச்சி ஆகியவைகளை மட்டும் ஹலால் என்று பத்வா கொடுத்து சாப்பிட்டுவிட்டு ஆய்வுகூட பன்றி இறைச்சியை, பேகனை ஹராம் என்று சொல்லி முஸ்லிம்களுக்கு வஞ்சனை செய்யப் போகின்றீர்களா? முக்காலத்தையும் உணர்ந்த எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வந்ததாகச் சொல்லிக்கொண்டு நீங்கள் பின்பற்றும் மதத்தில் நிகழ்காலப் பிரச்சினைகளுக்குக் கூட முறையான தீர்வு இல்லை என்பதால் நீங்கள் இன்னொரு தடவை தடுமாறப் போவது நிச்சயம். பிறை முதல், தொழுகை வரை ஏற்கனவே பல பிரிவுகளாக பிரிந்து, முரண்பட்டுக் கிடக்கும் இஸ்லாத்தில் இந்த விடயம் இன்னொரு வெடிப்பை, கருத்து முரண்பாட்டை உருவாக்கும் என்பது மட்டும் நிச்சயம், பத்வாக்கள் பறக்க ஆரம்பிக்கும் பொழுது அதனை நிதர்சனமாகக் கண்டு கொள்ளலாம். -றிஷ்வின் இஸ்மத்
03.12.2020 
பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.