கொரோனாவிற்கான தடுப்பு மருந்து ஹலாலா?

 

கொவிட் 19 இற்கான தடுப்பு மருந்துகள் பல தயாரிக்கப்பட்டு அவற்றில் சில தற்பொழுது பயன்பாட்டிற்கான அனுமதியைப் பெற்றுள்ளன, பிரித்தானியா உட்பட சில நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே முஸ்லிம்கள் மத்தியில் குறித்த தடுப்பூசி ஹலாலா, ஹராமா என்கின்ற பாழாய்ப்போன சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. இது குறித்த செய்திகளை BBC உற்பட பல முன்னணி ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.


தடுப்பு மருந்துகளின் உள்ளடக்கத்தில் பன்றியில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மூலப் பொருட்களும் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மருந்துகளின் ஹலால், ஹராம் தன்மை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. மும்பையில் கூடிய 9 அமைப்புக்களை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள் தடுப்பு மருந்தை முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளதாக இந்திய செய்தி ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது. வேறு சில அறிஞர்கள் ஹராமான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று கூறி உள்ளனர்.


இஸ்லாமிய மத நம்பிக்கைப்படி உலகம், மனிதர்கள், கிருமிகள், வைரஸ்கள் என்று அனைத்தையும் படைத்த இறைவனான அதே அல்லாஹ்வே தான் பன்றி, மதுசாரம், நாய் போன்றவற்றையும் படைத்து, படைத்த பின்னர் அவற்றை முஸ்லிம்களுக்கு நஜீஸாகவும், ஹராமாகவும் (அசுத்தமானதாகவும், தடுக்கப்பட்டதாவும்) ஆக்கி இருக்கின்றார். அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கின்றன, அனைத்தையும் அல்லாஹ்வே படைக்கின்றார் எனும் பொழுது கொவிட் 19 வைரஸ் உட்பட அனைத்து நோய்களையும் அல்லாஹ்வே உருவாக்கி இருக்க வேண்டும். மேலும் முஹம்மது நபியின் ஹதீஸ் ஒன்று இப்படி சொல்கின்றது. “ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" (முஸ்லிம் 4084)


அல்லாஹ்வே அனைத்தையும் படைக்கின்றார், அல்லாஹ்வே நோய்களையும் தருகின்றார், அவரே அவற்றையும் குணப்படுத்துகின்றார் என்றால், பல நோய்களுக்கான மருந்துகள் ஏன் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஹராம் ஆக்கியுள்ள பன்றி, மதுசாரம் மற்றும் உட்கொள்வதற்கு தடைசெய்யப்பட்ட விலங்குகள், பொருட்ககள் ஆகியவற்றுடன் தொடர்புபட்டு தயாராகின்றன? இதனை கேட்டால் அதற்கு முஸ்லிம்களிடம் இரண்டு பொதுவான பதில்கள் உள்ளன, ஒன்று ‘அல்லாஹ் சோதிக்கின்றார்’ என்று சொல்லி நழுவுவது, மற்றது ‘உயிர் போகும் நிர்ப்பந்தமான நிலையில் ஹராமானவற்றையும் பயன்படுத்த அனுமதி’ உண்டு என்று பழைய சப்பைக் காட்டைக் கட்டுவது.


ஹராமான பொருட்களுடன் தொடர்புபட்டு தயாராகும் மருந்துகள் அனைத்துமே உண்மையில் உயிர் போகும் ஆபத்தான நிலையில் மட்டும் பயன்படுத்தப்படுபவை அல்ல, மாறாக சாதாரண ஆரோக்கிய வாழ்க்கைக்காக பயன்படுத்தப் படுபவையும் அவற்றில் அடங்கும். கொரோனா கூட பலரைப் பொறுத்தவரை ஒரு உயிர் போகும் நோய் அல்ல. அதே போன்று நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி கூட உடனேயே உயிர் போகும் பயங்கரமான நோய் அல்ல, ஆனால் அதற்கான மருந்தின் தயாரிப்பில் பன்றி தொடர்பு படுகின்றது.


இஸ்லாத்தைப் பொறுத்தவரை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட இரத்தம் என்பது அசுத்தமான ஒன்றாகும். “தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். குர்ஆன் 2:173” இரத்தம் ஹராம் என்பதால் சில காலங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இரத்தம் கொடுப்பதில் ஈடுபடவில்லை, அதே போன்று சிகிச்சைகளின் பொழுது இரத்தம் பெற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை, இன்றைக்கும் அதே பிடிவாதத்துடன் இருக்கும் சில இஸ்லாமிய பிரிவுகள் உள்ளன, அதே போன்று கிறிஸ்தவ பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகளும்’ இரத்தம் ஏற்றிக் கொள்வதில்லை. மருத்துவ வளர்ச்சி காரணமாக சிகிச்சைகளின் பொழுது இரத்தம் ஏற்றிக் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறவே, இனிமேலும் அல்லாஹ்வின் கட்டளை என்று கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் இஸ்லாம் குப்பைத் தொட்டிக்கு போய்விடும் என்பதால் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய விளக்கங்களில் நாசுக்காக சில மாற்றங்களை கொண்டுவந்து இரத்தம் கொடுப்பதையும், ஏற்றிக் கொள்வதையும் நிர்ப்பந்தம் அடிப்படையில் அனுமதித்தார்கள், ஆனால் இன்று அதையும் தாண்டி பல படிகள் முன்சென்று இரத்த தான முகாம்களை இஸ்லாமிய அமைப்புக்களே நடத்தும் அளவுக்கு சென்று விட்டார்கள். ஆக, இஸ்லாம் காலத்திற்கு ஒவ்வாதது என்பது எதோ ஒரு வகையில் இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாகவே வெளிப்படுத்தப் பட்டுள்ளது.


“கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 5688) என்று ஹதீஸ் உள்ளது. இஸ்லாம் சொல்லுகின்ற படி பார்த்தால், ஏன் எந்த நோய்க்கான முக்கிய நவீன மருந்துகளும் அஜ்வா பேரித்தம்பழம், கருஞ்சீரகம், ஸம்ஸம் தண்ணீர் போன்றவற்றில் இருந்து தயாரவதில்லை என்பதை முஸ்லிம்கள் எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா? இவற்றைக் கொண்டு ஏன் கொரோனா போன்ற நோய்களை அல்ல, சாதாரண இருமலைக் கூட குணமாக்க முடிவதில்லை? “ஸம்ஸம் தண்ணீரில் பாரிய விஞ்ஞான அற்புதங்கள் உள்ளன என்று நாஸா விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்” என்ற விதமாக போலிப் பதிவுகளை பகிர்வதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் ஏன் இவற்றை பற்றி சிந்திப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. பதில் மிகவும் இலகுவானது, அல்லாஹ் என்று ஒரு இறைவனும் இல்லை, அப்படி ஒரு இறைவன் எதனையும் படைக்கவும் இல்லை. முஹம்மது என்ற மனிதனே அல்லாஹ்வின் பெயரால் அனைத்தையும் அவிழ்த்து விட்டு இருக்கின்றார், அதனால் அவரது அறிவு பல இடங்களில் அடி வாங்குகின்றது, ஆனாலும் முஸ்லிம்கள் சிந்திக்க அச்சப்படுகின்றார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய அறிஞர்கள் தயங்கித் தயங்கி மொழிபெயர்ப்புகளில் திணிப்புகளை மேற்கொள்கின்றார்கள், விளக்கங்களை மாற்றுகின்றார்கள். இஸ்லாத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு வேறு வழி இல்லையே!


முஸ்லிம்களே, இனிமேலும் இந்த ஹராம் ஹலால் எல்லாம் பார்க்காமல் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை, தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள், அல்லாஹ்வோ, துஆக்களோ, கருஞ்சீரகமோ, அஜ்வாவோ, ஸம்ஸம் தண்ணீரோ ஒன்றுக்கும் உதவாது, அவை உங்களை காப்பாற்றப் போவதில்லை. மருந்துகளை பன்றியில் தயாரித்தாலும், மதுசாரத்தில் தயாரித்தாலும், இல்லாத அல்லாஹ்விற்காக மனைதை போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் தாரளமாக பயன்படுத்துங்கள்.


குறிப்பு : தடுப்பு மருந்தை தயாரித்துள்ள ஆய்வுகூடங்களில் ஒன்று தமது தயாரிப்பில் பன்றியின் பாகங்கள் எவையும் கலக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும். முறையற்ற கருத்துக்களை தொடர்ந்து பகிரும் கணக்குகள் Block செய்யப்படும்.