சாப்பிட முன்னர் முஹம்மது நபி உண்மையில் கை கழுவினாரா?


 முஹம்மது நபியும், அவரது சகாக்களும் (சஹாபாக்களும்) கைகளாலேயே சாப்பிட்டு வந்தார்கள். கைகளால் உணவருந்துவது தென்னாசிய நாடுகளில் ஒரு வழமையாக இருந்தாலும் கூட, கரண்டிகளால் உண்ணக் கூடிய உணவுகளைக் கூட முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கைகளால் உண்ண விரும்புகின்ற நிலை உள்ளது, முஹம்மது நபியை பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையே அதற்குக் காரணம் ஆகும்.



சாப்பிட முன்னர் சுத்தம் கருதி கைகளை கழுவ வேண்டும் என்று இஸ்லாம் எங்கேயும் சொல்லவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இஸ்லாத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சில இஸ்லாமியவாதிகள் நஸஈ எனும் ஹதீஸ் தொகுப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பை முன்வைத்தார்கள். நான் இஸ்லாம் குறித்து இது வரை காலமும் முன்வைத்த விமர்சனங்கள், கேள்விகளில் ஒன்றிற்கு முதல் தடவையாக ‘பதில்’ என்று கருதக் கூடிய ஒன்றை முன்வைத்த அந்த இஸ்லாமியவாதிகளுக்கு, அவர்களின் முயற்சிக்காக நன்றியை சொல்லிக் கொள்கின்றேன். குறித்த இந்தப் பதிலை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும் என்று வந்த எல்லோருமே இதுவரை செய்ததெல்லாம் வீண் வாதம் புரிந்தது, எனக்கு மோசமாக ஏசியது, அச்சுறுத்தல் விடுத்தது, விடயத்திற்கு தொடர்பில்லாமல் வேறு ஏதாவது பேசியது, ஒரு விடயத்தில் இல்லாமல் விடயத்திற்கு விடயம் தாவித் தாவி ஓடியது, கேவலாமான வார்த்தைகளில் தங்கள் சுய ரூபத்தை காட்டிவிட்டு சென்றது போன்றவைதான். அந்த வகையில் இந்தப் 'பதில்' என்னைப் பொறுத்தவரை முக்கியமான ஒன்று ஆகும்.


இப்பொழுது அந்த 'பதிலில்' குறிப்பிடப்பட்டிருந்த குறித்த ஹதீஸ் என்ன சொல்கின்றது என்பதை சற்று நோக்குவோம்.
عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ غَسَلَ يَدَيْهِ ‏.

இதுதான் குறித்த ஹதீஸ், இது நஸஈ எனும் ஹதீஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ‘பதிலாக’ வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்ன சொல்கின்றது என்பதையும் பார்ப்போம்.

"நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.
ஆயிஷா (ரலி),நஸயீ 256"

தமிழ் மொழிபெயர்ப்பிற்கு தொடர்பற்று அரபியில் وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ غَسَلَ يَدَيْهِ என்று மாத்திரமே இடம்பெற்றுள்ளது, ஆதாவது அடைப்புக் குறிக்குள் இடம்பெற்றுள்ள ‘வழக்கம் போல’ என்பது ஹதீஸில் அதன் மூல மொழியில் காணப்படவில்லை, தமிழில் மொழி பெயர்த்தவர் முஹம்மது நபியை சுத்தமானவர் என்று காட்டுவதற்காக, சொந்த செலவில் நபியை சுத்தம் செய்ய சேர்த்துக்கொண்ட சொந்தச் சரக்கே அது.

குறித்த ஹதீஸ் மட்டும் தனியாக நஸஈ தொகுப்பில் இடம்பெறவில்லை, அதே ஹதீசுடன் இணைந்து மேலும் பல ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன, அவை அனைத்தும் குளிப்பு கடமையான நிலையில் தூங்குவது, உணவருந்துவது, பருகுவது பற்றிக் குறிப்பிடுகின்றன. விந்து வெளியாகினால் ஒரு ஆணுக்கு குளிப்பு கடமையாகிவிடும் என்பது முஹம்மது நபியின் போதனை. குளிப்பு கடமையான நிலையில் உணவருந்த கைகளை கழுவியதாக குறித்த ஹதீஸ் மட்டுமே குறிப்பிடுகின்றது, ஏனைய ஹதீஸ்கள் தொழுகைக்கு போன்று வுழு செய்ததாகவே குறிப்பிடுகின்றன.

"‏ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلاَثَ حَثَيَاتٍ مِنْ مَاءٍ ثُمَّ تُفِيضِينَ عَلَى جَسَدِكِ ‏"‏ ‏.‏
(அதே தொகுப்பில் 242 ஆவது ஹதீஸ், இது என்ன சொல்கின்றது என்பதை தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ - زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ - وُضُوءَهُ لِلصَّلاَةِ ‏

இது 255 ஆவது ஹதீஸ், இது என்ன சொல்கின்றது என்றால், குளிப்பு கடமையான நிலையில் முகம்மது நபி தூங்குவதற்கோ, உணவருந்தவோ நாடினால் தொழுகைக்கு போன்று வுழு செய்துகொள்வார் என்பதாகும்.


முக்கியமாகிய கவனிக்க வேண்டிய ஹதீஸ் இதுவாகும் :

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ تَوَضَّأَ وَإِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ أَوْ يَشْرَبَ - قَالَتْ - غَسَلَ يَدَيْهِ ثُمَّ يَأْكُلُ أَوْ يَشْرَبُ ‏.

257 ஆவது ஹதீஸாக இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸையும், இதற்கு முந்திய உணவருந்தல் தொடர்பான ஹதீஸை அறிவித்த ஆயிஷாவே அறிவிக்கின்றார், இதிலே “உண்ணவோ, பருகவோ நாடினால்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சுத்தம் தான் காரணம் என்றால் உணவருந்த கைகளை சுத்தம் செய்வது சரி, ஆனால் பருகுவதற்காக கைகளை சுத்தம் செய்ய தேவையில்லையே? ஆனால் இவை குளிப்பு கடமையான நிலை குறித்த ஹதீஸ்களாக உள்ளன, ஆகவே தூங்குவதற்கு முன்னர், உணவருந்த முன்னர், பருக முன்னர் வுழு செய்வது, கைகளை கழுவுவது பற்றி பேசுகின்றன. இவை உணவு உட்கொள்வதற்கு கைகளை சுத்தம் செய்யும் சுகாதார நடைமுறை பற்றிப் பேசும் ஹதீஸ்கள் அல்ல.


விந்து வெளியேறி குளிப்பு கடமையான நிலையில், தொழுகை, பள்ளிவாசலில் நுழைதல், தவாப் செய்தல் போன்ற பல செயல்களை செய்வதற்கு இஸ்லாம் தடை செய்து உள்ளது, அத்தகைய நிலையில் சில செயல்களை (தூங்குதல், உண்ணுதல், பருகுதல்) செய்ய முயலும் பொழுது எப்படி அவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் மட்டுமே குறித்த ஹதீஸ்கள் ஆகும்.



ஆகவே மேற்குறித்த ஹதீஸ்கள் குறிப்பிடுவது உணவருந்த முன்னர் சுகாதாரம் கருதி கை கழுவுவது பற்றிய கருத்தை அல்ல, மாறாக குளிப்பு கடமையான நிலையில், அந்த கடமையான குளிப்பை நிறைவேற்றாமல் தாமதப் படுத்தினால் செய்ய வேண்டிய மத கடமை பற்றியே என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். மேலும் யூதர்களின் தோராஹ் வேதத்தை மேற்கோள் காட்டி, உணவருந்த முன்னர் கை கழுவ வேண்டும் என்று அபூதாவூதில் இடம்பெற்றுள்ள ஹதீசும், இப்னு மாஜாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் பலவீனமானவை, ஏற்கத்தகாதவை என்று குறித்த துறை சார் இஸ்லாமிய அறிஞர்களே நிராகரித்துவிட்டார்கள் என்பதால் அவை குறித்து அலசுவது தேவையற்றது.


எந்த ஒரு ஹதீஸ் நூலிலும் உணவருந்தல் தொடர்பான பாடங்களில் இப்படியான எந்த ஒரு ஹதீஸையும் காண முடியவில்லை, அத்துடன் குர்ஆனிலும் இது குறித்து ஒரு சிறு குறிப்புக் கூட இல்லை.

கடைசியாக, இந்த ஹதீசுடன் ஆக்கத்தை நிறைவு செய்கின்றேன் :

النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏
"‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا ‏"

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் சாப்பிட்டு முடிந்ததும் அவர் தம் கையைத் தாமே சூப்பமல், அல்லது அடுத்தவரிடம் சூப்பக் கொடுக்காமல் அதனை துடைக்க வேண்டாம்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

புகாரி 5456

வாந்தி வந்தால் நான் பொறுப்பில்லை.

றிஷ்வின் இஸ்மத்
25.11.2020


பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.