பொய்ச் சாட்சியத்தை தடை செய்த இஸ்லாத்தின் நுழைவாயிலே பொய்ச் சாட்சியமா?

 

இஸ்லாத்தில் இருப்பதாக தமக்கு சொல்லப்படும் அனைத்தையும் முஸ்லிம்கள் அப்படியே நம்புகின்றார்கள். தங்கள் கேள்வி ஞானத்தை இன்னொரு இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக, இன்னொரு இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக கேள்வி கேட்டு தங்களது இஸ்லாமிய புரிதல் சரி என்பதை நிரூபிக்க பயன்படுத்துகின்றார்களே தவிர கண்ணெதிரே தெரியும் தெளிவான இஸ்லாமிய முரண்பாடுகளை, பிழைகளைப் பற்றி கேள்வி கேட்க, சிந்திக்க பயன்படுத்த முயற்சிப்பதே இல்லை.


நான் இஸ்லாத்தைக் கற்காமல், இஸ்லாம் என்னவென்று தெரியாமல் இஸ்லாத்தை விமர்சிக்கின்றேன் என்று தப்பாக நினைத்துக்கொண்டு எனக்குப் பதில் சொல்லி இஸ்லாத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது பதிவுகளுக்கு பதில் சொல்ல வருபவர்கள் அநேகமானவர்கள் இஸ்லாத்தை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தை முறையாகக் கற்ற எவரும் பதில் சொல்ல வந்ததை நான் கண்டதில்லை. அப்படி யாரவது Tag பண்ணி அழைத்தால் கூட மெளலவிகள் சாக்குப் போக்கு சொல்லிவிட்டு, அல்லது எனக்கு ‘வழிகேடு’ என்று முத்திரை குத்திவிட்டு நழுவி விடுவதையே கண்டு வருகின்றேன்.


இஸ்லாம் தெரியாமல் பதில் சொல்ல வருகின்றவர்களும் கூட நேரடியாக பதில் சொல்லாமல் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி பேசுவதிலும், தொடர்ச்சியாக ஒன்றிலிருந்து இன்னொன்றிக்கு என்று விடயம் விட்டு விடயம் தாவி ஓடுவதையும், எதாவது கோமாளித்தனமாக பேசிவிட்டு தாங்களே "ஹாஹாஹா" போட்டுக் கொள்வதையும் அல்லது எனக்கு சாபமிடுவதையுமே கண்டு வருகின்றேன். சற்று உட்கார்ந்து நடுநிலையாக சிந்தித்தால் ‘இஸ்லாம் எல்லாம் வல்ல, அனைத்தையும் அறிந்த, மிக்க அறிவுள்ள, அனைத்தையும் படைத்த இறைவனிடம் இருந்து வந்த வழிகாட்டலாக இருக்கவே முடியாது’ என்பதை இலகுவாக புரிந்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஆயிரக்கணாக்கான விடயங்கள் இஸ்லாத்தில் கொட்டிக் கிடக்கின்றன, ஆனால் சிந்திப்பதற்கு தயாரான முஸ்லிம்களைத்தான் காண முடியாமல் இருக்கின்றது. இப்பொழுது அவ்வாறான விடயங்களில் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; (குர்ஆன் 25:72)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்த மாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள். ( சஹீஹுல் புகாரி 5976)

பொய் கூறுவது தவறு, அதிலும் பொய் சாட்சியம் கூறுவது மோசமான தவறு, இஸ்லாமிய போதனைகளின் படி பார்த்தாலும் பொய் சாட்சி கூறுவது பெரும் பாவம் ஆகும். சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.


ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு, முஸ்லிமாக மாறுவதற்கு மட்டுமின்றி, முஸ்லிமாக இருப்பவர்களும் கூட அடிக்கடி மொழியும், ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பில் கூட உள்ளடங்கியுள்ள பிரகடனம் தான்
اَشْهَدُ اَنْ لَّآ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَہٗ لَاشَرِيْكَ لَہٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُولُہٗ
என்பதாகும்.
இதன் அர்த்தம் ‘அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை. மேலும் முஹம்மது அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்.’ என்பதாகும். முஹம்மது நபியையோ, அல்லாஹ்வையோ காணாத ஒருவர், இதிலுள்ள விடயங்கள் எதனையுமே காணாத ஒருவர், எத்தகைய அறிவும் இன்றி இத்தகைய சாட்சியத்தை சொல்லித்தான் முஸ்லிம் ஆகின்றார் என்றால், அவர் பொய்ச் சாட்சியம் சொல்வதன் மூலமே முஸ்லிமாக மாறுகின்றார். ஆக ஒவ்வொரு முஸ்லிமின் ஆரம்பமும் ஒரு பொய்யிலேயே, பொய்ச் சாட்சியத்திலேயே ஆரம்பிக்கின்றது.

'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒருவன் நம்புவது' என்பதும், 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சியம் சொல்வது' என்பதும் ஒன்றல்ல, இரண்டிற்கும் இடையில் பாரதூரமான பாரிய வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக ஒருவரைப் பார்த்து 'இவர் திருடனாக இருக்க வேண்டும்' என்று நீங்கள் நினைத்துக் கொள்வதற்கும், அவரை 'இவர் திருடன்தான்' என்று நீங்கள் சாட்சியம் சொல்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இங்கு اَشْهَدُ / شهد “சாட்சியம்” என்பதே பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே இஸ்லாத்தின் ஆரம்பமே ஒரு பொய்ச் சாட்சியத்துடன், அதுவும் இஸ்லாமே பெரும் பாவம் என்று கூறித் தடுத்த ஒன்றுடனே ஆரம்பமாகின்றது.

முஹம்மது நபிக்கு வஹி (இறைசெய்தி) வந்ததற்கு என்ன ஆதாரம், யார் சாட்சி போன்ற விடயங்களைக் கூட இங்கே ஆராயவில்லை, மாறாக ஒவ்வொரு முஸ்லிமும் மொழிகின்ற, முஸ்லிமாக மாறுகின்ற ஒவ்வொருவரும் மொழிகின்ற அந்தப் பிரகடனத்தை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றேன். இஸ்லாத்தில் இது போன்ற மற்றும் இதனை விட மிகவும் பாரதூரமான பல முரண்பாடுகள் உள்ளன, இஸ்லாத்தை விட்டு வெளியேறுகின்றவர்கள் எல்லோரும் இஸ்லாம் தெரியாமல் வெளியேறுகின்றவர்கள் அல்ல, இஸ்லாத்தை அறிந்து, சிந்திப்பதனால் வெளியேறுகின்றவர்களே அதிகம்.

முஸ்லிம்களே, இது குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திக்கத் தயாரா?பொறுப்புத்துறப்பு:
எனது பதிவுகள், இடுகைகள், பகிர்வுகள், பின்னூட்டங்கள் மற்றும் பதில்களின் கீழே பதியப்படும் கருத்துக்களில் மிகவும் காத்திரமான கருத்துக்கள் மட்டுமே கவனத்திற் கொள்ளப்பட்டு பதிலளிக்கப்படும், அல்லது அவற்றிற்கான பதில்கள் முக்கியத்துவம் கருதி தனிப் பதிவாக இடப்படும். அர்த்தமற்ற புலம்பல்கள், நேரம் மற்றும் வளங்களை விரயமாக்கும் நோக்கில் அமைந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள், ஆரோக்கியமற்ற கருத்துக்கள், விடய அறிவு இன்றி முன்வைக்கப்படும் கருத்துக்கள், பதிவுடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற கருத்துக்கள், காழ்ப்புணர்வின் காரணமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்படமாட்டது. அத்துடன் மோசமான மொழிநடையில் அமையும் கருத்துக்கள் காணப்பட்டால் அவை அவ்வப்பொழுது நீக்கப்படும்.