குண்டுத் தாக்குதல்கள் – ஜமாத்தே இஸ்லாமிக்கு ஏற்கனவே தெரியுமா? ஓர் அறிவுரை
விரும்பியோ, விரும்பாமலோ ஜமாத்தே இஸ்லாமி ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு விட்டது. தாக்குதல்களைத் திட்டமிட்டதில் ஜமாத்தே இஸ்லாமிக்கு நேரடிப் பங்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற ஒன்றை இந்த நாட்டில் விதைத்ததில் ஜமாத்தே இஸ்லாமிக்கு உள்ள மிக முக்கிய பங்கை அல்லது முழுமையான பங்கை எப்படியும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது, அத்துடன் எக்காரணம் கொண்டும் நிராகரிக்கவும் முடியாது.


ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து வகுப்பெடுத்தது, இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது பற்றி பயிற்சி நெறிகள் நடாத்தியது, உலகளாவிய இஸ்லாமிய கிலாபத் உருவாக்குவது தொடர்பில் திட்டங்கள் தீட்டியது, கலிமாவின் இலாஹில் ஹாகிமியத் பேசி அந்நிய ஆட்சியின் சட்டங்களுக்கு கட்டுப்படுவது அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் பாவம் (ஷிர்க்) என்று போதனை செய்தது, இஸ்லாமிய ஷரியத் சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்று வலியுறுத்தல் செய்தது, இலங்கையில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள், போராட்டங்கள் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியது என்று ஜமாத்தே இஸ்லாமி செய்த செயல்களையும், போதனைகளையும், பயங்கரவாத செயற்பாடுகளையும் அந்த இயக்கம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது, அவற்றிற்கான வாழும் ஆதாரங்களாக, சாட்சிகளாக பல பேர் உள்ளனர்.மெளலவி ஹஜ்ஜுல் அக்பரின் இளைய சகோதரர் மெளலவி இப்ராஹீம் அவர்களும், அவரின் புத்திரர்களும், அவர்களை சார்ந்தவர்களும் (இவர்கள் அனைவருமே ஜமாத்தே இஸ்லாமியின் தயாரிப்புகள்) கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றார்கள் என்பதை ஜமாத்தே இஸ்லாமி முன்கூட்டியே நன்கு அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாகவே 24 வருடங்கள் அதன் வெற்றிகரமான தலைவராக செயற்பட்டவரை தலைமையில் இருந்து மாற்றுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத நிலையில் ‘யாப்பு சீர்திருத்தம்’ என்று பூச்சாண்டி காட்டி, தாக்குதல்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைவரை நியமிக்கும் நாடகத்தை கண்டி பள்ளேகலையில் அரங்கேற்ற வேண்டி ஏற்பட்டது. 65 வருட வரலாற்றைக் கொண்ட ஜமாத்தே இஸ்லாமி யாப்புக் சீர்திருத்தம் என்று பூச்சாண்டி காட்டி தலைமைத்துவ மாற்றம் செய்யக் காரணம், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்யப்பட்டாலும், அது இயக்கத்தை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற முன்னெச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஆக, கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடக்க இருப்பதையும், தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைதுசெய்யப்படுவார் என்பதையும் ஜமாத்தே இஸ்லாமியும், ஹஜ்ஜுல் அக்பரும் முன்கூட்டி நன்கு அறிந்தே இருந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால், 65 வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட இயக்கம், அதன் வெற்றிகரமான தலைவரை பூச்சாண்டி காட்டி மாற்றியிருக்க மாட்டாது.


குண்டுவெடிப்புடன், தாக்குதல்களுடன், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட பெரும்பாலானவர்கள் ஜமாத்தே இஸ்லாமியில் இருந்து வந்தவர்களே. ஸஹ்ரான் மற்றும் ஒரு சிலரே தெளஹீத் பின்னணியைக் கொண்டவர்கள். மெளலவி நெளபர் கூட இஸ்லாஹியாவின் மாணவனே. ஸாதித் அப்துல்லாஹ் ஹக் இப்ராஹீம் உட்பட பலர் துருக்கி செல்ல காரணம் ஜமாத்தே இஸ்லாமியே.இந்நிலையில் ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர்கள், ஊழியர்கள் கைது செய்யப்படுவதையும், விசாரணைக்கு உள்ளாவதையும், சிறைக்குச் செல்வதையும் தவிர்ப்பதற்கு நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த இயக்கத்தின் தற்போதைய தலைமைக்கு உள்ளது. அல்ஹஸனாத்தில் தஃவா கள பக்கங்களை வெள்ளையாக விட்டு மெஜிக் காட்டி இயக்க ஆதரவாளர்களை, அங்கத்தவர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதிலும், மாயைக்குள் வைத்திருப்பதிலும் பயனில்லை. பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லை என்பதை ஜமாத்தே இஸ்லாமியின் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.ஜமாத்தே இஸ்லாமி கள்ள மெளனம் காத்து உண்மைகளை மூடி மறைக்க முயன்றாலும், பாதுகாப்புத் தரப்பினரும், உளவுப் பிரிவினரும் உடனடியாக இல்லாவிட்டாலும் தாமதமாகவேனும் அனைத்தையும் கண்டுபிடிக்கத்தான் போகின்றார்கள். தாமாகவே உண்மைகளை சொல்ல பலபேர் தயாராக இருக்கின்றார்கள், மேலும் விசாரணைகள் மூலமும் உளவுப் பிரிவினர் பல உண்மைகளை கண்டறிந்து வருகின்றார்கள். என்னை விசாரணைக்கு அழைத்தால், ஜமாத்தே இஸ்லாமி குறித்து நான் அறிந்த விடயங்களை சொல்லவும், ஆதாரங்களை முன்வைக்கவும் தயாராகவே இருக்கின்றேன். பயங்கரவாதத்திற்கு வித்திட்ட, இளைஞர்களை மூளைச் சலவைக்கு உள்ளாக்கிய, என்னையே கொலை செய்ய முயற்சி செய்தவர்களை உருவாக்கிய, நாட்டின் பாதுகாப்பிற்கும், மனித வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஓர் அமைப்பைப் பற்றிய உண்மைகளை சொல்லாமல் இருப்பதற்கு எனக்கு எந்தக் காரணமும் இல்லை.


ஜமாத்தே இஸ்லாமி தொடர்ந்தும் சிலையாக இருப்பதாக நடிக்காமல், தக்கியா பண்ணாமல், தாமாகவே முன்வந்து அனைத்து உண்மைகளையும் பாதுகாப்புத் தரப்பினருக்கும், அரச தரப்பினருக்கும் முழுமையாகத் தெரிவித்து, தமது குற்றங்கள், தவறுகளுக்கு பொறுப்பு ஏற்று பொது மன்னிப்பைக் கோருவதுதான் இந்த சந்தர்ப்பத்தில் அந்த இயக்கம் அதன் அங்கத்தவர்களுக்கும், அதனை நம்பியவர்களுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும், இந்த நாட்டின் மக்களுக்கும் செய்யக்கூடிய நல்ல காரியமாக இருக்கும்.


ஜமாத்தே இஸ்லாமியால் இவ்வளவு காலமும் மேலே சுட்டிக்காட்டியுள்ள படியாக இந்த நாட்டில் செயற்பட முடிந்து இருக்கின்றது என்றால் இந்த நாட்டின் அரசு, பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் உளவுப் பிரிவினரின் குறைபாடுகளும் அதற்கான காரணம் ஆகும், ஆகவே அவர்களுக்கும், பொறுப்பு உள்ளதால், ஜமாத்தே இஸ்லாமியின் தலைமை இனிமேலும் தாமதிக்காமல் அனைத்து உண்மைகளையும் பகிரங்கப் படுத்தி பொது மன்னிப்புக் கோருவதுடன், பயங்கரவாத நடவடிக்கைகள், பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டவர்களுக்கும், தீவிர மூளைச் சலவைக்கு உள்ளாக்கப் பட்டவர்களுக்கும் உரிய முறையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களும் சாதாரண பிரஜைகளாக இந்த நாட்டில் வாழ வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஜமாத்தே இஸ்லாமி இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால், அதன் காரணமாக அந்த இயக்கத்தால் பயங்கரவாத நடவடிக்கைகள், பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டவர்கள், தீவிர மூளைச் சலவைக்கு உள்ளானவர்கள், பயங்கரவாத மனநிலையில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதன் அங்கத்தவர்கள், அதனை நம்பி வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களை கருத்தில் கொண்டு ஜமாத்தே இஸ்லாமி இதனை உடனடியாக செய்வதே சரியானது.


ஜமாத்துஸ் ஸலமா, உஸ்தாத் மன்சூர் மற்றும் அவரின் கூட்டத்தினர் போன்றவர்களும் உண்மைகளை அறிக்கையிடுவதே சரியானது. இஸ்லாமிய பயங்கரவாத போராட்டங்களிற்காகவும், பயிற்சிகளுக்காகவும் ஜமாத்தே இஸ்லாமி இளைஞர்களை அனுப்பிக்கொண்டு இருந்த பொழுது உஸ்தாத் மன்சூர் ஜமாத்தே இஸ்லாமியின் முக்கிய புள்ளியாக செயற்பட்டவர், ஆகவே அவர் தனது பங்களிப்புக் குறித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமே தவிர, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று நழுவ முயலக்கூடாது. 


தேசியக் கொடிகளை ஏற்றியும், தேசிய கீதம் பாடியும், சுதந்திர தினம் கொண்டாடியும், ‘குரான் வன்முறையை போதிக்கின்றதா’ என்று புத்தகங்கள் எழுதியும், ‘இஸ்லாமிய ஆட்சி இஸ்லாத்தில் கடமை இல்லை’ என்று பேசியும் தக்கியாக்கள் செய்து ஏமாற்ற முயல்வதைத் தவிர்த்து, மனித குலத்தின் நன்மைக்காக நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துஸ் ஸலமா மற்றும் உஸ்தாத் மன்சூர் தரப்பினர் முன்வர வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இந்நாட்டில் இனியொரு பொழுதும் இடமிருக்கக் கூடாது. இஸ்லாமிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வகை பயங்கரவாதங்கள், இனவாதங்கள், மதவெறிகள், போன்ற அனைத்தும் அகற்றப்பட வேண்டும், தற்பொழுது ஜமாத்தே இஸ்லாமி அடுத்த அடியை எடுத்து வைக்கட்டும்.

-றிஷ்வின் இஸ்மத்
27.09.2019

Comments