"கடவுளின் கை" - உலகை ஏமாற்றிய கதை

 

கொலம்பியாவில் நடைபெறவேண்டிய 1986 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள், அந்த நாடு எதிர்கொண்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக மெஹிகோவில் நடைபெற்றன. போட்டிகளின் மூன்றாவது காலிறுதியில் டியகோ மரடோனா தலைமையிலான ஆர்ஜன்டினா அணி இங்கிலாந்து அணியை ஜூன் 22 ஆம் திகதி ஒரு லட்சத்து பதினையாயிரம் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த அஸ்டெகா அரங்கில் எதிர்கொண்டது. இரு அணிகளுமே Goal எதுவுமே பெறாத நிலையில் முதல் பாதி நிறைவு பெற்றது. (போட்டி ஜூன் 11 இல் நடைபெற்றதாக கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவின் ஆரம்பத்தில் காட்டப்படுவது தவறாகும்.)

இரண்டாம் பாதியின் ஆறாவது நிமிடம் இங்கிலாந்து அணியின் தலைவரும் Goal காப்பாளருமான ஆறு அடி ஓரங்குலம் உயரமான பீட்டர் ஷில்டன் மேலே பாய்ந்து கைகளை நீட்டி தடுக்க வேண்டிய உயரத்தில் இருந்த பந்தை, பீட்டர் ஷில்டனை விடவும் 8 அங்குலங்கள் உயரம் குறைந்த மரடோனா இடது கையால் குத்தி போஸ்ட் இற்கு உள்ளே தள்ளிவிட்டு, தலையால் அடித்து Goal போட்டதாக போட்டியின் நடுவராக இருந்த துனிசிய நாட்டவர் அலி பின் நஸ்ஸரை ஏமாற்றினார். "I was waiting for my teammates to embrace me, and no one came... I told them, 'Come hug me, or the referee isn't going to allow it.'" என்று மரடோனா அந்த நொடிகளில் நடந்ததை கூறுகின்றார். இங்கிலாந்தின் வீரர் டெரி பென்விக் நடுவரிடம் கடுமையாக ஆட்சேபித்தும் எதுவும் நடக்கவில்லை. கையால் குத்திப் போட்ட Goal இன் உதவியுடன் 2 -1 என்று இங்கிலாந்தை காலிறுதியில் தோற்கடித்த ஆர்ஜன்டினா அப்படியே முன்னேறி இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை 3 - 2 என்று தோற்கடித்து உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றிக் கொண்டது.

சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படக் கூடிய தவறொன்றை செய்து (உதைபந்தாட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டது)
ஒருலட்சத்து பதினைய்யாயிராம் நேரடிப் பார்வையாளர்களின் முன்னிலையில் நடுவரை ஏமாற்றி மோசடியான முறையில் கையின் மூலம் Goal போட்ட மரடோனா, தான் செய்த மோசடிச் செயலுக்கு வைத்த பெயர் "கடவுளின் கை". இன்றளவும் உலகம் முழுவதும் அந்தப் பெயர்தான் பிரபலம்.

"கடவுளின் கை" போன்ற சொற்கள் நமக்கும் நிறையவே பரிச்சயமானவை அல்லவா? சிறுமியை ஆட்டையைப் போடும் கிழவன், பொதுச் சொத்துக்கள், அடுத்தவனின் நிலங்களை தந்திரமாக அபகரிக்கின்றவன், மோசடிக்காரன், குற்றவாளி, ஏமாற்றுப் பேர்வழி, கள்ளன், கயவன், சதிகாரன் போன்ற பேர்வழிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இப்படியான அமைப்பில்தான் இருக்கும். கொழும்பு புறக்கோட்டையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நண்பர் சொல்லுவார் "ஒருவர் பணத்தை தருகின்றேன் என்று சொன்னால் தருவார் என்று அர்த்தம், இன்ஷா அல்லாஹ் தருகின்றேன் என்று சொன்னால் தரமாட்டார் என்று அர்த்தம்". தாருன் நுஸ்ரா குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளக்கிய சந்தேகநபரும், அவனுக்கு வெள்ளையடிக்க முயலும் டாக்டரம்மாவும் கூட அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "அல்லாஹ்".

கடவுளுக்காக, அல்லாஹ்விற்காக, ஆண்டவனுக்காக, இறைவனுக்காக என்று சொல்லிக்கொண்டு யாரவது வந்தால், ஆசாமி குறித்து எக்ஸ்ட்ரா அலெர்ட் ஆக இருந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் கடவுளின் கை உங்களுக்கும் Goal போட்டுவிடும், ஜாக்கிரதை!