இஸ்லாத்தை சரிகாணும் முஸ்லிம்களுக்கும், அனைத்து மெளலவிகளுக்கும் ஓர் பகிரங்க சவால்!

மாவனல்லை நயாவலை மஸ்ஜிதுல் ஹமீதியாவில் இரண்டு சுண்ணி முஸ்லிம் இயக்கங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் இடம்பெற்ற மத உள்விவகாரம் சம்மந்தமான மோதலின் CCTV காணொளியே பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி சொல்ல வரும் செய்தி “இஸ்லாம் உண்மையான இறைவேதம்” என்று நம்புகின்ற முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானது.
"எனது இஸ்லாமியப் பிரிவு (ஜமாஅத்) சொல்வதுதான் சரியான இஸ்லாம், நீ சொல்வது பிழையான இஸ்லாம்" என்பதுதான் இந்த மோதலின் அடிப்படை ஆகும். இரண்டு தரப்புமே இஸ்லாத்தை சரியாக பின்பற்றவேண்டும் என்ற அதீத ஆவலில் செயற்படும் இயக்கங்கள் (ஜமாஅத்கள்) ஆகும். இதில் எந்த இயக்கத்தின் அங்கத்தவர்களும் இஸ்லாத்தை நாசமாக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டவர்கள் கிடையாது. ஆனால் உண்மை என்னவென்றால், 1400 வருடங்கள் கடந்தும் "சரியான, முழுமையான, இறைவனால் பாதுகாக்கப்பட்ட" இஸ்லாத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ளது என்பதுதான் ஆகும். இப்படியாக சரியான பாதுகாக்கப்பட்ட உண்மையான இஸ்லாத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் தான் ஆளுக்கு ஒவ்வொன்றாக ஒவ்வொரு வடிவத்தில் ஒவ்வொன்றை பிடித்துக்கொண்டு மற்றப் பிரிவுகளுடன் பகைமை வளர்த்து மோதலில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மற்றப் பிரிவினரின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்காக என்று சொல்லி குண்டுவெடிப்புக்களையும் நிகழ்த்துகின்றனர்.

"யாவற்றையும் படைத்த, யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ள, யாவற்றையும் நன்கறிந்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வால் உலகம் அழியும் வரை பின்பற்றப்படுவதற்காக அனுப்பப்பட்ட, பாதுகாக்கப்பட்ட இறுதி வழிகாட்டல்தான் இஸ்லாம்" என்பதே முஸ்லிம்களின் இஸ்லாம் குறித்த அடிப்படையான நம்பிக்கை ஆகும். சபூர், யூதம் (தோரா- தெளராத்), கிறிஸ்தவம் (இன்ஜீல்) ஆகிய மதங்களை அனுப்பிய அல்லாஹ், தன்னால் அவற்றை பாதுகாக்க முடியாமல் போய்விட்டது, அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து அவற்றை மாசுபடுத்திவிட்டன என்பதால் "இறுதி நாள் வரை பாதுகாப்பேன்" எனும் வாக்குறுதியுடன் அனுப்பிவைத்த இறுதி மதம்தான் இஸ்லாம் என்றால், அல்லாஹ் பாதுகாத்து வைத்திருக்கும் அந்த முழுமையான இஸ்லாம் இன்றைக்கு எங்கே? அப்படி ஒன்று இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால் கூட, அது ஏன் அதிகமான மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப் படத்தக்க அளவிற்கு இல்லாமல் உள்ளது?மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிரிசேன என்பவர் சுமார் இரண்டு மாதங்கள் பிரச்சாரம் செய்து, தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மொத்த வாக்காளர்களில் 50% இற்கு அதிகமானவர்களை தன்னை ஏற்றுக்கொள்ள வைத்து இலங்கையின் ஜனாதிபதி ஆனார். ஆனால் கிறிஸ்தவமும், யூதமும் மனிதக் கரங்கள் புகுந்து விளையாடியதன் காரணமாக காலாவதியாகிவிட்டன என்று சொல்லி இஸ்லாத்தை இறக்கிவைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வால், இஸ்லாம் மதம் 1400 வருடங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டும் கூட ஒரு 25% மக்களைக் கூட அதனை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாமல் போயுள்ளது என்பது, அந்த அல்லாஹ்வின் உண்மையான ஆற்றல் குறித்த கடுமையான சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது.இறுதி வேதமான இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிரந்தரமான நரகம் என்று இஸ்லாம் பயமுறுத்தும் விதமாக உள்ளதன் காரணமாக, இஸ்லாம் குறித்த ஒரு முக்கியமான கேள்வி சிந்தனையில் எழுவதை தவிர்க்க முடியாமல் உள்ளது. அற்ப அறிவு கொண்ட மனிதர்களால் செயற்படுத்தப்படும் டொயோட்டா, BMW போன்ற நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களுக்காகவென்று தயாரிக்கும் மேலதிக உதிரிப்பாகங்களை அந்த வாகனங்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்திப் போகும் விதமாக தயாரிக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருக்கும் பொழுது, மிகப்பெரும் அறிவாளியான எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தான் படைத்த மனிதர்களில் குறைந்தது 50% மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் படியான விதமாக தனது இறுதி வேதத்தை தயாரித்து அனுப்பிவைக்கும் அளவிற்கேனும் தகுதி, திறமை, ஆற்றல், அறிவு, அனுபவம் இல்லாமல் போய்விட்டதா? ஒரு சாதாரண டொயோட்டா கம்பனிக்கு, அப்பிள் நிறுவனத்திற்கு தனது தயாரிப்புக் குறித்து இருக்கும் அடிப்படை அறிவு கூட, எல்லாம் வல்ல இறைவனுக்கு தனது படைப்பான மனிதன் குறித்து இல்லாமல் போய்விட்டதா?

ஏற்கனவே அனுப்பப்பட்ட சபூர், தெளராத், இன்ஜீல் எல்லாம் மனிதக் கரங்கள் புகுந்து விளையாடியதால் மாசடைந்துவிட்டன, காலாவதியாகிவிட்டன என்று சொல்லி, தானே பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கித்தானே எல்லாம் வல்ல அல்லாஹ் இஸ்லாத்தை இறக்கி வைத்தார். மனிதக் கரங்கள் கொஞ்சமும் புகுந்திருக்காத பாதுகாக்கப்பட்ட அந்த தூய இஸ்லாம் எங்கே? உலகத்தில் அப்படி ஒன்று இருக்கின்றதா? முஸ்லிம்களே, இதனை சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள், ஆராய்ந்து பாருங்கள், சுயமாக சிந்தியுங்கள்.


ஹதீஸ்களில் முர்ஸல் (இட்டுக்கட்டப் பட்டவை), லஈப் (பலவீனமானவை) எல்லாம் புகுந்துகொண்டமை அல்லாஹ்வின் பாதுகாப்பு பொய் என்பதனை நிருபிப்பதாகிவிட்டதே? முஹம்மது மரணித்து சில நூற்றாண்டுகள் கடக்க முன்னாரே வித்தியாசமான இஸ்லாம்கள் (மத்ஹபுகள்) உருவாகிவிட்டனவே? ஆக, அல்லாஹ்வால் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்குமா? காலம் செல்லச் செல்ல இந்த வேறுபாடுகள், பிளவுகள் மென்மேலும் விரிவடைந்து செல்கின்றனவே தவிர, உண்மையான, அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட முழுமையான இஸ்லாம் என்று ஒன்று கடைசிவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை. குறைந்த பட்சம் முர்ஸலான ஹதீஸ்களை நீக்கி, ஹதீஸ்களை தூய்மைப்படுத்தக் கூட முடியாமல் போய்விட்டது என்றால், பாதுகாக்கப்பட்ட இஸ்லாம் என்று ஒன்றுமில்லை, அல்லாஹ் என்றும் ஒன்றுமில்லை, எல்லாமே வெறும் வெற்று வார்த்தைகளே தவிர, உண்மைகள் அல்ல என்பதை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை நோக்கினால், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற அவர்களுக்கே எது சரியான இஸ்லாம் என்று இதுவரையும் தெரியாத அளவிற்கு, இஸ்லாத்திற்கு உள்ளேயே ஆயிரக்கணக்கான பிரிவுகள், குழப்பங்கள், கலப்படங்கள் என்று அவை முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அனைவரும் செய்யவேண்டிய முக்கிய மதக் கடமையான தொழுகையைக் கூட எப்படி சரியாக நிறைவேற்றுவது என்பதிலேயே இஸ்லாத்தில் இன்றுவரை தெளிவான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு இல்லை. இவ்வளவு தூரம் தெளிவற்ற, குழப்பமான நிலையில் இருக்கும் ஒன்றை, "எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து வந்த, இறுதி நாள் வரைக்கும் பின்பற்ற வேண்டிய, அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட முழுமையான வழிகாட்டல்" என்று சொல்வது, அல்லாஹ்வை நம்புகின்றவர்களே அல்லாஹ்வை இழிவு செய்யும் செயல் அல்லவா?ஒரு சவால் : இந்தப் பதிவையும், மோதல் வீடியோவையும் பார்த்து ரோஷமும், கோபமும் கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும், மெளலவியும் செய்யவேண்டியது என்னவென்றால், "எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்த தெளிவான, முழுமையான இஸ்லாத்தைக்" கண்டுபிடித்து, அனைத்து முஸ்லிம்களையும் மட்டுமாவது அதனை முதலில் ஏற்றுக்கொள்ளச் செய்து, அதன் மூலம் இந்தப் பதிவை பொய்யாக்குவதுதான்.உண்மையாகவே அல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள், மெளலவிகள் யாராவது இருந்தால் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட, மனிதக் கரங்கள் கொஞ்சம் கூட புகுந்து விளையாடி இருக்காத தூய்மையான இஸ்லாத்தை கொண்டுவந்து காட்டும்படி சவால் விடுகின்றேன்.