குர்ஆனில் தெளிவான முரண்பாடு – சூரத்துல் துக்கான் (புகை)

சூரத்துன் நிஸாவின் 82 ஆவது வசனத்தை ஆரம்பமாக வைத்து இந்த சிறு ஆய்வை ஆரம்பிக்கின்றேன். اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا என்று சொல்கின்றது வசனம். அதன் தமிழ் மொழி பெயர்ப்பானது : “அவர்கள் இந்தக் குர்ஆனை கவனமாக ஆராய வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்."


இப்பொழுது விடயத்திற்கு வருவோம். குர்ஆன் அதனை கவனமாக ஆராயும்படி சொல்கின்றது, நல்ல விடயம், ஆனால் யாராவது முஸ்லிம்கள் நியாயமாக குர்ஆனை ஆராய்ந்து நேர்மையாக சிந்திக்கின்றார்களா என்று தெரியவில்லை, இருந்தாலும் நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போமே! அத்துடன் இந்த வசனம் இன்னொரு விடயத்தையும் நமக்குச் சொல்கின்றது, அது என்னவென்றால், அல்லாஹ் அல்லாதவர்களிடம் இருந்து குர்ஆன் வந்திருந்தால் அதில் முரண்பாடுகள் இருந்திருக்குமாம். ஆக, குர்ஆனை ஆராயும் பொழுது அதில் ஒரு முரண்பாடு காணப்பட்டாலும், குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்து வரவில்லை என்கின்ற முடிவிற்கு வருவதற்கு குர்ஆனே வழிகாட்டுதல் வழங்கிவிட்டது என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இப்பொழுது நாம் சூரத்துல் துக்கான் (புகை) இன் முதல் இரண்டு வசனங்களை பார்ப்போமே.


44:1 حٰمٓ ‌
44:2 وَالْكِتٰبِ الْمُبِيْنِ

மேற்படி வசனங்களில் முதல் வசனத்திற்கு யாருக்குமே அர்த்தம் இன்றுவரை தெரியாது. “ஹா மீம்” என்று இரண்டு எழுத்துக்களை மட்டும் கொண்டு அமைந்துள்ள முதல் வசனம் போன்ற அர்த்தமில்லாத எழுத்துக்கள் கொண்ட வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட என்று சொல்லிக்கொண்டு (அரபி மொழியில் மட்டும்) வந்த குர்ஆனில், 1400 வருடங்களாக யாருக்குமே புரியாத அரபி எழுத்துக்களை அல்லாஹ் ஏன் வைத்தார் என்பது தெளிவான பதிலெதுவுமில்லாத கேள்வி. (அவ்வப்பொழுது சமாளிப்பதற்காக சப்பைக் கட்டுக் கட்டி இருக்கின்றார்களே தவிர முறையான விளக்கம் எதனையும் முஹம்மது நபி கூட முன்வைத்தது கிடையாது.)


புகை அத்தியாத்திலும் (சூரத்துல் துக்கான்) பெரிய ஒரு புகை மூட்டம் காணப்படுகின்றதோ என்னவோ, முஸ்லிம்கள் அதனை இன்றுவரை சிந்தித்ததே கிடையாது என்றே எண்ணத் தோன்றுகின்றது. சிந்தித்து இருந்தால் எப்படி இறைவேதம் என்று இன்னுமும் நம்பிக்கொண்டு இருப்பார்கள்?


இரண்டாவது வசனமோ “வல்கிதாபில் முபீன்” என்று அமைந்துள்ளது. இதன் அர்த்தம் “தெளிவான இந்த புத்தகத்தின் / வேதத்தின் மீது சத்தியமாக” என்பதாகும். இங்கே இரண்டாவது வசனத்துடன் முதல் வசனம் தெளிவாகவே முரண்படுவதனைப் பற்றி முஸ்லிம்கள் இதுவரை சிந்தித்து இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஹா மீம் என்று அர்த்தமே தெரியாத, தெளிவே இல்லாத இரண்டு எழுத்துக்களை முன்னாலேயே வைத்துக்கொண்டு, இது தெளிவான வேதம் / புத்தகம் என்று அடுத்த வசனத்திலேயே சொல்வது எவ்வளவு பெரிய முரண்பாடு? எழுத்திற்கு பத்து நன்மைகள் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டு பல தடவைகள் இந்த சூராவை ஓதிய நீங்கள், இதனைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்து இருக்கின்றீர்களா? ஆக, ஆரம்பத்தில் சுட்டிக் காட்டிய சூரத்துல் நிஸாவின் 82 ஆவது வசனம் சொல்வதின் படி பார்த்தால் கூட குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்து வரவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகி விடுகின்றது.

குர்ஆன் என்பது, எல்லாம் வல்ல, யாவற்றையும் நன்கறிந்த, மிக்க ஞானமுடைய ஒரு இறைவனிடம் இருந்து வந்த ஒன்றல்ல, மாறாக முஹம்மத் (வரகா பின் நவ்பல், கதீஜா போன்ற ஒரு சிலரின் உதவியுடன்) உருவாக்கிக் கொண்ட ஒன்று என்பதை புரிந்துகொள்ள இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமே போதுமானவையாக இருந்தாலும், இதனை விடவும் அதிகமான ஆதாரங்கள் குர்ஆனில் இருக்கின்றன. சுயமாக ஆராய்ந்து, சிந்தித்துப் பார்த்தால் நீங்களே இவ்வாறன முரண்பாடுகளை, உண்மைக்குப் புறம்பான தகவல்களை, பொய்களை கண்டுகொள்ளலாம். என்னால் முடியுமானவற்றை நான் தொடர்ந்தும் முன்வைக்க முயற்சி செய்கின்றேன்.


ஒரு வேண்டுகோள் : Facebook இல் அதிக அளவில் புதிய நட்புக் கோரிக்கைகள் (Friend Requests) வந்த வண்ணமுள்ளன. ஏற்கனவே உள்ள நண்பர்களின் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதால் புதிய கோரிக்கைகளை ஏற்பதில் தயக்கம் இருக்கின்றது, ஆகவே பதிவுகளை வாசிக்க விரும்பும் நண்பர்கள் Follow பண்ணிக்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். Followers இற்கும் கூட பதிவுகளின் கீழ் கொமன்ட் பண்ணும் வசதி உள்ளது. நீங்கள் நண்பராக இணைந்துகொள்ள விசேட காரணம் இருப்பதாக கருதினால் மட்டும் உள்பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.