பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது, பதிவுகள் தொடரும்!

எனக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகவும், என்னையும், குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் விதமாகவும் பரப்பப்பட்டு வரும் வட்ஸ்அப் வொயிஸ் மெசேஜ் தொடர்பிலான முறைப்பாடு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே நேரம், 'இஸ்லாம் உண்மையான இறைவேதம்' என்று நம்பி தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கும் எனது சொந்த முஸ்லிம் சமூகத்தை விழிப்பூட்டும் பணி எவ்வித தடங்கல்களும் இன்றி தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ தஞ்சம் கேட்டுக்கொண்டு ஓடப்போவதில்லை, அப்படி ஓடும் எண்ணம் இருக்காததனாலும், இல்லாததனாலும் தான் எனது சொந்தப் பதிவுகளை பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழிலேயே எழுதுகின்றேன், ஆகவே அங்கொன்று, இங்கொன்று என்று இடைக்கிடை வந்து சிரிப்புக் காட்ட வேண்டாம். தஞ்சம் கேட்க நினைக்கின்றவனுக்கு ஆங்கிலத்தில் எழுதுவதுதான் இலகுவானது. எனது நோக்கம் தஞ்சம் அல்ல, எனது சொந்த சமூகத்தின் சிந்தனை மாற்றமே, ஏனென்றால் நானும் இஸ்லாத்தை உண்மை இறைவேதம் என்று நம்பி இந்த நாட்டில் ஏமாந்தவனே.

நான் ஐரோப்பாவிற்கு போக, அல்லது அமெரிக்காவிற்குப் போகத்தான் திட்டமிடுகின்றேன் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வெறுமனே இஸ்லாத்தை விமர்சிப்பதற்காகவோ, அல்லது கேள்வி கேட்பதற்காகவோ யாருக்கும் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ புகலிடம் கொடுப்பதில்லை, கொடுத்ததும் இல்லை. மாறாக ஒரு நபரின் உயிருக்கு, வாழ்விற்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது தெளிவானால் மட்டுமே அவர்கள் தஞ்சக் கோரிக்கையையே உரிய முறையில் அணுகி பரிசீலித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆகவே இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களாகிய நீங்கள் எனக்கு எதிராக வெறுப்பை, அச்சுறுத்தலை, வன்முறையை தூண்டாமல், பரப்பாமல் இருந்தாலே எனக்கு ஐரோப்பாவோ, அமெரிக்கவோ போக முடியாது, இங்கே இருந்து சும்மா கத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதானே? (அதாவது உங்களது புரிதலில் படி). ஆகவே நீங்கள் எனக்கு எதிராக வெறுப்பை, அச்சுறுத்தலை, வன்முறையை தூண்டாமல், பரப்பாமல் "நீ சிலோன்லயே கிடந்தது வெந்து செத்துப் போ" என்று விட்டுவிட்டு சும்மா இருக்கலாமே? எதற்காக என்னை அமெரிகக்விற்கோ, ஐரோப்பாவிற்கோ அனுப்பி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

என்னைக் கொல்ல வேண்டும் என்று ஒருவன் சிந்திக்கின்றான் என்றாலே, இஸ்லாம் எந்த அளவிற்கு முஸ்லிம்களை ஏமாற்றி இருக்கின்றது என்பது புலனாகும். நான் எழுதுவது எல்லாம் வல்ல இறைவனுக்கு முரண் என்றால், எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டு அவர் ஒன்றுமே செய்யாமல் இருக்க, யாரோ ஒரு அப்பாவி உசார் மடையன் தூண்டப்பட்டு எதையாவது தப்பாக செய்துவிட்டு ஜெயிலுக்குப் போய் தனது வாழ்வை நாசம் செய்துகொள்வதில் என்ன நியாயம் உள்ளது? இஸ்லாத்திற்காக என்று சொல்லி என்னை கொலை செய்ய, ஒழிக்க முயல்கின்றவர்களே, உங்களிடம் ஒன்றே ஒன்றைக் கேட்கின்றேன், அல்லாஹ் இருக்கின்றார், அவர் எல்லாம் வல்லவர் என்று நம்பிக்கொண்டுதானே என்னை கொலை செய்யவோ, ஒழிக்கவோ நீங்கள் தடுமாறுகின்றீர்கள், திட்டமிடுகின்றீர்கள்? சரி, "உங்கள் எல்லாம் வல்ல அல்லாஹவை வந்து என்னை கொலை செய்யச் சொல்லுங்கள்" என்று சவால் விடவில்லை, ஒரு மிகச் சிறிய வாய்ப்புத் தருகின்றேன். இலங்கையில் உள்ள என்னை எதிர்க்கும், என்னைச் சகித்துக்கொள்ள முடியாத முஸ்லிம்கள் அனைவருமே ஒன்றாக சேர்ந்து தஹஜ்ஜத், கியாமுல் லைல், உம்ராஹ், ஹஜ்ஜு, லுஹா என்று கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி எல்லாம் அல்லாஹ்விடம் துஆ கேட்டு, எனது இடது கை சின்ன விரலின் நகத்தை மட்டும் தெளிவான நீல நிறமாக மாற்றிக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம், நான் உடனடியாக இப்படி எழுதுவதை நிறுத்திவிட்டு இஸ்லாத்தின் புகழை எழுதுகின்றேன், நீங்கள் ஜெயிலுக்குப் போகாமலே நான் இஸ்லாத்தை விமர்சித்து எழுதவது நின்று போகும். டீலா? நோ டீலா? உங்களால் சவாலை ஏற்றுக்கொள்ள முடியுமா? (நிச்சயமாக உங்களால் முடியாது என்பது உங்களுக்கே தெரியும். இப்பொழுது சொல்லுங்கள், எந்த அல்லாஹ்விற்காக என்னை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகப் போகின்றீர்கள்? உங்கள் அனைவரின் துஆக்களுக்கும் மதிப்பளித்து ஒரு நகத்தைக் கூட நீலநிறமாக மாற்ற சக்தியற்ற அல்லாஹ்விற்காகவா?) குறிப்பு : நில நிற கியூட்டக்ஸ் பூசினால் நகம் நீலமாகிவிடும், உங்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் துஆவிற்கு மதிப்பளித்து அதையாவது செய்ய மாட்டாரா? செய்ய மாட்டார் என்றால் எதற்காக நீங்கள் அவருக்காக ஜெயிலுக்குப் போக வேண்டும்?


மாவனல்லை, புத்தளம் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களினதும், குடும்பத்துடன் ஒழிந்து இருப்பவர்களினதும் நிலைமையை பாருங்கள், அவர்களது குடும்பத்தினரது நிலைமையை பாருங்கள், இதுதானா எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களுக்கு வழிகாட்டும் அழகு? பாவம் அந்த அப்பாவிகள், அவர்களது குடும்பங்கள் படும் துன்பம், கவலை, இழப்புக்கள் அனைத்திற்கும் காரணம் யார்? இஸ்லாமிய நம்பிக்கைதானே காரணம்? இஸ்லாம் உண்மையான இறை வேதமாக இருந்தால் இப்படிக் கஸ்டப்படுவது சரி என்றாவது சொல்லலாம், ஆனால் இஸ்லாம் உண்மையான இறைவேதம் இல்லை என்பதற்கு பலநூறு ஆதாரங்கள் குர்ஆனில் மட்டுமே கொட்டிக் கிடக்கின்றன. சிந்திக்கின்ற மனிதர்களுக்கு அவற்றில் போதுமான அத்தாட்சிகள் இருக்கின்றன. அதைவிட ஹதீஸ்களில் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை : கொஞ்சம் நடுநிலையான சுய சிந்தனை மட்டுமே.


இஸ்லாத்தை நேர்மையாக விமர்சிக்க, நியாயமாக கேள்விக்கு உட்படுத்த காரணம் என்ன என்பதனைக் கூறும் விரிவான பதிவை விரைவில் பதிவேற்ற முயல்கின்றேன். கொஞ்சம் கூடச் சிந்திக்கத் தெரியாத மதவெறியர்கள் எனது பதிவுகளை படிப்பதை தவிர்த்துக் கொள்வது யாவருக்கும் நலம்.

என்னோடு தொடர்புகொண்ட, ஊக்கப்படுத்திய, ஆலோசனைகளை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும், தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கி வரும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.