ஹிஸ்புல்லாஹ் பொய் சொல்கின்றார் - முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹனீபா

முதலாவது வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மதிப்பிற்குரிய எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள், 'மயான காணியை அபகரித்து மார்கஸ் கட்டியதாகவும், கோயில் காணியை அபகரித்து பள்ளிவாசளுக்குக் கொடுத்ததாகவும்' தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கும் வீடியோ தொடர்பில் தானறிந்த உண்மைகளை சில ஆவணங்களுடன் பகிரங்கப்படுத்தி இருக்கின்றார்.

தனது அரசியல் ஆதாயத்திற்காக ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழர்கள் மீதான வெறுப்பை விதைத்து வாக்குகளை அறுவடை செய்து இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. ஹனீபா அவர்களின் தகவலின் படி, தான் செய்யாத செயல்களை தமிழர்களுக்கு எதிராகச் செய்ததாகச் சொல்லி முஸ்லிம்கள் மத்தியில் தமிழர்கள் மீதான வெறுப்பை விதைத்தால் தனக்கு முஸ்லிம் மக்கள் வாக்குத் தருவார்கள் என்று ஹிஸ்புல்லாஹ் நம்புகின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலைமையில் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அது மிகவுமே கவலையான விடயம். இதற்குக் கொஞ்சமும் சளைக்காத நிலைமை தமிழர் பகுதிகளிலும் காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இரு சமூகங்களும் மத, இன அடையாளங்களுக்கு அப்பால் மனிதர்களாக தம்மை முன்னிலைப்படுத்தி மனிதத்தை முதன்மைப்படுத்தி வாழ முற்படாத வரை ஒன்றல்ல, பல ஹிஸ்புல்லாக்கள், கருணாக்கள் உருவாகிக்கொண்டே இருப்பர்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம், கிழக்கில் முஸ்லிம், தமிழ் இனவெறியைத் தூண்டி எதிரெதிராக நின்று வாக்குவேட்டையாடுகின்றவர்களின் தெற்குத் தலைவர்கள் ஒரே அணியில் இருப்பார்கள் என்பதுதான் வேடிக்கையானது. மக்கள் தாம் எந்த அளவு முட்டாள்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
'முஸ்லிம்களுடைய பள்ளிவாசலை உடைத்து உங்களுக்கு கோயில் கட்டித் தருகின்றேன்' என்று வருகின்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கும், 'கோயிலை உடைத்து காணியைக் களவெடுத்து பள்ளிவாசல் கட்டித் தந்திருக்கின்றேன்' என்று வருகின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் அவ்வச் சமூகங்களை சேர்ந்த மக்கள், "தமிழ்ப்படம் 2" இல் வரும் "பாஸ் ஒரு கதை சொல்லவா" என்ற கேள்விக்கு சொல்லப்படும் பதிலை முகத்திற்கு நேரே சொல்லி, காலில் கிடப்பதைக் கழட்டிக் கட்டி அனுப்பிவைப்பர்களேயானால் கிழக்கில் மக்கள் வாழ்வு சிறக்கும், அமைதியும், மகிழ்ச்சியும் உருவாகும்.
-றிஷ்வின் இஸ்மத்

11.01.2019 21.00