சுவர்க்கம் சென்ற ஆர்மின் நவாபி (உண்மைச் சம்பவம்)


ஒரு சாதாரண இஸ்லாமியக் குடும்பத்தில் அந்த ஆண் குழந்தை பிறந்த குளிரான அந்த நாளை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள், தங்களை பாவத்தில் இருந்து மீட்க வந்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்து அவதரித்த நாளென்று மகிழ்ச்சியாகக்
கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். ஆம், ஆர்மின் நவாபி ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் கிறிஸ்மஸ் தினத்தில் தான் பிறந்தார்.


பாவங்களில் இருந்து மீட்க தேவகுமாரன் மீட்பராக பிறந்ததாக  நாளாக டிசம்பர் 25 ஆம் நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, அதே நாளில் கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணான நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் உண்மையான மீட்பர் ஒருவர் பிறந்தார்.


எல்லாக் குழந்தைகளைப் போலவே ஆர்மின் நவாபியும் உரிய வயதில் பாடசாலைக்கு சென்றான். ஏற்கனவே குரான் ஓதக் கற்றிருந்த ஆர்மின் நவாபி, ஒன்பது வயதில் இருந்து இஸ்லாத்தையும் ஏனைய பாடங்களுடன் ஒன்றாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். மற்றப் பாடங்களை விட இஸ்லாம் பாடத்தின் பால் அதிகம் கவரப் பட்ட அந்தச் சிறுவனின் உள்ளத்தில் இறை பக்தி வளர ஆரம்பித்தது. பெற்றோர், சக மாணவர்களை விடவும் ஆர்மின் நவாபியின் ஆர்வம் இஸ்லாத்தை நோக்கி நகர்ந்தது. அந்தச் சிறிய வயதிலேயே தொழுகைகளையும் தவறாமல் நிறைவேற்ற ஆரம்பித்துவிட்டான்.


அவன் வளர வளர அவனது ஈமானும் (இறை நம்பிக்கையும்) மிக வேகமாக வளர்ந்துகொண்டே சென்றது. மற்ற சிறுவர்கள் வம்புகளிலும், விளையாட்டுக்களிலும் அதிக கவனம் செலுத்த, ஆர்மின் நவாபியோ சுவர்க்கம் பற்றிய சிந்தனைகள், நரகம் பற்றிய அச்சங்கள், மறுமை பற்றிய நினைவுகள், அல்லாஹ்வின் திருப்தி என்று ஆர்வத்தையும், சிந்தனையையும் அல்லாஹ்வின் வழிகாட்டலை நோக்கி செலுத்தினான். இஸ்லாமிய வகுப்புகள் பலவற்றில் கலந்துகொண்டான். அவனது இஸ்லாமிய ஆசிரியர்களிடமிருந்து இஸ்லாத்தைப் பற்றி நிறைய விடயங்களை மிக ஆர்வத்தோடு கேட்டுக் கேட்டுப் படித்துக் கொள்ள ஆரம்பித்தான். இந்த உலக வாழ்க்கையின் நோக்கமே அல்லாஹ்வின் திருப்தியும், சுவர்க்கமும்தான் என்பதை மிக உறுதியாக உள்ளத்தில் பதித்துக் கொண்டான்.


வகுப்பிலே இருந்த மற்ற மாணவர்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் டாக்டராக வரவேண்டும், எஞ்சினியராக வரவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுதுகளில், ஆர்மின் நவாபியின் சிந்தனையோ இஸ்லாமியப் பாதையில் பயணித்தது. வாழ்க்கையில் தோற்று விடக் கூடாது, எந்தப் பாவமும் செய்யாமல், நன்மைகள் மட்டுமே செய்து சுவர்க்கத்தை அடைய வேண்டும், சுவர்க்கம்தான் ஒரே இலக்கு உண்பதை உள்ளத்தில் உறுதியாக்கிக் கொண்டான்.


ஒன்பது வயதில் ஆரம்பித்த இஸ்லாமிய ஆர்வம், அவனுக்கு 12 வயதாக ஆன பொழுது உச்சத்தை அடைந்து இருந்தது. முஹம்மது நபிக்கு நாற்பது வயதில் வஹி (இறைதூது) வந்தது என்றுதான் இஸ்லாமிய வரலாறு சொல்கின்றது என்றால், அந்த முஸ்லிம் சிறுவனுக்கோ 12 வயதில் ஞானம் உதயமானது, இலகுவாக சுவர்க்கம் செல்ல வஹி கூட காட்டித்தராத இரகசிய வழி ஒன்று 12 வயதேயான சிறுவனுக்கு முன்னால் விரிந்தது.



ஒவ்வொரு மனிதனின் இடது, வலது தோள்களில் அமர்ந்துகொண்டு மனிதன் செய்யும் தீமை, நன்மை ஆகியவற்றை எழுதுவதற்கு அதீத், ரகீப் என்று இரண்டு வானவர்கள் (மலக்குகள்) இருப்பதையும், ஒரு மனிதன் பருவமடைந்த பின்னரே தீமைகள் எழுதப்படும் என்பதையும், சிறுவர்களுக்கு தீமைகள் எழுதப்படாது என்பதையும் அவன் கற்றுக் கொண்டான். அத்துடன் பருவமடையுமுன்னார் சிறுவர்களாக மரணிப்பவர்கள் விசாரணை இன்றி சுவர்க்கம் சென்று விடுவார்கள் என்பதையும் அவன் இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து அவனது ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொண்டிருந்தான்.


அவனது சுற்றுவட்டத்தில் சிறுவர்களாகவும், பிறந்த உடனேயும் மரணித்தவர்களை நினைத்தான், தீமையே எழுதப்படாமல் சுவர்க்கம் சென்றுவிட்ட அவர்கள் மீது அவனுக்கு சற்றுப் பொறாமையும் வந்தது.



நானும் பருவமடைவதற்கு முன்னர், சிறுவனாக இருக்கும் நிலையிலேயே மரணித்து விட்டால், பிரச்சினை இல்லாமல் அல்லாஹ் சொல்லும் மகத்தான சுவர்க்கம் சென்று விடலாமேஎன்று ஆதங்கப் பட்டான். அவன் என்னதான் ஆசைப்பட்டாலும் மரணம் அவனை நோக்கி வரவில்லை, மரணம் வருவதற்கு முன்னர் பருவ வயது வந்துவிடுமோ என்று அஞ்சினான். தன்னைத் தேடி வராத மரணத்தை, தானே வரவழைத்துக் கொள்வதற்கு என்ன வழி என்று யோசித்தான்.



தன்னைத் தேடி வராத மலக்குல் மவ்த்தை (மலக்குல் மவ்த் மனித உயிர்களை கைப்பற்றும் வானவர்) தானே வலிந்து வரவழைத்துக் கொள்வதற்கான ஒரே வழி தற்கொலைமட்டுமே என்பதை உணர்ந்தான்.........ஆனாலும் தற்கொலை அல்லாஹ் மன்னிக்காத பெரும் பாவமாச்சே.....


தற்கொலை இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் என்பதைத் தெரிந்திருந்தும், தனது பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு மாணவன் ஏற்கனவே மரணித்திருந்ததை அறிந்திருந்த ஆர்மின் நவாபி, கலிமாவை முணுமுணுத்தவனாக மூன்றாம் மாடியின் ஜன்னல் வழியாக துணிந்து கீழே பாய்ந்தான், சுவர்க்கம் செல்வதற்காக. "சிறுவன் தற்கொலை செய்துகொண்டானா? அது பொரும் பாவமாச்சே!" என்று ஆச்சரியப் படாதீர்கள், ஏனெறால் அவனுக்குத் தெரியும், தான் பருவம் அடையாத சிறுவன் என்பதால், தற்கொலை செய்துகொள்ளும் பாவத்தை இடது தோளில் அமர்ந்திருக்கும் அதீத் எனும் வானவரால் எழுத முடியாது எனும் இஸ்லாமிய அடிப்படை உண்மை. (செக்மேட் அல்லாஹ்! )


பருவமடையாதவர்கள் மீது பாவங்களை எழுத முடியாது என்பதால், பருவமடையாதவர்கள் செய்யும் தற்கொலையும் பாவம் என்று எழுதப் பட முடியாது, ஆகவே சுவர்க்கம் தான் முடிவுஎன்பதை கண்டுபிடித்த மூஃமின் ஆர்மின் நவாபியின் உடல் மூன்றாம் மாடியில் இருந்து பாரிய பாரிய சத்தத்துடன் கீழே விழுந்தது.


இஸ்லாமிய நம்பிக்கைப் படி அவன் எதிர்பார்த்த தோற்றத்தில் மலக்குல் மவ்த் வரவில்லை, பல மணிநேரங்கள் கழித்து கண்விழித்துப் பார்த்த பொழுது அருகில் நின்று அழுதுகொண்டிருந்த தாயை காண்கின்றான், வாழ்க்கையில் முதல் தடவை தந்தை அழுவதைக் காண்கின்றான். அடுத்த எழு மாதங்களை வைத்தியசாலைக் கட்டிலிலும், சக்கர நாற்காலியிலும் கழிக்கின்றான்.


சிறுவயதிலேயே சுவர்க்கம் செல்ல ஆசைப்பட்ட ஆர்மின் நவாபி இன்றைக்கு எங்கே? என்ன செய்துகொண்டு இருக்கின்றார் என்று அறியும் ஆர்வம் உங்களுக்கு இல்லாமலா போகும்?


மனிதரை பாவத்தில் இருந்து மீட்க தேவகுமாரன் இயேசு கிறிஸ்து அவதரித்ததாக சொல்லப்படும் அதே நாளில் பிறந்த ஆர்மின் நவாபி, மனிதர்களை மதத்தில் இருந்தும், மதவெறியில் இருந்தும் மீட்டெடுக்கும் மீட்பராக, உலகப் புகழ் பெற்ற Atheist Republic ஸ்தாபகராக, மதவாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இன்றைக்குத் திகழ்கின்றார். மதவெறியால் நரகமாகிக் கொண்டிருக்கும் உலகத்தை சுவர்க்கமாக்க பாடுபடுகின்றார்.


ஆர்மின் நவாபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Advance birthday greetings to Armin Nawabi


- றிஷ்வின் இஸ்மத்