பத்ரு : முஹம்மது நபியின் முதல் கொள்ளை - இன்று வரை தொடரும் பழிவாங்கல்!

(19.04.2022 அன்று மேம்படுத்தப் பட்ட பதிவு)

இற்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர், (ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு) ரமழான் பிறை 17 இல் பத்ரு என்னும் இடத்தில் நடைபெற்ற ஒரு போரானது இஸ்லாத்தை அழிக்க வந்த எதிரிகளிடம் இருந்து இஸ்லாத்தை பாதுகாக்க மேற்கொள்ளப் பட்ட மிக முக்கிய புனிதப் போர் என்று சித்தரிக்கப் பட்டுள்ளதுடன், அதில் முஸ்லிம்கள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் புனிதர்கள் என்றும், அவர்கள் உயிர்த் தியாகம் செய்யாமல் இருந்திருந்தால் இஸ்லாமே முற்றாக அழிந்து போயிருக்கும் என்றும், அந்த யுத்தத்தில் பங்குபற்றிய அனைவரும் வாழ்நாள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள் என்றும் வகை தொகையின்றி போற்றிப் புகழப் படுவதை இஸ்லாமிய புகழ் பாடும் நூல்களிலும், இஸ்லாமிய அறிஞர்களின், முல்லாக்களின் உரைகளிலும் தாராளமாக அவதானிக்க முடியும். உவத்தல் காய்த்தல் இன்றி பத்ருப் போர் குறித்த தகவல்களை இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்து நோக்கினால், அபூசுஃப்யான் என்னும் மக்கா நகரத்து பெரும் வியாபாரியின் வியாபாரப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக முஹம்மது நபி போட்ட திட்டமே இறுதியில் பத்ருப் போராக மாற்றமடைந்து இன்னொரு கொள்ளையில் முடிவடைந்தது என்கின்ற உண்மையை இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தே இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
இதோ, கொள்ளையடிப்பதற்கான திட்டத்தின் முதல் படியை இந்த ஹதீஸ் சொல்கின்றது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் அந்த வீட்டில் இருக்கவில்லை.
(சஹீஹுல் முஸ்லிம் : 3858)

ஆக, வணிகக் குழுவின் உளவு பார்த்து, வணிகப் பொருட்களை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி இருக்கின்றார் முஹம்மது நபி.
முஹம்மது நபி மக்கா நகரத்து குறைசிகளின் வியாபாரிகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்ட, முயற்சி செய்த முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இதற்கு முன்னரே ஒரு சில ஒத்திகைகளைப் பார்த்து இருந்தார். கிபி 624 மார்ச்-ல் (ஹிஜ்ரி 2 ரமலான் 17) நிகழ்ந்த பத்ரு கொள்ளைக்கு முன்னரே குறைஷியர்களின் மீது சில வழிப்பறிக் கொள்ளை முயற்சிகளை அல்லது திடீர்த் தாக்குதல்களை முஹம்மது நபி திட்டமிட்டு அல்லது நடத்தி இருந்தார்.

1. ஸய்ஃபுல் பஹ்ர் - கிபி 623 மார்ச்
2. ராபிக் - கிபி 623 ஏப்ரல்
3. கர்ரார் - கிபி 623 மே
4. அப்வா/வத்தான் - கிபி 623 ஆகஸ்ட்
5. பூவாத் - கிபி 623 அக்டோபர்
6. ஸஃப்வான் - கிபி 623 செப்டம்பர்
7. துல் உஷைரா - கிபி 623 நவம்பர்
8. பத்ரு-1 - கிபி 623 டிசம்பர்
9. நக்லா - கிபி 624 ஜனவரி
இதில் நக்லாவில் மட்டுமே முஹம்மது நபியின் கூட்டத்தினருக்கு வெற்றி கிடைத்தது. நக்லா என்ற இடத்தில் அப்துல்லாஹ் இப்ன் முகீரா, நவ்ஃபல் இப்ன் அப்துல்லாஹ், அம்ர் இப்ன் ஹழ்ரமி மற்றும் அவர்களின் அடிமைகளுடன் வந்து கொண்டிருந்த வியாபாரக் குழுவை தாக்கி வழிப்பறி செய்து, கொலையையும், கொள்ளையையும் நிகழ்த்தினர். பத்ருவிற்கு முன்பாகவே கொள்ளையடித்தல் எனும் புனிதமிக்க ஹலால் தொழிலை முஹம்மது நபி ஆரம்பித்து இருந்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்படி கொள்ளைகளில் இருந்து பத்ரு வேறுபடுவதற்கான காரணம், முன்னைய கொள்ளைகள், தாக்குதல்கள் சிறிய அளவில் மேற்கொள்ளப் பட்டவை, சிறிய அளவிலான பொருட்களைக் கொண்ட மக்கத்து வியாபாரிகள் பாரிய எதிர்த் தாக்குதல் எதிலும் ஈடுபடாமல் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடித் தப்பிக் கொண்டார்கள். ஆனால் மக்கத்து வியாபாரிகளின் பாதுகாப்புக் கருதி ஒரு படை போராட வந்த முதல் சந்தர்ப்பமே பத்ருப் போர் ஆகும்.

தம்மை கொள்ளையடிக்க முஹம்மது நபி கொள்ளைக் கூட்டத்துடன் வருகின்றார் என்பதை தகவலாளிகள் மூலம் பெரு வணிகர் அபூசுஃப்யான் அறிந்து கொள்கின்றார். முஹம்மது நபியின் கொள்ளைத் திட்டம் குறித்து எச்சரிக்கையடைந்த அபூசுஃப்யான் வியாபாரப் பொருட்களுக்கு நேரவிருக்கும் அபாயத்தைக் குறித்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவிக்க ஒருவரை மக்கவிற்கு அனுப்பியதுடன், வியாபரக் குழு செல்லும் பாதையை மாற்றியமைத்து, முஹம்மது நபியிடம் சிக்காமல், தங்களது பொருட்களை பாதுகாப்பாக கொண்டு சென்று விடுகிறார்.

மக்காவிற்கு தகவல் கிடைத்ததும் அபூ சுஃப்யான் எனும் பெரும் வியாபாரியின் வணிகப் பொருட்களை பாதுகாக்க 1300 பேர் அடங்கிய ஒரு படை புறப்பட்டு வருகின்றது. மக்காவிலிருந்து 1300 பேர்களுடன் வரும் குறைஷியப் படை, அபூசுஃப்யானின் வியாபாரப் பொருட்கள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிட்டன, அவற்றிற்கு ஆபத்தில்லை என்பதை அறிந்து கொள்கின்றது, ஆகவே படையிலிருந்த 300 பேர், அக்னஸ் இப்ன் ஷரீக் தலைமையில் மக்காவிற்குத் திரும்பிச் சென்று விடுகின்றனர். அபூசுஃப்யானின் வியாபாரப் பொருட்கள் பாதுகாப்பாகத் தப்பி விட்டாலும், தமது வியாபாரப் பொருட்களுக்கான நீண்ட கால அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அபூஹகம் அவர்களின் தலைமையில் மீதி 1000 பேர் தொடர்ந்து பயணித்து கடைசியில் முஹம்மது நபி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தை பத்ரு எனும் இடத்தில் எதிர்கொள்கின்றார்கள்.

முஹம்மது நபி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்துப் போராட தலைமை தாங்கி வந்த அபூஹகம் அவர்களின் இயற்பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். மக்கள் அவரை அபூஹகம் (அறிவின் தந்தை) என்று அழைத்து வந்தனர், எனினும் முஹம்மது நபி அவரை அபூஜஹ்ல் (மடமையின் தந்தை) என்று இழிவு படுத்தி அழைத்தார்.

அபூசுஃப்யானின் வியாபாரக் கூட்டத்தை கொள்ளை அடிக்கப் போய், அதனை கொள்ளை அடிக்க முடியாமல், அபூஹகம் தலைமையிலான படையுடன் யுத்தம் செய்ய வேண்டி ஏற்பட்ட ஏமாற்றத்தை குரானின் இந்த வசனம் தெளிவாக சொல்கின்றது:
"எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். எனினும் அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.
(குர்ஆன் 8:07)

கொள்ளைக்குப் போனதையும், அது நடக்காத ஏமாற்றத்தை கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று சமாளிப்பதையும் “எனினும் அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.” என்ற வசனத்தில் தெளிவாகவே கவனிக்கலாம். (வசனத்தில்தான் எத்தனை குரூரம், வன்மம்.......)

மேலும் மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட் எனப்படும் முஹம்மது நபியும் அவரது சஹாபாக்களும் போருக்காக செல்லவில்லை, கொள்ளையடிக்கத்தான் சென்றார்கள் என்பதை சுட்டிக் கட்டும் இன்னொரு தகவல்தான், அவர்களிடம் இருந்த குதிரைகள், ஒட்டகங்கள் பற்றிய எண்ணிக்கை ஆகும், ஆம் 02 குதிரைகள் மற்றும் 70 ஒட்டகைகள் தான் அவர்களிடம் இருந்தன. போருக்குப் போகின்றவர்கள் அதிக குதிரைகளைத்தான் கொண்டு செல்வார்கள், ஆனால் இவர்கள் கொள்ளையடிக்கப் போனதால், கொள்ளையடித்த பொருட்களை சுமந்து வர ஒட்டகைகள் தேவை என்பதால் குதிரைகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவில்லை, மாறாக ஒட்டகைகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தி இருந்திருக்கின்றார்கள் என்பதை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

மேலும் "போரில் கிடைத்த வெற்றிப்பொருள் (அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்"(குர்ஆன் 8:01) என்று சொல்லும் ஆரம்ப வசனமும், “எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும்.... உரியனவாம் (குர்ஆன் 8:41) என்று டீலை முடிக்கும் பின்னைய வசனமும் முஹம்மது நபியின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிக்காட்டி விட்டன. கொள்ளைதான் முஹம்மது நபியின் நோக்கமாக இருந்தது என்பதற்கு இதை விடவும் சிறப்பான ஆதாரங்கள் தேவையில்லை. மற்றவர்களுக்கு நான்கு பெண்களை மட்டும் மணந்துகொள்ள சொல்லிவிட்டு, தான் 10 பெண்களையும், ஒரு சிறுமியையும் மனைவிகளாக வைத்து இருந்தது போன்று, கொள்ளையிலும் அவருக்கு லயன்ஸ் ஷெயர் தேவைப்பட்டு இருக்கின்றது. அடிக்கின்ற கொள்ளையில் 20% முஹம்மது நபிக்கு, மிகுதி 80% கொள்ளைக் கூட்டத்தின் நூற்றுக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக்கான) அங்கத்தவர்கள் மத்தியில் பகிரப்படும். ஆகவே முஹம்மது அவர்களை மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட் என்று அழைப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.

கொள்ளையடித்த பொருட்களை மொத்தமாக ஆட்டையைப் போட முஹம்மது முதலில் திட்டம் போடுகின்றார், அந்தத் திட்டத்தை கீழுள்ள குர்ஆன் வசனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

"போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
(குர்ஆன் 8:01 )

எனினும் கொள்ளைக் கூட்டத்தினர் அதற்கு உடன்பட மறுக்கின்றனர், கருத்து முரண்பாடு ஏற்படுகின்றது. கடைசியாக இதே 8 ஆவது சூராவின் (அத்தியாயத்தின்) 41 ஆவது வசனத்தின் மூலம் 20% என்று டீலை முடிக்கின்றார் கொள்ளைக் கூட்டத் தலைவர் முஹம்மது நபி அவர்கள்.

சஹாபாக்கள் என்று அழைக்கப்பட்ட முஹம்மது நபியின் கொள்ளைக் கூட்ட சகாக்கள் மிகவும் வெறியோடு சண்டையிட்டதால் தான் வெற்றி கிடைத்தது என்றாலும், கொள்ளையடித்த பொருட்களில் தான் அதிக பங்கு (அல்லது முழுவதையும்) கேட்பதை நியாயப் படுத்தி மற்றவர்களை ஏமாற்ற முஹம்மது ஒரு தந்திரம் செய்கின்றார், அதற்காக தானே கற்பனை செய்து உருவாக்கிக் கொண்ட அல்லாஹ்வை துணைக்கு அழைக்கின்றார், அதனை பின்வரும் குர்ஆன் வசனங்களில் தெளிவாகக் காணலாம்.

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (குர்ஆன் 8:9)
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
(குர்ஆன் 8:12)
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(குர்ஆன் 8:17)
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
(குர்ஆன் 8:44)

போரில் வெற்றி கிடைத்ததற்குக் காரணம் வெறியோடு போராடிய சஹாபாக்கள் அல்ல, மாறாக அல்லாஹ்வும் மலக்குகளும் தான் வெற்றிக்கான உண்மையான காரணம் என்று தனது கொள்ளைக் கூட்டத்தினரை நம்ப வைக்க மேலே உள்ள குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்தி முயற்சி செய்துள்ளார் முஹம்மது நபி. இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் அவர்களுக்கு எந்த உரிமையும் வந்துவிடாமல் தடுத்து மொத்தமாக தானே ஆட்டையைப் போடப் பார்த்திருக்கின்றார், அது சரிவராமல் போகவே கடைசியாக 20% பங்கு தனக்கு என்று என்று டீலை முடித்து இருக்கின்றார்.

தலைவரான முஹம்மது நபியை அவரது கொள்ளைக் கூட்ட சகாக்கள், ஒரு கொள்ளைக்காரராக மட்டுமின்றி ஒரு திருடராகவும் பார்த்து இருக்கின்றார்கள் என்பதை இதே பத்ருக் களத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் வெளிப்படுத்துகின்றது.

பத்ரிலே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் இருந்த ஒரு சிவப்பு வெல்வெட் அங்கி ( قَطِيفَةٌ حَمْرَاءُ ) கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பங்கு பிரிப்பதற்கு முன்னரேயே அங்கிருந்து காணாமல் போய்விடுகின்றது, அப்பொழுது போரிலே கலந்து கொள்ள வந்திருந்த முஹம்மதின் சகாக்களான 'சஹாப்பாக்கள்' அந்த சிவப்பு அங்கியை முஹம்மதுதான் திருடி இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

(முஹம்மதின் சகாவான) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்தார்: மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று;" என்ற குர்ஆன் வசனம் சிவப்பு நிற வெல்வெட் ஆடை பற்றி வெளிப்பட்டது. பத்ர் போரின் நாளில் அந்த ஆடை காணாமல் போன போது சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எடுத்திருக்கலாம்" என்று பேசிக்கொண்டார்கள். எனவே "மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று;" என்று வசனத்தின் இறுதி வரை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
(ஸுனன் அபூதாவூத் : 3971)

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில், முஹம்மது நபிக்கு 20% என்ற டீல் எட்டப் படுவதற்கு முன்னரே சிவப்பு வெல்வெட் அங்கி காணாமல் போய் விடுகின்றது. கொள்ளையடிக்கப் போன முஹம்மது நபி மீது அவரது சகாக்களே சுமத்திய குற்றச்சாட்டை மறுக்க முஹம்மது நபி தனது அல்லாஹ்வைப் பயன்படுத்தி குர்ஆனின் 3:161 என்ற வசனத்தை உருவாக்க வேண்டி ஆகிவிட்டது.

பத்ரு என்பது முஹம்மது நபி கொள்ளையடித்தார் என்பதை மட்டுமின்றி, அவர் மீது திருட்டுக் குற்றமும் இருந்தது என்பதையும் சேர்த்து உறுதி செய்கின்ற இரத்தம் தோய்ந்த வரலாறாகும். பத்ரு அன்றுடன் நிறைவு பெற்றுவிடவில்லை, இன்றும் தொடர்கின்றது.

கொள்ளையடிப்பதற்காக பத்ரில் விதைக்கப்பட்ட விச விதை வளர்ந்து இன்று வரை ஷியா – சுன்னி பிரச்சினையாக உலகம் முழுவதும் இரத்த அறுவடை செய்யப்பட காரணமாக இருந்து கொண்டு இருக்கின்றது. தனது கணவனின் வியாபாரப் பொருட்களை கொள்ளையடிக்க முஹம்மது திட்டமிட்டதால் கோபமடைந்திருந்த அபூசுஃப்யானின் மனைவி ஹிந்தா, பத்ருப் போரில் நிகழ்ந்த தங்கள் தரப்புக் கொலைகள் சிவற்றுக்காகவும் சேர்த்து உரிய சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து, அடுத்து நிகழ்ந்த உஹதுப் போரில் முஹம்மதின் சிறிய தந்தையும், பத்ரில் பல கொலைகள் செய்தவருமான ஹம்ஸா என்பவரை ஆள் வைத்துக் கொலை செய்து, அவரது நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து சப்பித் துப்பி இருக்கின்றார் என்ற சம்பவம் அனைத்து முஸ்லிம்களும் அறிந்ததே. இந்தப் பகை வரலாற்றின் தொடர்ச்சி, இஸ்லாத்தில் புற்றுநோய் போன்று ஊடுருவி உள்ளது.

மக்கா நகரத்து வியாபாரி அபூசுஃப்யானின் மகன் முஆவியா, முஹம்மது நபியின் மருமகன் அலியின் ஆட்சியை ஏற்காமல் புரட்சி செய்து அவருக்கு எதிராக பாரிய படை திரட்டி யுத்தம் செய்தது மட்டுமின்றி தனியாக ஆட்சியும் பிரகடனம் செய்து இருந்தார். அபூசுஃப்யானின் பேரன் யஸீத் இப்னு முஆவியா இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளனாக பதவிக்கு வந்த பின்னர், தனது பாட்டனாரைக் கொள்ளையடிக்க முயற்சித்தவரான முஹம்மது நபியின் அன்புப் பேரன் ஹுசைனையும் அவரது குடும்பத்தார்களையும் ஈராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் கூண்டோடு கைலாசம் அனுப்பியது யாவரும் அறிந்ததே.

வியாபாரி அபூசுஃப்யானின் தரப்பிற்கும், கொள்ளைக் கூட்டத் தலைவர் முஹம்மது நபியின் தரப்பிற்கும் இடையிலான பகையின் தொடர்ச்சி அத்துடன் முடிந்து விடவில்லை, பாகிஸ்தானில் வெள்ளிக் கிழமைகளில் வெடிக்கும் பள்ளிவாசல் குண்டுகளுக்குக் காரணமான ஷியா – சுன்னிப் பிரச்சினைக்கான மூலவேர் பத்ரு கொள்ளையே ஆகும். சவூதி - ஈரான் அரசியல் பகை கூட இந்தக் கொள்ளை முயற்சியின் விளைவின் தொடர்ச்சியே. இன்று யெமன் இல் சவூதி அரேபியா தாக்குதல் நடத்துவதும், ஹூத்திகள் இடைக்கிடை அரபு நாடுகளில் தாக்குதல் நடத்துவதும் கூட 1400 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கொள்ளையின் தொடர்ச்சியே. 1400 வருடங்களுக்கு முன்னர் முஹம்மது நபி கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆரம்பித்து வைத்த வன்முறையும், பகைமையும் அன்று முதல் இன்று வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் கற்கும் ஆண்கள் பாடசாலை ஒன்றில் குண்டு வெடித்து, 6 பேர் பலியாகியுள்ள செய்தி இதனை எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது கிடைத்துள்ளது.

மோசமான விளைவுகளைக் கொண்ட ஒரு கேவலமான கொள்ளை நிகழ்வை நினைவு கூர்ந்து, இன்றைக்கும் முஸ்லிம்கள் பெருமைப்படுகின்றார்கள் என்றால், நாகரீகமடைந்த அறிவியல் சமூகம் வெட்கப்பட வேண்டும். சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் அரேபிய பாலைவனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளை முயற்சியை, அதன் விளைவாக ஏற்பட்ட சண்டையை சுய சிந்தனை இன்றி இன்றைக்கும் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையும் மடமையில் இருந்து விடுபட்டு, நியாயமாக சிந்திக்கும் நேர்மையான மனிதர்களாக வாழ முஸ்லிம்கள் முயல வேண்டும். பத்ருக் கொள்ளையை இன்றைக்கும் நினைவு கூருவது அறிவுள்ள மனிதனுக்கு அவமானம் ஆகும். பத்ரு போன்ற கொள்ளை முயற்சிகளின் விளைவுகளை தொடர்ந்தும் போற்றிப் புகழும் பொழுது, இன்றைய முஸ்லிம்களின் சிந்தனைகள் கூட விகாரமாக மாறிவிடுகின்றன, அதனை இந்தப் பதிவிற்கான எதிர் வினைகளில் சில பொழுது கண்டு கொள்ள முடியுமாக இருக்கலாம்.

( பத்ருப் போரானது கொள்ளை அடிக்கப் போன இடத்தில் நிகழவில்லை, எதோ கொலைக்குப் பழிவாங்க நிகழ்ந்தது என்றும், இஸ்லாத்தைப் பாதுகாக்க நிகழ்ந்தது என்றும் சிலர் ஆதாரம் இல்லாமல் புதுப் புதுக் கதைகளைக் கற்பனை செய்து எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த பதிவு குரான், ஹதீஸ் ஆகிய இஸ்லாமிய மூலாதாரங்கள் மற்றும் இன்று வரை நிகழும் ஷியா - சுன்னி வன்முறை வரலாறுகளை ஆதாரமாக முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய மூலாதாரங்களில் இருந்தே தெளிவான ஆதாரங்களும் போதுமான அளவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. பத்ருப் போர் என்பது கொள்ளைதான் என்பதை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்கள் பதிவின் பருமன் கருதி தவிர்க்கப்பட்டுள்ளன.)


-றிஷ்வின் இஸ்மத்