சபாநாயகர் கரு ஜெயசூரிய கிளப்பியுள்ள பயங்கரமான இனவாதப் பீதி


அதிகமாக சிங்களவர்கள் வாழும் அரநாயக்க பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அமெரிக்க நிபுணர் ஒருவர் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின் படி உலகில் அழிந்துவரும் இனங்களில் சிங்கள இனம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டு, அழிவிலிருந்து சிங்கள இனத்தை பாதுகாக்க மகாநாயக்க தேரர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். இது இனவெறியை கிளப்பும் திட்டமிட்ட செயல் என்பது தெளிவாகவே புரிகின்றது.




குறித்த அமெரிக்க நிபுணரின் அறிக்கை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒன்று என்றால், அந்த அறிக்கை வெளிவந்த பின்னர்தான் இலங்கையில் மோசமான இனவாத தாக்குதல்கள் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக மனிதாபிமானம் மற்றும் யுத்த கால மனிதாபிமான நியமங்களுக்குக் கூட மதிப்பளிக்காத மோசமான மூன்று தசாப்தகால யுத்தம் இலங்கைத் தமிழர்கள் அழிவின் விளிம்பிற்குச் செல்லக்கூடிய அளவுக்கு மோசமாக இடம்பெற்றது. தற்பொழுது வரை அனமியில் சிறை சென்ற ஞானசார தேரர் உட்பட பெளத்த துறவிகள் மற்றும் சிங்கள பெளத்த இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களை பல்வேறு விதமாக மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய மோசமான அனுபவங்களையும், நிகழ்வுகளையும் நாடு சந்தித்த, இன்னுமும் சந்தித்துக்கொன்டிருக்கின்ற பின்னணியில், நான்கு தசாப்தங்களுக்கு முந்தைய ஒரு அறிக்கையை சபாநாயகர் மேற்கோள் காட்டிப் பேசி, பெளத்த மகாநாயக்க தேரர்களை முன்னிறுத்தி சிங்களவர்களை தூண்டிவிட முயற்சித்துள்ள செயலானது ஒரு கேவலமான செயல் ஆகும்.




குறித்த அமெரிக்க நிபுணர் யார், அவரது ஆய்வு எத்தகைய அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டது, அந்த ஆய்வின் உண்மைத்தன்மை எத்தகையது போன்ற தகவல்களை பெற முடியாவிட்டாலும், நான்கு தசாப்தங்களுக்கு முந்தைய ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி, மூன்று தசாப்த கால மோசமான யுத்தத்தை எதிர்கொண்ட, பாரிய அழிவுகளை சந்தித்த, இன்னுமும் இனமுறுகள்கள் மற்றும் இனங்களுக்கிடையேயான தப்பபிப்பிராயங்கள் பரவிக் கிடக்கின்ற ஒரு நாட்டில் அதன் சபாநாயகர் உரையாற்றி, தனது உரையின் மூலம் சிங்கள இனத்தின் உணர்ச்சி மிக்க பகுதியான மகாநாயக்க தேரர்களை முன்னிறுத்தி அந்த இனத்தை தூண்டி விட முயற்சி செய்திருப்பதானது சாதரண ஒன்றாக நோக்கப்பட முடியாதது.




மனிதர்கள் அனைவரும் ஓரினமே என்கின்ற உன்னதமான மனித நேய அடிப்படையில் இலங்கையர்களை சிந்திக்கப் பழக்கமல், குறுகிய இனவாத அடையாளங்களை முன்னுறுத்தி பெரும்பான்மை இனத்தின் மத்தியில் வீணான பீதியை கிளப்பும் விதமாக அமைந்துள்ள சபாநாயகரின் உரை, இலங்கையில் எதிர்காலத்திலும் மோசமான நிகழ்வுகள் இடம்பெறுவேண்டும் என்பதை உறுதிசெய்யும் ஒன்றாகவே உள்ளது. தாம் அழிவில் இருக்கின்றோம் என்கின்ற வீணான பீதிக்குள்ளாகும் சிங்ககவர்கள், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வெறுப்பை மேலும் வளர்த்து அதனை வன்முறையாக மாற்றுவதனையே தமது பீதியை குறைத்துக்கொள்வதற்கான வடிகாலாக அமைத்துக்கொள்வார்கள் என்பதையே கடந்த கால வரலாறுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.