மாணவனைக் கொலை செய்த மதமாற்றமும், விருத்த சேதன அச்சமும்!

 


மதமாற்றம் மற்றும் விருத்தசேதனத்திற்கு (சுன்னத்) நிர்ப்பந்திக்கப்பட்ட 13 வயது மாணவன் இரத்தினபுரியில் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இது தொடர்பில் பலரையும் சுயமாகத் தொடர்புகொண்டு திரட்டப்பட்ட தொகுப்பே இது.


தெனியாயவில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்துவந்த அந்தத் தாயும் பிள்ளைகளும் கணவன் கைவிட்டுச் சென்றதால் கஸ்டமான நிலையில் இருந்துள்ளனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாய் றக்குவானையை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளார். திருமணம் மற்றும் மதமாற்றத்தைத் தொடர்ந்து தாயார் தனது பிள்ளைகளுடன் ரக்வானைக்கு குடிபெயர்ந்துள்ளார். தாயரை திருமணம் செய்த குறித்த நபர் ரக்வானை உக்வத்தை பகுதியில் உள்ள பள்ளிவாசலுடன் நெருங்கிய தொடர்புள்ள நபராகவும், இஸ்லாத்தில் பற்றுள்ளவராகவும் இருந்துள்ளதுடன், தனது மனைவியின் பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்கு தீவிர முயற்சி செய்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் மூத்த சகோதரர் ஒருவர் (வயது 19) ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளதுடன், கஹவத்தையில் அமைந்துள்ள ரக்வானையை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனையும் இஸ்லாம் மதத்திற்கு மதமாறும்படியும், சுன்னத் செய்துகொள்ளும் படியும் சிறிய தந்தை தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வந்துள்ளார். எனினும் இதற்கு உடன்படாத மாணவன் பாடசாலைக்குக் கூட விபூதியுடனே செல்லக் கூடியவராக இருந்துள்ளார் என்பதை பாடசாலை வட்டாரங்களில் இருந்து உறுதி செய்துகொள்ள முடிகின்றது.

ரக்வானை புனித பரியோவான் (சென் ஜோன்ஸ்) கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவன் தன்மீது செய்யப்படும் நிர்ப்பந்தம் குறித்து பாடசாலையில் முறைப்பாடு செய்து இருக்கின்றான். அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் கமலேஸ்வரன் அவர்களும், சித்ராங்கனி என்ற ஆசிரியையும் குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்று 'மாணவன் சுயமாக தீர்மானிக்கும் வயதை அடைந்ததும் தன் மதம் தொடர்பாக தீர்மானிக்கட்டும், அதுவரை மதம் தொடர்பாக எந்த நிர்ப்பந்தங்களும் கொடுக்க வேண்டாம், கல்வியை தொடர அனுமதியுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளனர். இருந்தும் மதமாற்றம் மற்றும் சுன்னத் தொடர்பில் வீட்டில் தொடர்ந்தும் சச்சரவுகள் இடம்பெற்று வந்துள்ளதாக அயலவர்கள் மூலம் அறிய முடியுமாக உள்ளது. குறித்த தினமான 26.09.2018 அன்றும் வீட்டில் சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் மாலையில் மாணவனின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


தற்கொலை செய்துகொண்ட மாணவனின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் தெனியாயவில் உள்ள மாணவனின் பாட்டியின் வீட்டில் இடம்பெற்றுள்ளன. மாணவன் கொலை செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டு இருக்கலாம் என்கின்ற ஒரு சந்தேகம் தெரிவிக்கப்பட்ட பொழுதும், மரணம் மன அழுத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலை என்று போலீசார் பதிவு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


மாணவனுக்கு நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்ட பொழுது மன அழுத்தத்திற்கு உள்ளன மாணவன் அது குறித்து உறவினர்கள் உட்பட சிலருக்கு முறைப்பாடு செய்து இருக்கின்றான். அவர்களின் சாட்சிகள் அடங்கிய விடியோ பதிவுகள் ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், அமைச்சர் மனோ கணேஷன் மற்றும் மலையகத் தலைவர்கள் சிலருக்கும் வழங்கப்பட்டுள்ளன. விடியோக்களை பதிவு செய்தவர்கள், சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அவற்றை இப்பொழுதே பகிரங்கப் படுத்துவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றனர். அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணனின் இந்த உரை, அவர் விடியோக்களை பெற்ற பின்னர் நிகழ்த்தப்பட்டதாகும்.


குறிப்பு : அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தரமுடியும்.