இஸ்லாத்திற்குள் ஊடுருவிய சோவியத் உளவாளியின் இரகசியத் திட்டம்!இஸ்லாம் குறித்து எழுத ஆரம்பித்த பின்னர் அத்தஹியாத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் எனக்கு வகுப்பெடுக்க உள்பெட்டிக்கு வருவதால் தெரியாதவர்களிடம் இருந்து உள்பெட்டிக்கு வரும் தகவல்களில் அதிகமானவற்றை நான் பெரிதாக பொருட் படுத்துவதில்லை. (இத்தகைய நபர்கள் குறித்து தனியாக ஒரு பதிவும் இட்டு இருந்தேன் : https://www.facebook.com/rishvin/posts/10225123063806875 ) இந்த ஆக்கத்தின் நாயகன் முதலில் உள்பெட்டியை தட்டிய பொழுது எனக்கு அப்படித்தான் தோன்றியது, அதனால் அவரை முதலில் பொருட்படுத்தவில்லை. எனினும் அவர் விடுவதாக இல்லை, கடைசியில் சில பதில்களை அனுப்பினேன், என்னோடு பேச வேண்டும், முக்கியமான விடயங்கள் உள்ளன என்று மீண்டும் மீண்டும் உள்பெட்டியில் தட்டிக்கொண்டே இருந்தார், எனினும் நான் ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக எனக்குத் தெரிந்த, நான் மதிக்கும் ஒருவர் மூலம் தகவல் வந்தது. “நீங்கள் ஒரு தடவை அவருடன் பேசுங்கள், அவர் வில்லங்கம் பிடித்த ஒருவரோ, ‘அல்லாஹு அக்பர்’ பயங்கரவாதியோ, மூன்றாம் தர முஸ்லிமோ அல்ல, நல்ல மனிதர், இஸ்லாத்தைப் படித்தவர், எனது வார்த்தையில் நம்பிக்கை என்றால், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அவரிற்குக் கொடுக்கின்றேன்” என்பதே அந்த தகவல். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசி இலக்கம் அவரிற்கு வழங்கப்பட்டது. தான் குடும்பத்துடன் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும், தனது பணியிடம் நகரத்தில் இருந்து மிகவும் தூரத்தில் இருப்பதாகவும் கூறினார். வாழ்விடத்திற்குத் திரும்பியதும் விரைவில் அழைக்கின்றேன், பேசுவோம் என்றார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரிடம் இருந்து அழைப்பு வந்தது, அது நேரடி தொலைபேசி அழைப்பாக அமைந்திருந்தது.


எனது பதிவுகளை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கவனித்து வருவதாகவும், முஹம்மது நபியின் திருமணங்கள், பாலியல் வாழ்க்கை தொடர்பான எனது பதிவுகளுக்கு யாருமே உரிய பதிலை வழங்கவில்லை என்பதை தான் அவதானித்ததாகவும், சில உண்மைகளை வெளிப்படையாக பேச முன்வராத எவராலும் அவற்றிற்கு சிறிதளவாவது பொருந்தக் கூடிய பதில்களைக் கூட வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். சரியாக 53 நிமிடங்கள் பேசினார். கடைசி நிமிடங்களில் நான் கேட்ட கேள்வி ஒன்றிற்கு “இவற்றையெல்லாம் எழுதுவதாக இருந்தால் எனது பெயரையும் நான் இருக்கும் நாட்டையும் குறிப்பிடாமல் எழுதுங்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று பதில் சொன்னார்.

“நீங்கள் ஷியா வா, உங்கள் கருத்துக்களில் ஷியா வாடை அடிக்கின்றதே” என்று நான் இடையில் கேட்ட பொழுது, “உங்களையும் ஒரு காலத்தில் ஷியா என்றுதானே சொன்னார்கள், நமக்கு ஒன்று புரியவில்லை என்றால், பிடிக்கவில்லை என்றால் அல்லது அதனைப் பற்றி சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதனை சொல்பவரை ஏதாவது ஒரு விதமாக முத்திரை குத்தி திருப்திப் பட்டுக் கொள்வது வழமையாகிவிட்டது, ஆனால் அது சரியான அணுகுமுறை அல்ல. நான் ஷியா இல்லை, எனக்கு ஷியாக்களின் கொள்கையுடன் உடன்பாடு இல்லை, அவர்கள் வழி தவறிய கூட்டம் எனும் அறிஞர்களின் கருத்துடன் நான் ஓரளவு உடன்படுகின்றேன்” என்றார்.

சரி, அவர் சொன்னவற்றை, ஆதாவது அதிர்ச்சியூட்டும் அவரது கருத்துக்களை முடிந்தவரை சுருக்கமாக தருகின்றேன்.


“ஒரு கொள்கையை, ஒரு அதிகார மையத்தை பல்வேறு விதமாக அழிக்கலாம் என்றாலும் அவற்றில் இரண்டு முறைகள் மிக பிரபல்யமானவை. ஒன்று அதனை எதிர்த்து கடுமையாகப் போராடி வெற்றி பெற்று அழிப்பது, இன்னொன்று அதற்குள் ஊடுருவி அழிப்பது. இப்பொழுது நான் பேசுவது ஊடுருவி அழிக்கும் முறை பற்றியே. ஊடுருவிய பின்னர் ஒன்றை இரண்டு விதமாக அழிக்கலாம், ஒன்று அதனை முற்றாக இல்லாமலே செய்துவிடுவது, இன்னொன்று அதனை வெளிப்படையாக தெரியும் விதத்தில் அழிக்காமல் அதனை இன்னொன்றாக உருமாற்றம் செய்து அழிப்பது. கமால் அத்தாதுர்க், மிகையில் கொர்பசேவ் ஆகியோர் இஸ்லாமிய கிலாபத்தையும், சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசத்தையும் அழித்தது ஊடுருவி அழிப்பதன் முதலாவது வகையினை பயன்படுத்தி ஆகும். எத்தனையோ வல்லரசுகள், சிலுவைப் போர் விரார்கள் யுத்தங்கள் செய்தும், மோதியும் கூட இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்த முடியாமல் போனது, ஆனால் கமால் அத்தாதுர்க் இஸ்லாமிய கிலாபத்திற்குள் ஊடுருவினார், தன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினார், அதன் தலைமையை கையில் எடுக்கும் அளவுக்கு முன்னேறிய பின்னர் அதனை அழித்தார். அதே போன்று சோவியத் ரஷ்யாவை அழிக்க பல மேற்கத்தேய நாடுகள் திட்டங்கள் போட்டன, முயற்சிகள் செய்தன, யுத்தங்கள் செய்தன, எல்லாமே தோல்வியில் முடிந்தன. ஆனால் மிகையில் கொர்பசேவ் தேர்ந்தெடுத்ததோ வித்தியாசமான வழிமுறை. சோவியத் ரஷ்யாவின் தலைவராக வருகின்ற அளவுக்கு அவர் வளர்ந்தார். தலைமைப் பொறுப்பிற்கு வந்த பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தார், சோவியத் ஒன்றியத்தை உடைத்தார்.


ஊடுருவி உருமாற்றம் செய்வதற்கான உதாரணம் இன்றைய சீனா ஆகும். சீனா வீழ்த்தப்படவோ, புரட்சிக்கு உள்ளக்கப்படவோ இல்லை, ஆனால் அது சத்தமே இல்லாமல் கம்யூனிசத்தை ஓரம் கட்டிவிட்டது, மாவோ சேதுங் என்றால் அது யார் என்று கேட்கும் நிலையில் இருக்கின்றது அந்த நாடு. மாவோவிற்குப் பின்னர் கம்யூனிஸ சீனாவின் பதவிக்கு வந்தவர்கள் கம்யூனிசத்தை மெதுவாக உருமாற்றி விட்டார்கள், இன்று அந்த நாடு அன்று இருந்த அதே பெயரில் ஒரு முதலாளித்துவ வல்லரசாக மாறிவிட்டது. அதல்லாமல் எத்தனையோ அரசியல் கட்சிகள், அதே பெயரில், அதே சின்னத்துடன் இருக்க கொள்கைகள் எல்லாம் ஊடுருவியவர்களால் முற்றாக மாற்றப்பட்டிருக்கும் வரலாறுகள் நிறையவே உண்டு.
இப்படித்தான் இஸ்லாத்திற்குள்ளும் ஒரு சோவியத் ரஷ்ய இரகசிய உளவாளி நுழைந்து இஸ்லாத்தை உருமாற்ற முயன்று ஒருவர் பெரு வெற்றியும் கண்டுவிட்டார், இன்றைக்கு இருக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் ஆணிவேர் அவரைத் தவிர வேறு யாருமில்லை”


அது யார் என்று நான் கேட்டேன். அவர் சொன்ன பதில் கொஞ்சம் ஆச்சரியமானது, அதிர்ச்சியானதும் கூட. அவர் சொன்ன பதிலை தெரிந்துகொள்ளும் பொழுது, அது உங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம் அல்லது ‘இதென்ன பைத்தியகாரக் கதை’ என்று கோபம் கூட வரலாம், என்றாலும் தொடர்ந்தும் வாசியுங்கள்.


அவர் தொடர்ந்தார் “கொர்பசேவ் பிறந்த அதே சோவியத் ரஷ்ய மண்ணிலேதான் இந்த உளவாளியும் பிறந்தார். எத்தனையோ சஹாபாக்கள், தாபியீன்கள் செய்யாத வேலையை செய்வதற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து அரேபியா நோக்கி பெரிய ஒரு ரெடிமேட் பொய்யுடன் வந்தார். ‘முஹம்மது நபி எனது கனவில் வந்து ஹதீஸ்களை தொகுத்து நூலாக்க சொன்னார், ஆகவே அந்தப் பணியை செய்ய வந்தேன்’ என்று அவிழ்த்து விட்டார். முஹம்மது நபியைக் கண்டவர்களைக் கூட நேரில் காணாத ஒருவரான இவரின் கனவில் மட்டும் எதற்காக முஹம்மது நபி வர வேண்டும்? ஹதீஸ்களைத் தொகுத்து நூலாக்க வேண்டும் என்று முஹம்மது நபியோ, அல்லாஹ்வோ நாடி இருந்தால், நபி வாழ்ந்த காலத்திலேயே அதனை அவர் வாயால் சொல்ல வைத்திருக்க அல்லாஹ்வுக்குத் தெரியாதா? சரி, கனவில் வந்துதான் சொல்ல வேண்டும் என்றால், அன்றைக்கு மக்கா, மதீனாவில் வாழ்ந்த அரபி மொழியை தாய்மொழியாகக் கொண்ட சஹாபாக்களின் முதலாம், இரண்டாம் தலைமுறையினரிடம் அதனை கனவில் சொல்லி இருக்கலாமே? எதற்காக ஐந்து சங்கிலி கொண்ட அறிவிப்பாளர் தொடர் உருவாகும் வரை காத்திருந்து உஸ்பெகிஸ்தானில் பிறந்த குறித்த நபரிடம் மட்டும் கனவில் வந்து சொல்ல வேண்டும்? ஹதீஸ்களை தொகுத்து நூலாக்க வேண்டும் என்று முஹம்மது நபி கனவில் வந்து சொல்லியிருந்தால், சஹாபாக்களின் முதல் தலைமுறையினர் அதனை மிகச் சிறப்பாக செய்து இருந்திருக்க மாட்டார்களா? இன்னொரு முக்கிய விடயம், நபியை கனவில் காண முடியுமா என்பதே ஒரு சர்ச்சையான விடயம் அல்லவா? அப்படித்தான் ஒருவர் கனவில் கண்டதாக சொன்னாலும் அது அவரது தனிப்பட்ட விடயமாக இருக்க வேண்டுமே தவிர, அதனை வைத்து மார்க்க விடயங்களை தீர்மானிக்க அவருக்கு அதிகாரம் இல்லையே.”


நான் இடைக்கிடை கேட்ட கேள்விகள், முன்வைத்த வாதங்கள், மறுத்து விவாதித்த விடயங்களை எல்லாம் நீக்கிவிட்டு, அவர் முன்வைத்த முக்கிய கருத்துக்களை மட்டும் தொகுப்பாக தருகின்றேன் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவர் தொடர்ந்தார் “முஹம்மது நபி கனவில் வந்து சொன்னதால் தான் இதனை செய்கின்றேன் என்று மிகப் பெரிய பொய்யுடன் ஆரம்பித்தவர், தன் மீது சந்தேகத்தின் நிழல் கூட விழக்கூடாது என்பதற்காக ரெம்ப ஓவராகவே அக்டிங் பண்ணினார். தான் மிகவும் தூய்மையானவர், புனிதமானவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக செருப்புப் போடாத மனிதர், ஆட்டுக்கு உணவைக் காட்டி ஏமாற்றிய மனிதர் சொன்ன ஹதீஸ்களை எல்லாம் எழுதாமல் நிராகரித்தார். அவரது நாடகத்தின் மிகப்பெரிய நடிப்பு என்னவென்றால் ஒவ்வொரு ஹதீஸை எழுதும் முன்னரும் கஃபாவில் இரண்டு ரக்கத் தொழுது படம் காட்டினார், ஆனால் இப்படி ஒரு வழிமுறையை முஹம்மது நபி தனது வழிமுறையில் காட்டித்தரவுமில்லை. சஹாப்பாக்களும் கஃபாவில் இப்படியாக அடிக்கொரு தடவை இரண்டு ரக்காத் தொழுதுகொண்டு இருக்கவுமில்லை

இவற்றையெல்லாம் விட அதிர்ச்சியான செய்தி உங்களுக்குத் தெரியுமா? இவ்வளவு ஸீன் போட்டு பில்டப் பண்ணினாலும் அந்த புகாரி எழுதிய சஹிஹ் அல் புகாரி நூலின் ஒரிஜினல் பிரதி உலகத்தில் எங்கேயும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சஹிஹ் அல் புகாரிக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட முஹம்மது நபியின் கடிதங்கள் மற்றும் கலீபா உஸ்மான் நூலுருவாக்கிய குர்ஆன் பிரதிகள் கூட இன்னுமும் பாதுகாப்பாக இருக்கும் பொழுது புகாரியின் புத்தகம் மட்டும் எப்படி மாயமாகிப் போனது? இது ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயம் அல்லவா?


மக்காவிற்கும், மதீனாவிற்கும் ஒரு இரகசிய திட்டத்துடன் வந்த உளவாளியான புகாரி, தனது திட்டம் நிறைவேறியதும் தனது நாட்டிற்கே திரும்பிவிட்டார். நபி மீது நேசம் கொண்டு மதீனாவிலோ, இஸ்லாம் மீது பற்றுக் கொண்டு மக்காவிலோ அவர் வாழவில்லை. அவர் ஒரு திட்டத்துடன் வந்தார், திட்டத்தை நிறைவேற்றியதும் திரும்பிச் சென்றார். இன்று இஸ்லாத்தில் இருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும், நபிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் மூல காரணம் இந்த உளவாளியான புகாரியே ஆகும். மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களும் இவர் காட்டிய வழியில் தான் உருவாகின, ஆகவே அவற்றிலும் இவரது சதியின் பாதிப்புகள் தொகுப்பாளர்களால் உணராமுடியாத வகையில் உடுருவி விட்டன.”


அவர் தொடர்ந்தார்.......
“உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கான பதில்களும் இதிலேயே உள்ளன. முஹம்மது நபி பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியாத ஒருவர் அல்ல, கதீஜா அவர்களுடன் அவருக்கு பல குழந்தைகள் பிறந்தன. நபிகளார் மரணிக்க சொற்ப காலத்திற்கு முன்னர் மரியத்துள் கிப்தியா எனும் அடிமையுடன் அவருக்கு இப்ராஹீம் என்ற மகன் பிறந்ததாக எழுதி வைத்து இருக்கின்றார்கள். ஆக அவர் இளமையிலும் தந்தை ஆகினார், முதுமையிலும் தந்தை ஆகினார் என்றால் இடைப்பட்ட காலத்தில் ஏன் ஒரு தடவை கூட தந்தை ஆகவில்லை? அவர் 11 மனைவிகளை வைத்து இருந்தார் என்றால் ஏன் அவர்களில் ஒருத்திக்குக் கூட ஒரு குழந்தையும் பிறக்கவில்லை? இதிலே எதோ பாரிய மர்மம் இருப்பது புரியவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள், உண்மையில் முஹம்மது நபிக்கு ஆயிஷா என்ற ஒரு சிறுமி மனைவியாக இருக்கவில்லை என்கின்ற உண்மை பல உலமாக்களுக்கே தெரியாது. அது மட்டுமல்ல, முஹம்மது நபிக்கு இன்னும் பல மனைவிகளும் இருக்கவில்லை, இவை அனைத்துமே புகாரியால் இட்டுக்கட்டப்பட்டவை. ஆயிஷா என்று ஒருவரை முஹம்மது நபி திருமணம் செய்யவே இல்லை. இன்னும் பாருங்கள், இப்ராஹீம் என்ற மகன் பிறந்த கதையில் ஏன் அந்த மகன் சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாக எழுதி வைத்து இருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்த மகன் ஏன் பாத்திமா போன்று வளரவில்லை, குடும்பம் குழந்தைகள் என்று வாழவில்லை?


இவர்கள் சொல்கின்ற முஹம்மது நபியின் மனைவிகளில் பத்துப் பெண்களுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத கோளாறு உள்ளவர்களாக (அவர் அதனை ஒற்றை வார்த்தையில் சொன்னார், நான் அந்த வார்த்தையைத் தவிர்த்து விட்டேன்) இருக்க முடியுமா? மரியத்துள் கிப்தியா கதையில் போல மற்ற மனைவிகளுக்கும் குழந்தை பிறந்து சிறிய வயதில் இறந்துவிட்டதாக கதை விட முடியாது என்பதால் அந்த இடத்தை வெறுமையாகவே விட்டு விட்டார்கள். உண்மையில் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று இருந்தால், அந்தக் குழந்தைகள் பாத்திமா வாழ்ந்தது போன்று வாழ்ந்து இருப்பார்கள், பாத்திமா போன்று திருமணம் செய்து பிள்ளைகளை பெற்று இருப்பார்கள், வரலாற்றிலும் ஆதாரம் இருந்து இருக்கும், ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லையே. ஆகவே உண்மையிலேயே முஹம்மது நபி அப்படியாக எந்தப் பெண்களையும் திருமணம் செய்யவில்லை. அதே போன்று முஹம்மது நபி யுத்தம் செய்ததாக, கொலைகள் செய்ததாக, கொள்ளை அடித்ததாக, அடிமைகளை விற்க சொன்னதாக வருகின்ற அனைத்துமே பொய்கள். இவை எல்லாமே புகாரியின் உருவாக்கங்கள், அல்லது பின்வந்தவர்கள் விஷயம் தெரியாமல் புகாரியின் கையிற்றை விழுங்கி எழுதியவை.புகாரி இஸ்லாத்திற்குள் ஊடுருவிய உளவாளியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சொன்ன பொய்கள், காட்டிய ஓவர் ஸீன், ஒரிஜினல் புத்தகமே இல்லாமல் இருப்பது, நபியை கேவலப்படுத்தும் விதமாக அவர் எழுதியுள்ள ஹதீஸ்கள் போன்றவற்றை விட வேறென்ன சான்று வேண்டும்? எந்த மெளலவியிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கு கடைசிவரை சரியான, உண்மையான, நேர்மையான பதில் கிடைக்காது என்பதை இப்பொழுதே நான் அடித்து சொல்கின்றேன், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.”

இவ்வளவுதான் அவருடன் நடந்த உரையாடலின் சுருக்கம்.
ஆக்கத்தின் நாயகன் இவ்வளவும் சொன்ன பின்னர் சும்மா இருக்க முடியுமா, ஆகவே நானும் எனது பங்கிற்கு நானும் சற்று தேடிப் பார்த்தேன், அதில் கிடைத்த தகவல்கள் எனக்கு இன்னும் ஆச்சரியமூட்டின. புகாரி அவர்கள் பிற்காலத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டதாகவும், முஸ்லிம் மக்கள் அவரை நடத்திய விதம் குறித்து அவர் வெறுப்படைந்து முஸ்லிம் மக்களிடம் இருந்து விலகி கர்தனக் என்ற ஒரு மிகச் சிறிய கிராமத்திற்கு சென்று அவர் மக்கள் தொடர்பின்றி வாழ்ந்து வந்த நிலையில் மரணித்ததார் என்றும் அறிய முடிந்தது. அவர் மரணிப்பதற்கு முந்திய மாதமான ரமளானில் "யா அல்லாஹ் இந்த உலகு என்னை அவமானப் படுத்துகின்றது, துன்புறுத்துகின்றது, நான் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றேன், எனக்கு மோசமான பட்டப் பெயர்களை கூறுகின்றார்கள், ஆகவே நீ என்னை மரணிக்க செய்வாயாக" என்று விரக்தியில் துஆ கேட்டுவந்தார் என்றும் அறிய முடிகின்றது. அவர் 62 வயதில் மரணித்த பொழுது ஒரு சில உறவினர்கள் மட்டுமே அவருடன் இருந்ததாகவும், மக்கள் யாருமே அவருடன் இருக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது. முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற நோன்புப் பெருநாள் தினத்திலேயே அவர் மரணித்து இருக்கின்றார் என்பது கூடுதல் தகவல்.

புகாரி ஆரம்பித்து வைத்த கனவுக் கதை அவர் மரணத்துடன் மீண்டும் இன்னொரு பரிணாமத்தில் உயிர்பெற்று இருந்ததைக் காண முடிந்தது. அவர் மரணித்த இரவு அவரது சகோதரன் ஒரு கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் முஹம்மது நபி தனது தோழர்களுடன் (சஹாபாக்களுடன்) நின்ற நிலையில் காத்திருந்ததாகவும், "நபியே யாருக்காக காத்து நிற்கின்றீர்கள்" என்று சஹாபாக்கள் கேட்டதாகவும், அதற்கு முஹம்மது நபி "நாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் அல் புகாரிக்காக காத்து நிற்கின்றோம்" என்று பதில் சொன்னதாகவும் உள்ளது. புகாரியின் கனவில் முஹம்மது நபி வந்தார் என்பதாவது ஓரளவு பரவாயில்லை, ஆனால் அவரது சகோதரரின் கனவிலும் முஹம்மது நபி வந்தார் என்று சொன்ன பிறகு, இரண்டையும் ஒன்றாக சேர்த்து, ஒரு முஸ்லிமாக இருந்து பார்த்தாலும் கூட, இந்தக் கனவுக் கதைகள் எல்லாம் நம்பக் கூடிய விதமாக இல்லை என்றுதானே தோன்றுகின்றது. நான் முஸ்லிமாக இருந்த காலத்தில் புகாரியின் கனவுக் கதையை சந்தேகித்தேன், அப்பொழுது மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் சொன்னார், "இமாம் புகாரி இந்த விடயத்தில் பொய் சொன்னார் என்று நீங்கள் சந்தேகித்தால், முழு புகாரி கிரந்தத்தையும் நிராகரிக்க வேண்டி வந்துவிடும், ஆகவே கவனமாக இருங்கள்" என்று, அதனாலே அந்த சந்தேகத்தை ஒதுக்கி வைத்து இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் அவரது தம்பி கண்ட கனவுக் கதை பற்றி எனக்குத் தெரிந்து இருக்கவில்லை.
இவ்வளவையும் வாசித்து விட்டீர்கள், உங்களுக்கும் தேடிப் பார்க்க, தெரியாத விடயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன. புகாரியின் வாழ்க்கை, மரணம், ஹதீஸ் தொகுப்பு என்று எல்லாமே மர்மம் நிறைந்தவையாகவே உள்ளன. சரி, இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? புகாரி உண்மையில் ஒரு உளவாளி என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இல்லை இது பொய் என்று உங்களை நீங்களே சமாதனம் செய்து கொள்கின்றீர்களா?

மேற்படி விடயங்கள் தொடர்பாக எனது பார்வை என்ன என்பதை, பதிவின் முக்கியத்துவம் கருதி நான் இங்கே சொல்லவில்லை, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

குறிப்பு : இந்த பதிவில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்துக்கள் அல்ல என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.