கோயில் காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன் - ஹிஸ்புல்லாஹ்

"சவக்காலை (மயானம்) இருந்த காணியை அபகரித்து மர்கஸ் (பள்ளிவாசல்) கட்டினேன். ஓட்டமாவடியில் கோயில் இருந்த காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன்."
- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர்)

முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ்களின் வெறுப்பு, இந்துத்துவா சக்திகளின் ஊடுருவல் மற்றும் சதித் திட்டங்கள் போன்றவை கிழக்கில் ஒருபுறம் இருந்தாலும் கூட, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாதாரண தமிழர்கள் கூட போராடுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்பதை நீதமாக சிந்திக்கும் எந்த மனிதனும், எந்த முஸ்லிமும் மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஹிஸ்புல்லாஹ்வின் வாக்குமூலம்

ஹிஸ்புல்லாஹ் மயானத்தை அபகரித்து மார்கஸ் கட்டினார் என்பதும், கோயில் இருந்த காணியை அபகரித்து பள்ளிவாசலுக்குக் கொடுத்தார் என்பதும் அவர் மீது சுமத்தப்படும் வெறும் குற்றச்சட்டுக்களோ, அல்லது யாரோ ஒரு பத்திரிகையாளர் எங்கேயோ எழுதிய செய்திகளோ அல்ல, மாறாக தானே மறுக்க முடியாத படிக்கு ஹிஸ்புல்லாஹ்வே வீடியோ வாக்குமூலம் வழங்கிய ஆதாரமுள்ள விடயங்கள் ஆகும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான இரண்டு நிகழ்வுகள் கடந்த ஒரு வார காலத்திற்குள் நடை பெற்று இருப்பது உண்மையாக உள்ள போதும், கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமனம் செய்யப்பட்டிருப்பது என்பது எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்றாகும். ஆகவே ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை சாதாரண தமிழர்கள் எதிர்ப்பதை முஸ்லிம்களோ, ஏனையவர்களோ பிழையாகப் பார்ப்பதும், சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அதற்கு வேறு அர்த்தங்கள் கற்பிக்க முயவதும் தவறாகும். மயான, கோயில் காணிகளை திருடி மார்கஸ் கட்டினேன், பள்ளிவாசலுக்குக் கொடுத்தேன் என்று வாக்குமூலம் வழங்குகின்ற ஒருவர் எவ்வகையிலும் ஆளுநராக நியமிக்கப்பட தகுதியற்றவர் ஆவார், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண சபை செயற்படாத / இல்லாத இந்த காலப்பகுதியில் மாகாண சபையின் அதிகாரம் ஆளுநர் வசம் இருக்கப்போகும் நிலையில், ஹிஸ்புல்லாஹ் போன்ற ஒருவர் ஆளுநராக இருப்பதை ஆபத்தானதாகவே தமிழர்கள் நோக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உடனடியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பதவி விலகுவதுடன், அல்லது பதவி நீக்கப்படுவதுடன், அபகரிக்கப்பட்ட மயான, கோயில் காணிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கப்படல் வேண்டும். [காணிகளை அபகரிப்பது குறித்து முஹம்மது நபி கூட கடுமையாக எச்சரிக்கை செய்து இருப்பதை முஸ்லிம்கள் அறியாமல் இருக்க முடியாது. யார் ஒருவரது நிலத்தில் இருந்து ஒரு சாண் அளவேனும் அநியாயமாக அபகரிக்கின்றாரோ, மறுமை நாளில் அவரது கழுத்தில் ஏழு பூமிகள் வளையமாக அணிவிக்கப்படும் ஆதாரம் : சஹிஹ் புஹாரி. (ஏழு பூமிகள் கழுத்தில் அணிவிக்கப்படும் என்பதை எப்படி என்று இந்த இடத்தில் ஆராயாமல், குற்றத்தின் கடுமையை குறிக்க பயன்படுத்திய வார்த்தைகளாகக் கருதி கடந்து போகவே விரும்புகின்றேன்.) ] அத்துடன் இரு தரப்புக்களும் தாம் அபகரித்த காணிகள், நிலங்களை தாமாகவே முன்வந்து திருப்பி ஒப்படைப்பதுடன், தம்மால் நடந்த அநீதங்கள் அனைத்திற்கும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுடன், இனங்களுக்கு இடையில் பகைமையை தூண்டும், காணிகளை அபகரிக்க துணை போன, துணை போகின்ற பிரதிநிதிகளை முற்றாகப் புறக்கணித்து தமக்கான புதிய, பொருத்தமான தலைமைகளை, பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ள முயல்வதே கிழக்கில் மனித வாழ்வு மகிழ்ச்சியாக அமைவதற்கான ஆரோக்கியமான முதற்படியாக அமையும்.

-றிஷ்வின் இஸ்மத்
11.01.2019